சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 5 முனைப் போட்டி நிலவும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இப்படி வாக்குகள் பிரியவுள்ளதால் அது திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டு அரசியல் களம் வித்தியாசமானது. இங்கு தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் மிக மிக கடினம். இதை பல காலமாக உணர்ந்துதான் முக்கிய கட்சிகளான திமுகவும் சரி, அதிமுகவும் சரி வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கின்றன. தொடர்ந்து மாறி மாறி ஆட்சியிலும் அமருகின்றன. இடையில் ஒரே ஒரு முறைதான் அதிமுக ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்டு வெற்றியும் பெற்று அசரடித்தது. அப்போது 6 முனைப் போட்டி நிலவியது. அதில் ஜெயலலிதா ஸ்கோர் செய்தார் என்பதுதான் விசேஷமானது. ஆனால் அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி யாருமே தனித்து நிற்பது பற்றி யோசிப்பது கூட கிடையாது.
அதேபோல 2021 சட்டசபைத் தேர்தலிலும் 5 முனைப் போட்டி நிலவியது. அதில் திமுக ஸ்கோர் செய்து பத்து வருடமாக இழந்திருந்த ஆட்சியை மீண்டும் பெற்று முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்.
திராவிக் கட்சிகளின் தாலாட்டில் தமிழ்நாடு
1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த பிறகு திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. அதாவது திராவிடக் கட்சிகள் வசம்தான் தமிழ்நாடு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதனால் என்ன பலன் கிடைத்தது என்றால்.. தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாநிலமாக, முற்போக்கு சிந்தனைகள் கொண்டதாக, சமூக நீதியில் செழித்தோங்கும் மாநிலமாக, கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி என எல்லாத் துறைகளிலும் தலை சிறந்து விளங்கும் மாநிலமாக விளங்குகிறது.
இப்படிப்பட்ட நிலையை மாற்றத்தான் இன்று பல கட்சிகள் கடுமையாக முயல்கின்றன. அதாவது திராவிடக் கட்சிகள் வசமிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். இது இப்போது என்றில்லை.. நீண்ட காலமாகவே நடந்து வரும் முயற்சிதான். ஆனால் இதுவரை அந்த முயற்சிக்குப் பெரிய அளவில் பலன் கிடைத்ததில்லை. இந்த முயற்சியில் முன்னோடியாக நிற்பது பாஜகதான். ஆனால் பாஜகவால் இதுவரை பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருப்பதுதான் நிதர்சனம். சட்டசபையில் கூட ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் அதற்குப் பிரதிநிதித்துவம் உள்ளது. நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை கடந்த 2 தேர்தல்களாக அக்கட்சிக்கு வெற்றி கிட்டவில்லை.
பாஜகவின் பகீரத முயற்சிகள்
வருகிற 2026 சட்டசபைத் தேர்தலை மிகப் பெரிய அளவில் பாஜக எதிர்நோக்கியுள்ளது. இத்தேர்தலில் திமுகவை நிச்சயம் சாய்த்து விட முடியும் என்று அது திடமாக நம்புகிறது. இதற்கு என்ன காரணம் என்றால் விஜய்யின் வருகையை அது நம்புகிறது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியின் வாக்குப் பிரிப்பும் தனக்கு சாதமகமாக இருக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை. ஆனால் உண்மை நிலவரம் என்ன?
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வலுவான நிலையில் களம் காணக் காத்திருக்கிறது. அந்தக் கூட்டணியில் இதுவரை எந்த விரிசலும் இல்லை, பூசலும் இல்லை.. அப்படியே மன வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட கூட்டணி முறியாது என்று தனது பிறந்த நாள் விழா மேடையில் வைத்து அதிரடியாக அறிவித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், திமுகவைப் பொறுத்தவரை கூட்டணியைக் காக்க எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி வரும், விட்டுத் தரும், நீக்குப் போக்காக நடந்து கொள்ளும் என்பதால் திமுக கூட்டணி முறியும் என்ற பேச்சுக்கு அத்தனை பலம் இல்லை என்பதே உண்மை.
பலவீனமான அதிமுக
மறுபக்கம் அதிமுக.. இக்கூட்டணி எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பது அக்கட்சிக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். மிக மிக பலவீனமான கூட்டணியாக அதிமுக உள்ளது.. காரணம், கட்சியின் தலைவர்கள் பல கூறுகளாக பிரிந்து கிடப்பதும், வாக்கு வங்கியில் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதுமே முக்கியக் காரணம். மேலும் கூட்டணியிலும் கூட தேமுதிக மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான கட்சியாக உள்ளது. அக்கட்சியும் கூட பலவீனமான நிலையில்தான் உள்ளது. பாமக ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இணைந்தால் சற்று பலம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை பாமக மட்டுமே பெரிய கட்சியாக இப்போதைக்கு உள்ளது. இது தவிர பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜி.கே வாசன், ஜான் பாண்டியன் என்று ஏகப்பட்ட பேர் இருந்தாலும் கூட இவர்களுக்கென்று பெரிய வாக்கு வங்கி ஏதும் இல்லை. இதனால் பாஜக கூட்டணியால் மிகப் பெரிய போட்டியை திமுகவுக்குக் கொடுக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சவால் விடும் தவெக
திமுகவுக்கு டஃப் கொடுக்கக் கூடியவர்கள் என்றால் இப்போதைக்கு அது தமிழக வெற்றிக் கழகம்தான். இந்தக் கட்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்று பலர் அலட்சியப்படுத்தினாலும் கூட, இளைஞர்களின் வாக்குகளை மிகப் பெரிய அளவில் ஈர்த்து வைத்துள்ளார் விஜய். அவரை அத்தனை சீக்கிரம் சாதாரமாக எடை போட்டு விடக் கூடாது. திமுகவுக்கும் இது தெரியும். இதனால்தான் முடிந்தவரை தவெகவை டேமேஜ் செய்ய அது தீவிரமாக உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அக்கட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், கொள்கைத் தெளிவு இல்லாதவர்கள் போலவும் சித்தரிக்க திமுக தரப்பு முயல்கிறது. டிவி டிபேட்டுகளைப் பார்த்தாலே இது தெரியும். தவெக சார்பில் பேச வருபவர்கள் எந்த அளவுக்கு டார்கெட் செய்யப்படுகிறார்கள், கிட்டத்தட்ட ராகிங் செய்வது போலவே அவர்களை திமுக தரப்பும் பிற திமுக ஆதரவு பேச்சாளர்களும் கையாளுகிறார்கள் என்பதை அறியலாம். தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தவெக இப்படி என்றால் இன்னொரு பக்கம் சீமான். நாம் தமிழர் கட்சி படிப்படியாக தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது 8 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரத்தையும் அது பெற்றுள்ளது. தனித்து நின்று போட்டியிட்டே இதை அது சாதித்துள்ளது. அக்கட்சி மீது எத்தனை குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து அது வாக்கு வங்கியை அதிகரித்து வருவது முக்கியமானது. இந்த வாக்குகள் நாளை 10 சதவீதத்தைத் தாண்டினால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க்க கூடிய சக்தியாக அது மாறி விட வாய்ப்புள்ளது.
5 முனைப் போட்டி திமுகவுக்கே சாதகம்
இப்படி 5 பெரும் கட்சிகள் களத்தில் நின்றாலும் கூட திமுகவைப் பொறுத்தவரை அதற்கே சாதகமான சூழல் நிலவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், அதிமுகவால் ஆட்சியமைக்கக் கூடிய அளவுக்கு வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவே. அப்படி ஒரு மன நிலையில் மக்கள் இருப்பதாக தெரியவில்லை. பாஜக, நாம் தமிழர் கட்சிக்கும் அதே நிலைதான். தவெக மட்டுமே சற்று சவாலுக்குரிய கட்சியாக உள்ளது. ஆனால் திமுக என்ற மிகப் பெரிய கற்பாறையைக் குடைந்து தள்ளி வெற்றி இலக்கைத் தொடும் அளவுக்கு தவெக பலமாக உள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான். அதேசமயம், அக்கட்சியைக் குறைத்துப் பார்க்கவும் முடியாது. பலமான போட்டியை தவெக கொடுக்கலாம் என்று நம்பலாம். ஆனால் மலையைச் சாய்க்கும் அளவுக்கு மக்கள் ஆதரவு தவெகவுக்கு உள்ளதா என்பதை வரும் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும், இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் அதில் திமுகவே வெற்றியாளராக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு வேளை கடந்த முறையை விட வாங்கிய தொகுதிகள் குறையலாம் அல்லது மயிரிழையில் பல தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கலாம். இதுதான் நிதர்சனம். கிட்டத்தட்ட மத்தியில் உள்ளது போன்ற அரசியல் சூழல்தான் தமிழ்நாட்டிலும் உள்ளது. எப்படி தேசிய அளவில் பாஜகவுக்கு போட்டியாக இதுவரை வலுவான கூட்டணி அமையாமல் உள்ளதோ அதுபோலத்தான் தமிழ்நாட்டிலும் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி இதுவரை அமையவில்லை. ஒரு வேளை அப்படி அமைந்தால் அப்போது திமுகவுக்கு சிக்கல் வர வாய்ப்புண்டு.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}