ஓட்டுப் போட்ருவாங்களா?.. ஊரு கண்ணு, உலகக் கண்ணு.. மொத்தக் கண்ணும்.. இந்த 39,25,144 பேர் மீதுதான்!

Apr 18, 2024,06:46 PM IST

சென்னை: ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தலைநகர் சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாக பதிவாவது சர்ச்சையாகி வருகிறது. இந்த முறையாவது அந்தக் கறையை சென்னை வாக்காளர்கள் துடைத்து அதிக அளவில் வாக்களித்து தலைநகரின் மானத்தைக் காப்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சென்னையில், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என மொத்தம் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.  இதுதவிர சென்னையைச் சுற்றிலும் உள்ள புறநகர்களை உள்ளடக்கி ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன. 


சென்னை நகருக்குள் வரும்  3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 39 லட்சத்து 32 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர். மத்திய சென்னை தொகுதியில் 6,67,465 ஆண் வேட்பாளர்களும்,  6,82,241 பெண் வேட்பாளர்களும்,  455 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,50,161 வாக்காளர்கள் உள்ளனர். 


மத்திய சென்னை



மத்திய சென்னையைப் பொறுத்தவரை உழைப்பாளர்கள் அதிகம் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், நடுத்தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் ஆயிரம் விளக்கு, எலைட் மக்கள் அதிகம் உள்ள அண்ணா நகர், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் என முக்கியமான பகுதிகள்,சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. 


மத்திய சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே பெரிய தொகுதி என்றால் அது அண்ணா நகர் சட்டசபைத் தொகுதிதான். அங்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 545 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்து  ஆயிரம் விளக்கு தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 308 பேர் உள்ளனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 912 பேர் உள்ளனர்.


தென் சென்னை



தென் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 851  பேர் ஆவர். பெண்களைப் பொறுத்தவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 818 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 464 ஆகும். 


தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் வேளச்சேரி தொகுதிதான் பெரியது. அங்கு 3 லட்சத்து 10 ஆயிரத்து 289 வாக்காளர்கள் உள்ளனர். விருகம்பாக்கத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 105 வாக்காளர்கள் உள்ளனர்.


வட சென்னை



வட சென்னையில்  திருவொற்றியூர், பெரம்பலூர், ஆர்.கே.நகர், ராயபுரம். திரு.வி.க. நகர், கொளத்தூர் என மொத்தம் 6 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. பெரிய தொகுதி என்றால் பெரம்பலூர் தொகுதிதான். இங்கு 2 லட்சத்து 84 ஆயிரத்து 022 வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள்தான் இங்கு அதிகம். இதற்கு அடுத்த பெரிய தொகுதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிதான். இங்கு  2 லட்சத்து 82 ஆயிரத்து 903 பேர் உள்ளனர். டாக்டர் ஆர்.கே. நகர் தொகுதியில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 068 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட 2வது பெரிய தொகுதி என்றால் அது வட சென்னைதான். 


இப்படி பல பெருமைகள் இருந்தாலும் கூட தலைநகரில் உள்ள தொகுதிகள் மிகக் குறைந்த வாக்குப் பதிவையே கண்டு வருகின்றன. கடந்த  2019 லோக்சபா தேர்தலின்போது வட சென்னையில் 64.10 சதவீத வாக்குகளே பதிவாகின. வட சென்னையில் தொழிலாளர்கள், சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தென் சென்னை ரொம்ப மோசம். 58 சதவீத வாக்குப்பதிவே அங்கு நடந்திருந்தது. மத்திய சென்னையில் 58.72 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 72.44 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.


2021 சட்டசபைத் தேர்தலின்போதும் 60- சதவீதத்தைக் கூட சென்னை தொடவில்லை. 59.06 சதவீத அளவே வாக்குகள் பதிவாகின. மாநில அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 73.83 சதவீதம் ஆகும். மாநிலத்தின் பிற மாவட்டங்கள் அனைத்துமே 65 சதவீதத்தைத் தாண்டி வாக்குப் பதிவை கண்டிருந்த நிலையில் தலைநகர் சென்னை மட்டும் 60 சதவீதத்தைக் கூட தொடாதது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


ஏன் வாக்களிக்க வருவதில்லை?




சென்னை வாக்காளர்களிடையே ஓட்டுப் போடும் மன நிலை முழுமையாக வராததற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை. பலரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு - தேர்தல் சமயத்தில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குப் போய் விடுகிறார்கள் என்பதே.. அதில் ஓரளவே உண்மை இருக்கிறது. காரணம், ஊருக்குப் போகிறவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு சொந்த ஊரில்தான் ஓட்டு இருக்கும். எனவேதான் அவர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்குப் போவதாக இருக்கும். இல்லாவிட்டால் கோடை விடுமுறைக்காக முன்கூட்டியே ஊருக்குப் போனவர்களாக இருக்கக் கூடும். எனவே ஊருக்குப் போகிறவர்களை பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது பொருத்தமாக இருக்க முடியாது.


சென்னையில் ஓட்டு வைத்திருப்பவர்கள் ஓட்டுப் போடாமல் பலர் வீட்டோடு முடங்கி விடுகிறார்கள் என்பதே பெரும்பாலும் உண்மையாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பலருக்கு பிடிப்பதில்லை என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போதைய அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீதும் பலருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை என்று சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அதே முகங்களையே கட்சிகள் தேர்தலில் நிறுத்துவதால் பலர் வெறுத்துப் போயுள்ளனர். சிலர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சரி, அதன் பிறகு திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று பலரும் யோசிக்கிறார்கள். இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


படித்தவர்கள்- பணக்காரர்கள் வராததற்கு என்ன காரணம்?




அதிகம் படித்தவர்கள் மத்தியில் பூத்துக்குப் போய் வியர்க்க விறுவிறுக்க வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதில் விருப்பம் இருப்பதில்லை. இதனால் அவர்களும் பெரும்பாலும் ஓட்டளிக்க வருவதில்லை. சென்னை வாக்குச்சாவடிகளை சுற்றிப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் சாமானிய மக்கள், சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கத்தினர்தான் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்திருப்பதைப் பார்க்க முடியும். பெரிய பணக்கார்ரகளை அதிக அளவில் வாக்குச் சாவடிகளில் பெரும்பாலும் பார்க்க முடியாது. இது இன்னொரு காரணம்.


பலரும் குற்றம் சாட்டுவது போல பலர் தேர்தல் சமயத்தில் வெளியில் எங்காவது போய் விடுகிறார்கள். அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. என்னத்த ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது என்ற விரக்தி, வெறுப்பு, ஆர்வமின்மை என பல காரணங்கள் இதில் அடங்கியுள்ளன. லீவைப் பயன்படுத்தி ஊருக்குப் போய் விடுகிறார்கள் பலர். இப்படிப் பல்வேறு காரணங்களால் சென்னையில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்ய தேவையான அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், தேர்தல் ஆணையமும் எடுத்துதான் வருகின்றன. ஆனாலும் இதுவரை பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.


மாற வேண்டும் மக்களே




ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்தத் தேர்தல் பல்வேறு வகையிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது. எனவே பெரிய அளவில் சென்னை வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர். பார்க்கலாம், சென்னைவாசிகள் வாக்களித்து அதிர வைப்பார்களா அல்லது வழக்கம் போல வாலைச் சுருட்டிக் கொண்டு வீட்டோடு முடங்கிப் போய் விடுவார்களா என்பதை. 


தேர்தலுக்காக எத்தனையோ ஆயிரம் ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்க்கிறார்கள். உழைக்கிறார்கள். மக்களின் வரிப்பணம்தான் இதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. முதியோர்களுக்காக, மாற்றுத் திறனாளிகளுக்காக, கர்ப்பிணிப் பெண்களுக்காக என்று பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எல்லாம் எதற்காக.. நமக்காகத்தானே. நாம் சவுகரியமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்கின்றனர். நாம் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இதை மக்கள் பயன்படுத்த வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும்.


ஓட்டு என்பது நமக்கு அரசியலமைப்புச்சட்டம் அளித்துள்ள மிகப் பெரிய அதிகாரம், உரிமை, சக்தி.. இதைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்தவர்களை தேர்ந்தெடுக்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.  ஒரு ஓட்டு கூட பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்..  ஒரு ஓட்டால் எத்தனையோ மாற்றங்கள் நடந்துள்ளது வரலாறு.. எனவே உங்களது ஓட்டுரிமையைப் பயன்படுத்துங்கள். பொறுப்பான குடிமக்களாக நடந்து கொண்டு வாக்களிப்பதை உறுதி செய்வோம்.. சென்னைவாசிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நாளை தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்