ஒடிஷாவை மீட்ட வி.கார்த்திகேய பாண்டியன்.. முதல்வராகி புதிய வரலாறு படைப்பாரா?

Oct 25, 2023,11:18 AM IST

புவனேஸ்வர்:  வி.கார்த்திகேய பாண்டியன்... சுருக்கமாக வி.கே. பாண்டியன்.. ஒடிஷா மாநிலத்தின் ஹாட்டான ஒரு நபராக பல காலமாக வலம் வருகிறார் வி.கே. பாண்டியன்.. அவரது ஒவ்வொரு உயர்வும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.


மன்னராட்சி நடந்தபோதெல்லாம் மன்னர்களுக்கு மதியூக மந்திரிகள் பலர் இருந்தாலும் கூட செயல்படுத்தும் தளபதிகள் தான் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட சரியான தளபதிகளைக் கொண்டிருந்த மன்னர்கள்தான் பல சாதனைகளையும், அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளனர். இதுதான் வரலாறு நெடுகிலும் நாம் கண்டது.




மன்னராட்சி முடிந்து இப்போது மக்களாட்சி நடக்கிறது. முதல்வர்கள் வந்து விட்டார்கள்.. பிரதமர்கள் வந்து விட்டார்கள்.. ஆனால் இவர்களுக்கெல்லாம் மூளை போல செயல்படுவது யாராக இருக்கும் என்றால் நிச்சயம் அதிகாரிகளாகத்தான் இருக்க முடியும்..  அதிகாரிகள்தான் உண்மையான அரசாங்கம்.. நல்ல அதிகாரிகள் இருந்து, அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடிந்தால் அந்த அரசு நிச்சயம் பல அற்புதங்களைப் படைக்க முடியும்.. இதையும் நாம் வரலாற்றில் நிறையவே பார்த்திருக்கிறோம்.


அதனால்தான் சொல்வார்கள்.. அதிகாரிகள் சரியாக வேலை செய்தால் அரசாங்கம் சரியாக செயல்படும் என்று. அந்த அடிப்படையில்தான் நாம் ஒடிஷா மாநிலத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. அங்கு முதல்வராக பல காலமாக இருந்து வருகிறார் நவீன் பட்நாயக். இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் எப்போதும் முக்கிய இடத்தில் இருப்பவர் நவீன் பட்நாயக். அவர் மீது எந்தப் புகாரும் கிடையாது. மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலும் அந்த ஆட்சிக்கு ஆதரவாக இருப்பார்... அதாவது எனக்கு கட்சி முக்கியமில்லை.. மத்தியில் உள்ள ஆட்சிதான் முக்கியம் என்பது அவரது நிலைப்பாடு.




மத்திய அரசுடன் எந்த மோதல் போக்கிலும் ஒடிஷா ஈடுபடுவதில்லை. நாம் உண்டு நம் வேலை உண்டு என்று மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் நவீன் பட்நாயக். ஒடிஷாவில் பல பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கொண்டு வந்து சாதனை படைத்தவர். நக்சலைட் நடமாட்டத்தை முழுமையாக முடக்கிப் போட்டவர். இப்படி பல சாதனைகளை அவர் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். இவரது இத்தனை சாதனைகளுக்கும் பின்னால் நிற்பவர்தான் வி.கே.பாண்டியன்.


நவீன் பட்நாயக்கின் கனவுகளை நனவாக்கும் அதிகாரியாக, அந்த கனவுகளை நிஜமாக்கும் முயற்சிகளுக்கு வடிவம் கொடுக்கும் கருவியாக இருப்பவர்தான் வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட பாண்டியன், இன்று ஒடிஷாவில் முதல்வருக்கு அடுத்து மிக மிக முக்கியமான நபராக, மக்களாலும் நேசிக்கப்படும் நபராக உருவெடுத்து விஸ்வரூபம் காட்டி நிற்கிறார்.


யார் இந்த வி.கே. பாண்டியன்?


முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருந்தவர் பியாரிமோகன் மொஹபத்ரா. இவர் கிட்டத்தட்ட நவீன் பட்நாயக்கின் நிழல் போல இருந்தவர்.  ஒடிஷா மாநில அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டவர் மொஹபத்ரா. ஆனால் பட்நாயக்குக்கும், மொஹபத்ராவுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்த சமயத்தில்தான் வி.கே. பாண்டியன், பட்நாயக்கின் பார்வையில் படுகிறார்.


இதற்கும் ஒரு பின்னணி உண்டு..!




2012ம் ஆண்டு நவீன் பட்நாயக் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தபோது தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி எடுத்தார் மொஹபத்ரா. இது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த நவீன் பட்நாயக், மொஹபத்ராவை கட்சியை விட்டு நீக்கினார். இந்த நேரத்தில்தான் கட்சியில் பிளவு ஏற்படாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற உதவினார் வி.கே.பாண்டியன். இது நவீன் பட்நாயக்கை பெரிதும் கவரவே அன்று முதல் நவீன் பட்நாயக்கின் முக்கிய ஆலோசகராக மாறி விட்டார் பாண்டியன். அதன் பிறகு வி.கே.பாண்டியனின் காலம் தொடங்கியது. இன்று வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் ஓஹோவென போய்க் கொண்டுள்ளது.


2002ம் ஆண்டு சப் கலெக்டராக பணியைத் தொடங்கிய பாண்டியன், ஒடிஷா மாநில பொதுப்பணித்துறையின் சீரமைப்புப் பணிகளுக்காக குடியரசுத் தலைவர் விருது வாங்கினார். இன்று வரை ஒடிஷா மாநில பொதுப் பணித்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தேசிய அளவில் ஒடிஷா மாநில பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் பிரபலமாக உள்ளன. நாடு முழுவதும் இதைப் பின்பற்றி பல மாநிலங்களில் சீரமைப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.


2005ம் ஆண்டு இவர் மயூர்பாஞ்ச் கலெக்டராக இருந்தபோது நக்சலைட்டுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அதை எப்படி எடுத்தார் என்றால் நக்சலைட்டுகளின் போக்கை தவிடு பொடியாக்க அனைவரையும் ஒருங்கிணைத்த நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தினார். இதற்கு நல்ல ஆதரவும், பலனும் கிடைத்தது.  இதனால் நக்சலிசம் பரவுவது அடியோடு குறைந்தது.  அதாவது ரத்தம் சிந்தாமல் கிடைத்த வெற்றியாக  இது பார்க்கப்படுகிறது. கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது எய்ட்ஸ் ஒழிப்பு தொடர்பாக இவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக தேசிய விருது கிடைத்தது.




இவர் கலெக்டராக இருந்தபோது கஞ்சம் மாவட்டம் நாட்டிலேயே சிறந்த மாவட்டம் என்று 2 முறை தேசிய விருது பெற்றது. தனது பதவிக்காலத்தின்போது ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும் பெரும் மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் பாண்டியன். இவர் வாங்காத விருதுகளே இல்லை.


2019ம் ஆண்டு நவீன் பட்நாயக் 5வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார் பாண்டியன். ஒடிஷா மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பை பாண்டியனிடம் கொடுத்தார் பட்நாயக். இந்தத் திட்டம் "5டி" என்று அழைக்கப்படுகிறது. அதாவது,  Transparency, Teamwork, Technology, Time and  Transformation. இந்தத் திட்டத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார் பாண்டியன். இது உண்மையில் பாண்டியன் வகுத்த திட்டம்தான்.


கிட்டத்தட்ட ஒரு நிழல் முதல்வர் போலவே செயல்பட்டு வருகிறார் பாண்டியன். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் இல்லை. ஆனால் இவரது செயல்பாடுகள் மக்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக முதல்வர் பட்நாயக்கின் முழு ஆதரவுடன் வலம் வருகிறார் பாண்டியன். இவர் வகுத்த பல திட்டங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.


மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் பாண்டியன். அடித்தட்டு மக்கள் அதிக பலன்களை அடைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். இவரது வேலையாற்றும் ஸ்டைலும் அதிரடியாகவே இருக்கும். மக்களுக்காகத்தான் நாம் என்று அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். விடாமல் வேலை வாங்குவார். சரியாக வேலை பார்க்காவிட்டால் கடும் நடவடிக்கைதான்.


இந்த நலையில்தான்  தற்போது அரசுப் பணியிலிருந்து விஆர்எஸ் வாங்கி விட்டார் பாண்டியன். அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பைக் கொடுத்துள்ளார் பட்நாயக். காலப் போக்கில் பாண்டியன் பிஜூ ஜனதாதளத்தில் இணைந்து செயல்படக் கூடும் என்றும் சொல்கிறார்கள். காலம் சரியான கணக்குப் போட்டால், மக்கள் ஆதரவும் கிடைத்தால், நிச்சயம் பாண்டியன் நாளை ஒடிஷா மாநிலத்தின் முதல்வராகவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தத் திட்டத்துடன்தான் பாண்டியனை, பட்நாயக் மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.


பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஒடிஷாவை மீட்ட பாண்டியன்.. நாளை அதை வென்று அதன் முதல்வர் ஆவாரா என்று!

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்