விக்கிரவாண்டி.. திமுகவுக்கு எதிராக.. அதிமுகவுடன் கை கோர்க்குமா பாமக?.. காத்திருக்கும் பரபரப்பு!

Jun 11, 2024,06:12 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பல சுவாரஸ்ய எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. நிச்சயம் திமுகதான் இங்கு ஜெயிக்கும்.. காரணம் இது திமுகவின் கோட்டை என்பதால். அதேசமயம், இந்த முறை அரசியல் களம் வேறு மாதிரியாக இருப்பதால், திமுக இந்தத் தேர்தலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டசபைத் தொகுதிதான் விக்கிரவாண்டி. தமிழ்நாட்டின் 75வது சட்டசபைத் தொகுதியான விக்கிரவாண்டியில் திமுக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. மிகத் தீவிரமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். லோக்சபா தேர்தல் சமயத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் புகழேந்தி. இதனால் இந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் வந்துள்ளது.


2 முறை திமுக வென்ற விக்கிரவாண்டி




இந்த தொகுதியைப் பொறுத்தவரை 2011 முதல் இங்கு தேர்தல் நடந்து வருகிறது. முதல் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அதைத்  தொடர்ந்து நடந்த தேர்தல்களில் 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு முறை அதிமுக வென்றுள்ளது. அதிகபட்சமாக திமுக 2 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளது. 


கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி 48.69 சதவீத வாக்குகள் பெற்று வென்றார். 2வது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 43.72 சதவீத வாக்குகளைப் பெற்றார். கடும் போட்டியைக் கொடுத்தவர் முத்தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவர் தவிர நாம் தமிழர் கட்சி 3வது இடத்தையும், அமமுக 4வது இடத்தையும் பிடித்தனர். வெறும் 9573 வாக்குகள் வித்தியாசத்தில்தான் புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.


லோக்சபா தேர்தலில் மாறிய களம்




நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளைப் பார்த்தால் சுவாரஸ்யம் இருப்பதைப் பார்க்க முடியும். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் முரளி சங்கருக்கு 32,198 வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு 72,188 வாக்குகள் கிடைத்திருந்தன.  நாம் தமிழர் கட்சிக்கு 8352 வாக்குகள் கிடைத்திருந்தன. இது நிச்சயம் திமுகவுக்கு சாதகமான தகவல் இல்லை.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக இணைந்து போட்டியிட்டிருந்தால் திமுகவால் வென்றிருக்க முடியாது என்ற கருத்தை இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கூறி வருகின்றனர், இணைய வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க அதிமுகவும், பாஜக தரப்பும் கண்டிப்பாக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிமுக - பாமக கை கோர்த்தால் சிக்கல்




கடந்த முறை அதிமுக இங்கு போட்டியிட்டதால் இந்த முறையும் அக்கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும். அதேபோல பாஜக கூட்டணியிலிருந்து பாமகவும் இங்கு போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. வலுவான வேட்பாளரை களம் இறக்கி ஓட்டுக்களைப் பிரிக்க அது முயலும்.


திமுக இந்த தேர்தலை எளிதாக எடுத்துக் கொண்டால் சிக்கலாகி விடும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் லோக்சபா தேர்தலில் அதிமுக - பாமக வேட்பாளர்களுக்குக் கிடைத்த வாக்குகளைக் கூட்டினால், அது விசிக  வேட்பாளருக்குக் கிடைத்ததை விட அதிகமாக வருகிறது. எனவே கூட்டணி அமைத்துப் போட்டியிட அதிமுக - பாஜக தரப்பிலிருந்து முயற்சிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் இந்த தேர்தலுக்கு மட்டுமாவது அதிமுக - பாமக கூடடணி அமைக்கவும் முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தத் தேர்தலில் மட்டும் பாமக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இரு கட்சிகளிலும் எழுந்துள்ளது.


உஷாராகும் திமுக




அப்படி நடந்து விட்டால் திமுகவுக்கு சிக்கலாகி விடும். எனவே அது வலுவான வேட்பாளரைப் போட்டு, தீவிரமாக களப் பணியாற்றினால்தான் வெற்றியைச் சுவைக்க முடியும். இதை மனதில் வைத்துத்தான் தற்போது மாவட்ட நிர்வாகிகளை மாற்றியுள்ளது திமுக மேலிடம். அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதமி சிகாமணியை விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ளனர். அதேபோல வடக்கு மாவட்டத்தை நிர்வகித்து வந்த செஞ்சி மஸ்தானையும் நீக்கியுள்ளனர். திமுக, விக்கிரவாண்டியை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. 


அதேபோல அனேகமாக கெளதம சிகாமணியையே இங்கு வேட்பாளராக களம் இறக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. அப்படி நடந்தால்தான் கட்சியினர் தீவிரமாக பணியாற்றுவார்கள் என்று பொன்முடி கருதுகிறாராம். காரணம், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விட்டால் அது மாநிலம் முழுமைக்கும் வேறு மாதிரியான செய்தியைக் கொண்டு போய் விடும் என்பதால் திமுக தரப்பு உஷாராகி வருகிறது. 


அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் திமுக அணியின் பக்கம்தான் மக்கள் உள்ளனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டியுள்ளன. எனவே விக்கிரவாண்டியில் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று விழுப்புரம் திமுகவினர் அடித்துக் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்