EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!

Nov 13, 2024,05:43 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி அண்ணாமலை லண்டனுக்குப் போவதற்கு முன்பே இருந்து வந்தது. இப்போது அவர் லண்டனுக்குப் படிக்கப் போயுள்ள நிலையில் இந்த மாத இறுதியில் தமிழ்நாடு திரும்புகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் தலைவர் மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்புகள், பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.


இதற்குக் காரணம் உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணியை வலுவாக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதற்கு அதிமுக, பாமக, தேமுதிக என கடந்த சட்டசபைத் தேர்தலில் தன்னுடன் இருந்த அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இந்த ஆசைக்கு குறுக்கே நிற்பது எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை இடையிலான கருத்து வேறுபாடுகள்தான்.


அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி பஞ்சாயத்து




அண்ணாமலை  மட்டுமே அதிமுகவின் ஒரே குறை. அண்ணாமலை இல்லாத பாஜகவை அதிமுக தலைவர்கள் ஏற்கவே செய்வார்கள் என்று கட்சி மேலிடம் கருதுகிறதாம். அதேசமயம், அண்ணாமலையை அதிரடியாக மாற்றவும் பாஜக விரும்பவில்லை. காரணம் இதற்கு முன்பு இருந்த தலைவர்களை விட அதி வேகமாக பாஜகவை தமிழ்நாட்டின் குக்கிராமங்களுக்கும் கொண்டு போனவர் அண்ணாமலை என்பது எதார்த்தமான உண்மை. இதை பாஜக மேலிடமும் மறக்கவில்லை. இருப்பினும் அடுத்து வரும் தேர்தலில் பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் அல்லது கணிசமான வெற்றியைப் பெற வேண்டும். இதில் எது தவறினாலும் அது பாஜகவின் வளர்ச்சிக்கு பாதகமாகும் என்று பாஜக தலைமை அச்சப்படுகிறது.


அதிமுகவை கூட்டணிக்குள் இழுக்க அதன் போக்கில் சற்று வளைந்து கொடுத்துதான் போக வேண்டும் என்ற நிலையில் பாஜக உள்ளது. அதிமுக தரப்பு முறுக்கிக் கொண்டு நிற்க முக்கியக் காரணமே அண்ணாமலைதான். அவரது தலைமை இருப்பதால்தான் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக பக்கம் திரும்பிப் பார்க்க மறுக்கிறார். எனவே அண்ணாமலையை மாற்றினால் எடப்பாடி பழனிச்சாமி சற்று இறங்கி வர வாய்ப்புகள் உள்ளன.


நீரு பூத்த நெருப்பு




மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மத்தியிலும் கூட அண்ணாமலை மீதான அதிருப்தி அதிகம் உள்ளது. பல்வேறு தலைவர்களுக்கும் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தி அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாடு காரணமாகவும், மேலிடத்தின் உத்தரவு காரணமாகவும் யாரும் வெளிப்படையாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் நீரூ பூத்த நெருப்பு போல அது உள்ளுக்குள் தகதகவென்று இருக்கத்தான் செய்கிறது.


அடுத்து, அண்ணாமலை தலைமைக்குப் பிறகு பாஜகவுக்குப் பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. வாக்கு வங்கி சற்று மேம்பட்டுள்ளதே தவிர வெற்றி என்று இதுவரை எதுவும் இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் இருந்த ஒரு தொகுதியையும் பாஜக கூட்டணி இழந்ததுதான் மிச்சம். மிகப் பெரிய அளவில் செலவுகள் செய்ததை பாஜக மேலிடம் சுட்டிக் காட்டி, இத்தனை செய்தும் நமக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் போய் விட்டதே என்று அண்ணாமலையிடம் அதிருப்தியைக் காட்டவும் தயங்கவில்லை என்று சொல்கிறார்கள்.


புதிய தலைவருக்கான தேடுதல் வேட்டை




இப்படி பல்வேறு கணக்குகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பிறகே அண்ணாமலையை மாற்றும் திட்டத்தை பாஜக கையில் எடுக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை லண்டனிலிருந்து வந்த பிறகு முதலில் அவருக்கு வேறு ஒரு மாநில பொறுப்பை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவரை ராஜ்யசபா எம்.பியாக்கி, மத்திய அமைச்சர் பொறுப்பைத் தரவும் திட்டம் உள்ளதாம். இதெல்லாம் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் மாற்றம் உறுதி என்றும் சொல்கிறார்கள்.


புதிய தலைவர் தொடர்பாக 3 விதமான ரூட்களில் பாஜக தலைமை செயல்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய உச்சநட்சத்திரம் ஒருவரை இதுதொடர்பாக பாஜக தலைமை அணுகியுள்ளது. அவரிடம் 2 விஷயத்தைச் சொல்லியுள்ளனர்.. நீங்க தலைமை தாங்க வர்றீங்களா என்று முதலில் கேட்டுள்ளனர். அப்படி வராவிட்டால் யாரை அடுத்த தலைவராக போடலாம் என்று நீங்க ஒரு யோசனை சொல்லுங்க என்றும் கேட்கப்பட்டதாம். ஆனால் அந்த நடிகர் உறுதியான பதில் எதையும் சொல்லவில்லையாம். Lets us see என்று மட்டுமே சொன்னாராம். அவர் நிச்சயம் வர மாட்டார் என்று பாஜக தலைமைக்கே தெரியும். இருந்தாலும் யாராவது ஒருவரை அவர் கை காட்டினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் விரும்புகிறார்களாம்.


புது லிஸ்ட் ரெடி




2வது தமிழ்நாடு பாஜக விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூறும் அந்த முக்கியப் புள்ளியிடம் ஒரு லிஸ்ட் கேட்டிருந்ததாம் பாஜக மேலிடம். அவரும் ஒரு பட்டியலை அனுப்பி வைத்துள்ளார். அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களைப் பார்த்த பாஜக தலைமை அத்தனை பேரையும் கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து விட்டதாம். இதனால் பட்டியலைக் கொடுத்த அந்த புள்ளி ஷாக்காகி விட்டாராம். ஒருவர் கூடவா திருப்தி இல்லை என்று அவரும் அப்செட்டாகி விட்டாராம். அவர் கொடுத்த பட்டியலில் இருந்தது யார் என்று தெரியவில்லை.


3வதாக பாஜக மேலிடமே ஒரு லிஸ்ட்டை ரெடி செய்துள்ளதாக சொல்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள் மற்றும் அது சாராதவர்கள் என இரு தரப்பினரும் உள்ளனராம். அதிலிருந்து ஒருவரை தலைவராகப் போட பாஜக தலைமை யோசித்து வருகிறதாம். பெரும்பாலும் ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து வருபவரே அடுத்த தலைவர் என்றும் சொல்கிறார்கள். அதேசமயம், அண்ணாமலை அளவுக்கு அடிமட்ட அளவில் இறங்கி வேலை செய்யக் கூடியவராகவும் அவர் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


கூடிய விரைவில் தலைவர் மாற்றப்படுவாரா.. அப்படி மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பதை பாஜக மேலிடம் முடிவு செய்து விடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தலைவர் மாற்றம் என்ற தகவல் இதுவரை வெறும் யூகமாகவும், வதந்தியாகவும் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் திரைமறைவில் ஏகப்பட்ட வேலைகள் நடந்து வருவது மட்டும் உண்மை என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவாரா.. முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச்!

news

Indigestion issues: உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கா? இதை ஃபாலோ பண்ணுங்க

news

வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 14 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மிதுன ராசிக்காரர்களே... தொட்டதெல்லாம் வெற்றியாகும் நாள்.. துலாம் லாபம்.. விருச்சிகத்துக்கு ஊக்கம்!

news

கலைஞர் மருத்துவமனை டாக்டர் பாலாஜியை குத்தியால் குத்திய.. விக்னேஷ்வரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

news

யாருக்கும் பாதுகாப்பில்லை...அரசு டாக்டர் தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

news

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் கூடுகிறது.. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க!

news

EXCLUSIVE: அண்ணாமலை மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார்?.. பாஜக கையில் 3 ஆப்ஷன்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்