தமிழ் சினிமாவில்... ஏன் இன்னொரு மனோரமா உருவாக முடியவில்லை.. ரசனைக்கு என்னாச்சு?

May 27, 2024,06:16 PM IST

- பொன் லட்சுமி


நடிப்பின் சிகரம்.. நடிகைகளின் அரசி.. தமிழ் திரையுலகினராலும் தமிழ் ரசிகர்களாலும்  ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமாவின் பிறந்த நாளை நேற்றுதான் அனைவரும் நினைவு கூர்ந்தோம்.. கூடவே, மனோரமா போன்ற ஒரு நடிகை அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வராமல் போனது ஏன் என்ற அயர்ச்சியும், ஆச்சரியமும், கேள்வியும் மனதில் எழாமல் இல்லை.


மனோரமாவை ஒரு சாதாரண காமெடி நடிகையாக அடக்கி விட முடியாது, சுருக்கிப் பார்த்து விடவும் கூடாது.. அவர் ஒரு மாபெரும் சமுத்திரம்.. எப்படி ஒரு கடல் ஆழமானதோ, அது எப்படி எல்லாவற்றையும் உள் வாங்குகிறதோ.. அதுபோலத்தான் மனோரமாவும். எல்லா வகையான நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடியவர், ஆழமான புலமை மிக்கவர், எல்லாவற்றையும் வெளிப்படுத்தினாலும் கூட கடல் போல அமைதியாக இருப்பவர்.. அதேசமயம், எந்த இடத்தில் குமுற வேண்டுமோ அந்த இடத்தில் கொந்தளித்து சுனாமி போல வெளுத்துக் கட்டி விடுவார்.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் சிறு  வேடங்களில்  நடித்து வந்த அவர் பின் இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனை படைத்த, காலத்தால் அழிக்க முடியாத  புகழ்பெற்ற ஒரு நடிகையாக வலம் வந்தவர்தான் மனோரமா. நகைச்சுவை வேடங்களில் ஆண் நடிகர்கள் எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் ஈடு கொடுத்து நடிக்கும் திறமை மனோரமாவுக்கு மட்டுமே உண்டு. நகைச்சுவைக்கு எத்தனையோ பெண் நடிகைகள் வந்தாலும் மனோரமா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை நிதர்சனமான உண்மை. இங்குதான் மனோரமா விட்டுச் சென்ற இடம் இன்னும் அப்படியே காலியாக இருக்கிறது.




மனோரமா திரை உலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில்  திரை உலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற  கதாநாயகர்களின் கதாபாத்திரத்திற்கு இணையாக ஈடு கொடுக்கும் அளவிற்கு அவ்வளவு இயல்பாக  நடித்தவர் மனோரமா. கதாநாயகர்கள் மட்டுமல்லாது காமெடி நடிகர்களாக வலம் வந்த நாகேஷ், சோ,  தேங்காய் சீனிவாசன்  சுருளிராஜன், கவுண்டமணி என்று அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும்  அவர்களின் நடிப்புக்கு  இணையாக  போட்டி போட்டு நடித்திருப்பார். அவர்களையே ஓரம் கட்டும் அளவுக்கு தனித் திறமை மிக்கவர் மனோரமா.


நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் திறமை அவருக்கு உண்டு. நடிகர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால், நடிகைகளில் மனோரமா என்றால் மிகை ஆகாது. மிகச் சிறந்த நடிப்பாற்றல் தெளிவான வசன உச்சரிப்பு, கனீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்தன்மை தான் அவரை சுமார் அரை நூற்றாண்டு காலமாக திரையுலகில் நீடித்து நிற்க செய்தது.


தில்லானா மோகனாம்பாள், மனோரமாவின் திறமைக்கு ஒரு சிறு துளி. கதாநாயகனாக நடித்த சிவாஜிக்கும் கதாநாயகியாக நடித்த பத்மினி கதாபாத்திரத்திற்கு இணையாக அதில் அவர் ஜில் ஜில் ரமாமணி என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றார் மனோரமா. அவர் பேசிய வசனம் இப்போது வரை அத்தனை பேரையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மனோரமா எவ்வளவோ கதாபாத்திரங்களில் புகழ் பதித்திருந்தாலும் இந்த ஜில்ஜில் ரமாமணி நகைச்சுவை கதாபாத்திரம் தான் இன்று வரை அவரை நகைச்சுவை நடிகையாக ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது.


அதேபோல சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணாத்தா என்கிற கதாபாத்திரத்தில் அவ்வளவு கனகச்சிதமாக நடித்திருப்பார். அதிலும்    "கம்முனு கெட" என்ற வசனம் தான் இன்றும் ரசிகர்களின் மனதில் குடி கொண்டிருக்கிறது. படம் நெடுகிலும் அமைதியாக வலம் வரும் மனோரமா, அந்தக் காட்சியில் பொங்கிப் பிரவாகம் எடுத்து அத்தனை பேரையும் ஓரம் கட்டி வாயடைக்கச் செய்திருப்பார்.. அவரது நடிப்பு கடல் என்பதற்கு இந்த ஒரு காட்சி மிகச் சரியான உதாரணம்.


அதேபோல சின்ன கவுண்டர் படத்தில் சுகன்யாவிடம் வாக்குவாதம் செய்யும் காட்சியில்  இடம்பெறும் நான் மட்டும் உனக்கு மாமியாரா வாச்சேன்னா அந்த வெடுக்க வெடுக்குன்னு ஆட்டுற  இடுப்பு எலும்ப உடைச்சு   ஒட்டியானம் செஞ்சு போட்டுகிடுவேன்  என்ற வசனம் இப்போது கேட்டாலும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.


நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் தனது நடிப்பு திறமையை அப்படி வெளிப்படுத்தி இருப்பார். அனுஷ்காவுடன் இணைந்து நடித்த அருந்ததி படத்தில் சந்திராம்மா என்ற கதாபாத்திரத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருப்பார். அந்த அளவுக்கு நவரசங்களையும் அள்ளித் தெளிக்கும் ஒரு சிறந்த நடிகை. நடிப்பு திறமை மட்டும் தான் என்று இல்லை அவர் நடித்த திரைப்படங்களில் ஒரு ஏராளமான பாடல்களையும் அவர் பாடியுள்ளார். குறிப்பாக பாட்டி சொல்லை தட்டாதே என்ற படத்தில் டெல்லிக்கு ராஜானாலும் என்ற பாடலையும், மே மாதம் என்ற படத்தில் மெட்ராஸ் சுத்தி பாக்க போறேன்  என்ற பாடலையும் தனது குரலில் பாடி இருப்பார்.  அதேபோல அந்தக் காலத்தில் அவர் பாடிய வா வாத்யாரே ஊட்டாண்டே.. நீ வராங்காட்டி நான் உட மாட்டேன்.. பாடல், இப்போது கேட்டாலும் நாம் சொக்கிப் போய் விடுவோம்.


1960ல் அவர் நடிப்பு திறமையில் உச்சம் பெற்றிருந்த போதும் 2000 கடந்த பிறகும்  அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு தான் வருகின்றது. அன்றைய தலைமுறை நடிகர்கள் முதல்  இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்து விட்டார். கடைசியாக அவர் நடித்த சிங்கம் 2 திரைப்படம் வரை அவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்று இருக்கிறது. 


மனோரமாவை நினைவு கூறும் அதே வேளையில் அவருக்குப் பிறகு அவரை மிஞ்சக் கூடிய அளவில் ஒரு நடிகை கூட வரவில்லை. கோவை சரளா சில காலம் கலக்கினார்.. ஆனால் அவர் மனோரமாவை மிஞ்ச முடியவில்லை.. அவரது சிம்மாசனம் இன்று வரை காலியாகவே கிடக்கிறது. அதை அலங்கரிக்கும் அளவுக்கு ஏன் ஒருவரை தமிழ் சினிமாவால் அடையாளம் காட்ட முடியவில்லை என்பது ஆச்சரியமான ஒரு கேள்விதான்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்