அண்ணாமலையை மாற்றி விட்டு.. வேறு தலைவரைப் போட்டால்.. அதிமுக இறங்கி வரும்.. கூட்டணிக்கும் வாய்ப்பு?

Jun 05, 2024,05:31 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமையில் மாற்றம் வருமா என்ற விவாதம் இப்போது கிளம்பி விட்டது. காரணம், தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்திலிருந்து, ஏகப்பட்ட செலவு செய்து கட்சியை வளர்த்தும் கூட, பிரதமர் மோடி பலமுறை முற்றுகையிட்டும் கூட, ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போனது கட்சித் தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சரியான கூட்டணி அமையாமல் போனதே இதற்குக் காரணம் என்றும் பாஜக தலைமை கருதுவதாக சொல்கிறார்கள்.


ஜெயலலிதா இருந்தவரை பாஜகவை எட்டியே வைத்திருந்தார்.. மோடியா இந்த லேடியா என்றும் முழங்கியவர் ஜெயலலிதா. அவர் இருந்தவரை பாஜகவால் அதிமுக பக்கம் திரும்பிக் கூட பார்க்க முடியாத நிலைதான். ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கிட்டத்தட்ட பாஜகவின் வசம் போய் விட்டது. அதிமுகவில் நடந்த பல நிகழ்வுகளுக்கும் பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு காரணமாக இருந்திருக்கிறது.


அதிமுகவில் நடந்த மாற்றங்கள்




ஓபிஎஸ் வெளியேறினார்.. சசிகலா சிறைக்குப் போனார்.. டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்டார்.. ஓ.பி.எஸ் மீண்டும் சேர்ந்தார்.. பிறகு நீக்கப்பட்டார்.. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனார்.. இப்படி பல நிகழ்வுகளை அதிமுக கண்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றியை சுவைக்கவில்லை. ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது நடந்த சட்டசபை இடைத் தேர்தல்களிலும் கூட ஆட்சியை தக்க வைக்கத் தேவையான இடங்களில் மட்டுமே அது ஜெயித்ததே. பெரும்பாலான இடங்களில் திமுகதான் வென்றது.


இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக இடையே கடும் பூசல் வெடித்தது. அண்ணாமலை ஏதோ சொல்லப் போக அது அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது. அண்ணாமலையின் அடுத்தடுத்த பேச்சுக்கள், அவரது செயல்பாடுகள், அவரது அணுகுமுறைகள், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எல்லாமே அதிமுகவினரை வெறுப்படைய வைத்தன. ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் பொறுத்துப்போனால் கட்சிக்குள்ளேயே தனக்கு எதிர்ப்பு வந்து விடும் என்பதால் பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக முடிவெடுத்தார் எடப்பாடியார். 


மேலிடம் ஓகே.. அண்ணாமலை Not ok




அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக தலைமையுடன் நல்லுறவில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட அண்ணாமலையைத் தவிர மற்ற யாருடனும் அவர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டதில்லை. ஆனால் அண்ணாமலை மட்டுமே அதிமுக தலைமைக்குப் பிடிக்காதவராக இருக்கிறார். அதேபோல அண்ணாமலைக்கும் தற்போதைய அதிமுக தலைமை பிடிக்கவில்லை. ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் அவர், எடப்பாடியாரை கண்டு கொள்வதில்லை. இதனால் ஏற்பட்ட இந்த இருவருக்கும் இடையிலான ஈகோ மோதல்தான் இன்று கூட்டணிகள் பிரிய காரணமாக அமைந்தது.


ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் ரிசல்ட் வேறு மாதிரியாக இருந்திருக்கும். குறைந்தது 10 தொகுதிகளையாவது பிடித்திருக்கலாம் என்ற எண்ணத்திற்குள் கட்சியினரை கொண்டு சென்றுள்ளன. அண்ணாமலை மீதான அதிமுகவின் கோபம் சற்றும் குறையவில்லை. இதே அண்ணாமலை தலைமை நீடித்தால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு அதிமுக வர வாய்ப்பில்லை. மாறாக அண்ணாமலை தலைமை மாற்றப்பட்டால், தமிழிசை செளந்தரராஜனோ அல்லது வானதி சீனிவாசன் போன்றோரோ அல்லது பொன் ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்களோ தலைவராக்கப்பட்டால் நிச்சயம் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர அதிமுக சம்மதிக்கலாம்.


அண்ணாமலை பிளானே வேற




இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. காரணம், அண்ணாமலையின் ஸ்டிராட்டஜியே அதிமுக, திமுக இல்லாத கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் பலம் பெற்று படிப்படியாக ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான். இதைத்தான் மேலிடத்திலும் சொல்லி  அவர்களது சம்மத்துடன்தான் 3வது அணியை உருவாக்கிியருந்தார். நிச்சயம் சில சீட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையயும் அவர் வைத்திருந்தார். தான் மேற்கொண்ட யாத்திரை பாஜகவுக்கு மிகப் பெரிய அலையை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பியிருந்தார். ஆனால் வாக்கு சதவீதம் உயர்ந்ததே தவிர, மிக மிக முக்கியமான வெற்றி பாஜகவுக்குக் கிடைக்காமல் போய் விட்டது. அவரது துரதிர்ஷ்டம், தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டு விட்டதால், அடடா, தமிழ்நாட்டில் ஏதாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று கட்சியினரை எண்ண வைத்து விட்டது.


லோக்சபா தேர்தல் தோல்வியால் அண்ணாமலை துவண்டு போய் விடவில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் 2 மடங்கு வேகத்துடன் நாங்கள் பணியாற்றப் போகிறோம். வரும் நாட்களில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவோம். தமிழ்நாடு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


ஒரு சீட் கூட ஜெயிக்காட்டி எப்படி?




இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள்.. அதாவது ஒரு கட்சி முதலிடத்திற்கு ஆசைப்பட வேண்டும் என்றால் அது முதலில் 2வது இடத்தில் இருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் 3வது இடத்திலாவது இருக்க வேண்டும். இந்த தேர்தலில் 10 தொகுதிகளில் பாஜக 2வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே அது முதலிடத்திற்கு குறி வைப்பது நியாயமானதே என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அதை பரீட்சார்த்தமாகத்தான் அண்ணாமலை எடுத்துக் கொண்டார். அவரது உண்மையான இலக்கு சட்டசபைத் தேர்தல்தான்.. சீட்டுகள் கிடைக்கும், 25 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால்தான் கட்சியினர் உற்சாகமாக பணியாற்றுவார்கள், தொய்வு இருக்காது என்பதற்காக அவர் அப்படி சொல்லியிருக்கலாம்.. உண்மையில் கள யதார்த்தம் அண்ணாமலைக்குத் தெரிந்திருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.


அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான தராசு ஷியாம் வேறு மாதிரியான கோணத்தில் இதைப் பார்க்கிறார். 25 சதவீத வாக்குகள் பெறுவோம், தென் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் இருக்காது என்று சொன்னார் அண்ணாமலை. எதுவுமே நடக்கவில்லை. நடப்பு தேர்தல் முறையில் 10 சதவீத வாக்குகள் பெறுவதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அதை பெரிய வெற்றியாக கருத முடியாது.  பாஜகவில் மேல் மட்ட அளவில் தலைமை மாற்றம் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல தமிழ்நாட்டிலும் தலைமை மாற்றத்திற்கு வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்திலிருந்து ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போவதை யாராலும் ஜீரணிக்க முடியாது என்று கூறுகிறார் ஷியாம்.


பாஜக மேலிடம் அண்ணாமலையை மாற்றுமா.. வேறு தலைவர் வருவாரா.. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடருமா என்பதை அறிய நாம் காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்