பாகு, அஜர்பைஜான்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், உலகின் நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சன் இடையிலான மோதல் டை பிரேக்கருக்கு நகர்ந்துள்ளது.
இந்த இருவரும் ஆடிய முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் பிரக்ஞானந்தா மீதான நம்பிக்கை அதிகரித்திருந்தது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா பல வரலாறுகளைப் படைப்பார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் உலக சாம்பியன் ஆன சாதனைப் பெருமை அவருக்குக் கிடைக்கும். அதேபோல இந்தியாவைச் சேர்ந்த 2வது உலக சாம்பியனாக அவர் உருவெடுப்பார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையைச் செய்துள்ளார்.
நேற்று வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இன்று 2வது சுற்று ஆட்டத்தில் கருப்பு நிற காயுடன் ஆடினார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுற்றை டிரா செய்ய கார்ல்சன் முன்வந்தார். இதையடுத்து 2வது சுற்று டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பிரக்ஞானந்தா குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், நான் வென்றது போலவே நிச்சயம் பிரக்ஞானந்தாவும் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இது 2 சுற்று ஆட்டம்தான். முதல் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 2வது சுற்றில் வெல்பவர் சாம்பியன் ஆவார். 2வது சுற்றும் டிரா ஆனால் டை பிரேக்கர் வைக்கப்படும். பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் காலெடுத்து வைக்கும் தருணத்தில் நாம் பிரக்ஞானந்தாவின் வெற்றியையும் கொண்டாடப் போகிறோம் என்று கூறியிருந்தார் ஆனந்த்.
தற்போது 2வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளதால் நாளை டை பிரேக்கர் சுற்று நடைபெறும். இதில் யார் வெல்கிறார்களோ அவர்களே சாம்பியன் ஆவார்.
2வது சுற்று குறித்து மாக்னஸ் கார்ல்சன் கூறுகையில், போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு, சர்வதேச செஸ் சம்மேளனத்திற்கு, எனது டாக்டர்களுக்கு நன்றிகள். என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். நேற்றை விட இன்று சிறப்பாக உணர்கிறேன். ஆனால் என்னால் முழு எனர்ஜியுடன் இருப்பதாக உணரவில்லை. நல்ல ஓய்வுக்குப் பின்னர் நாளை சிறப்பாக ஆடுவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
{{comments.comment}}