சென்னை: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இனி அதிமுக செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சிக்கு மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொடுத்து இத்தனை காலமாகியும் இன்னும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் மக்களின் மிக முக்கிய அதிருப்தியாக உள்ளதா எடப்பாடி இன்னும் உணரவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுடன் நடந்த மோதலில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போனார்.. அதற்குப் பின்னர் தானே முதல்வராக முயன்றார் சசிகலா. ஆனால் அதற்குள் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை உறுதியானதால் அவரது ஆசை நிராசையாகி சிறைக்குப் போய் விட்டார்.
போவதற்கு முன்பு அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டுப் போனார். அன்று பதவியில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தடுத்து நடந்த பல்வேறு சவால்களை திறமையாக சமாளித்து முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்து முடித்தார். அவர் தனது பதவியை முழுமையாக நிறைவு செய்ய பாஜகவின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
ஆனால் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. வெறும் 75 சீட்டுகளோடு அதிமுக முடங்கிப் போனது. ஆனாலும் ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல், எடப்பாடி -ஓபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்தித்த அதிமுக, அதிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் தேர்தலை சந்தித்த அதிமுக,75 இடங்களைப் பெற்றதே மிகப் பெரிய சாதனைதான்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக 2021ம் ஆண்டே மக்கள் அதிமுகவைத் தேர்வு செய்து விட்டனர். ஆனால் அதன் பிறகு ஒரு பிரதான எதிர்க்கட்சியாக என்ன செய்ய வேண்டுமோ அதை அதிமுக செய்யவில்லை, செய்யத் தவறி விட்டது என்பதே உண்மை. அந்த வேலயை பாஜக தான் செய்து வந்தது. எல்லாப் பிரச்சினைகளையும் கையில் எடுத்தது, எல்லாவற்றையும் பிரச்சினையாக்கியது, எல்லாவற்றுக்காகவும் போராட்டங்களை நடத்தியது. திமுக அரசுக்கு தினசரி தலைவலியைக் கொடுத்த கட்சி என்றால் அது பிரதான எதிர்க்கட்சி அதிமுக அல்ல.. மாறாக 4 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள பாஜகதான்.
இப்படி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுத்தும் கூட, அதை நிறைவேற்றத் தவறிய, அதிலிருந்து விலகிப் போய் விட்ட அதிமுக இப்போது பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அவரை கேலிப் பொருளாக மாற்றியுள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இத்தனை தாமதமாகவா எடப்பாடி தனது பொறுப்பை உணர்வார் என்றும் கேள்விகள் எழுகின்றன.
மக்கள் அளித்த தீர்ப்பை அதிமுக மதிக்கவில்லை. மாறாக தங்களுக்குள் தலைமைப் பதவிக்காக அடித்துக் கொண்டதுதான் மிச்சம். கடந்த 2 ஆண்டுகளாக இதுதான் நடந்து வந்தது. இப்போது சண்டைகள் எல்லாம் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் ஞாபகம் வந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. இப்போதாவது அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்பதை எடப்பாடி உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்தான்.. இனியாவது ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.
{{comments.comment}}