டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத அமைப்புகள் கூடத்தான் இந்தியா என்ற பெயரை வைத்துள்ளதாக கிண்டலடித்துள்ளதற்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுகுறித்து இன்று காலை நடந்த பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடுமையாக விமர்சித்திருந்தார். இது உருப்படாத கூட்டணி. கடைசி வரை இவர்கள் எதிர்க்கட்சிகளாகத்தான் இருக்கப் போகிறார்கள் என்று விமர்சித்த பிரதமர் மோடி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போல இந்த இந்தியா கூட்டணி என்றும் காட்டமாக சாடியுள்ளார்.
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இவ்வாறு விமர்சித்ததற்கு தற்போது ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், உங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லிங்கங்க மிஸ்டர் மோடி. நாங்கள்தான் இந்தியா. நாங்கள் மணிப்பூரை ஆற்றுப்படுத்துவோம், குணமாக்குவோம், ஒவ்வொரு பெண், குழந்தையின் கண்ணீரைத் துடைப்போம். மணிப்பூர் மக்களிடையே மீண்டும் அன்பையும், அமைதியையும் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியாவின் மகாத்மியத்தை நிறுவுவோம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
இந்தியா கூட்டணி உருவான அன்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தின்போதே தனது கூட்டணிக்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்திருந்தார் பிரதமர் மோடி. இந்த நிலையில் தற்போது தீவிரவாத இயக்கங்கள் கூடத்தான் இந்தியா என்ற பெயரை வைத்திருப்பதாக அவர் கூறியிருப்பது இந்தியா கூட்டணி குறித்து பாஜக தீவிர கோபத்தில் இருப்பதன் வெளிப்பாடே என்று அரசியல் விமர்சர்கள் கருதுகிறார்கள்.
மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயுள்ளன. ஒரு அலுவல் கூட நடக்கவில்லை. மணிப்பூர் குறித்து முழுமையான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி துமளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}