மதுரை: ரயில்வே விதிமுறைப்படி, எளிதில் தீப்பற்றக் கூடிய கேஸ் சிலிண்டர், பீடி, சிகரெட் சமையல் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவை ரயிலில் பயணம் செய்யும்போது எடுத்து செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் தீவிபத்துக்குள்ளான ரயிலில் கல்யாண வீட்டில் இருப்பது போல அடுப்பு, விறகு, காஸ் சிலிண்டர் சகிதம் சமையல் செய்து பயணித்துள்ளது அதிர வைப்பதாக உள்ளது.
லக்னோ - ராமேஸ்வரம் இடையிலான இந்த சுற்றுலா ரயிலில் மூன்று அடுக்கு விறகுகள், ஏராளமான சமையல் பாத்திரங்கள் மற்றும் சிலிண்டர்கள் போன்றவை இருந்துள்ளன. ஒரு கல்யாண வீட்டில்தான் இப்படிப் பொருட்கள் இருக்கும். இவர்கள் ரயிலில் போட்டுக் கொண்டு பயணித்துள்ளனர். வழியெல்லாம் கூட சமைத்திருப்பார்கள் போல. இதை எப்படி ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர் என்ற பெரும் கேள்வி எழுகிறது.
அலட்சியமாக இருந்தது யார்.. தவறு எங்கிருந்து ஆரம்பித்தது.. அப்படியானால் முறையான பாதுகாப்பு மற்றும் சரியான பரிசோதனை நடத்தப்படவில்லையா? என்று பல்வேறு கேள்விகள் சரமாரியாக எழுகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ஆன்மீக சுற்றுலா ரயில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்பட்டது. நாகர்கோவிலிலிருந்து இன்று அதிகாலை ஐந்து மணிக்கு மதுரை வந்தது. அப்போது சுற்றுலா பெட்டியில் இருந்தோர் தேனீர் தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சுற்றுலா ரயில் பெட்டி முழுவதும் தீயில் எறிந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயம் அடைந்ததனர். படுகாயம் அடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தற்போது ரயில்வே துறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தீப்பிடிக்கக் கூடிய பல்வேறு பொருட்களை இந்த சுற்றுலா குழு எடுத்து வந்துள்ளது. இதை எப்படி ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர் என்ற கேள்வி எழுகிறது. ரயில்வே போலீஸார் இதை ஏன் தடுக்கவில்லை, கவனிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எந்த ரயில் நிலையத்தில் இந்தப் பொருட்களை ஏற்றினார்கள் என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.
ரயில்வே துறை கண்டிப்பான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனது. பலமுறை அது சர்ச்சையிலும் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஒரு குடும்பம் திருப்பதி செல்வதற்காக ரயிலில் சென்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு, ஐந்து வயது குழந்தை���ளுக்கு பயண சீட்டு எடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால் அவர்களது ஐந்து வயது குழந்தைக்கு பயணச்சீட்டு எடுக்கவில்லை. டிடிஆர் பயணச்சீட்டை பரிசோதனை செய்தபோது, ஐந்து வயது குழந்தைக்கு பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பதற்காக அபராதம் விதித்தார். அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று கூறி விட்டார். இது ஒரு உதாரணம்தான். இதுபோல பல கண்டிப்பான சம்பவங்களை நாம் தினசரி பார்க்க முடியும்.
அப்படி இருக்கும்போது, லக்னோவில் இருந்து புறப்பட்ட ரயிலில் இத்தனை பொருட்களை எடுத்துச் செல்வதை எப்படி ரயில்வே அதிகாரிகள் கவனிக்காமல் விட்டார்கள் என்பதுதான் சாதாரண மக்களின் சந்தேகமாக உள்ளது. சுற்றுலா பயணிகளை பரிசோதிக்கவில்லையா ? அவர்கள் கொண்டு வந்த பொருட்களை கவனிக்கவில்லையா? இது அவர்களை டூருக்கு அனுப்பி வைத்த சுற்றுலா ரயில் ஏஜென்சியின் குற்றமா? அல்லது இதைக் கவனிக்காமல் விட்ட அந்த ரயில் நிலையத்தின் குற்றமா? எளிதில் தீப்பற்றக் கூடிய உபகரணங்களை எப்படி ரயில் நிலையத்திலிருந்து ரயில் பெட்டிக்குள் கொண்டு வந்தனர். இந்த அலட்சியத்தின் காரணம் யார்? ரயில்வே காவல் துறையினரின் முறையான சோதனையில் ஈடுபடாதது ஏன்?
இவர்களின் செயலால் அற்புதமான மனித உயிர்கள் அநியாயமாக பறி போயுள்ளன. இவர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி இந்த ரயில் ரயில் நிலையத்தில் நின்றிருந்தால் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும். பெரும் அபாயமாக இது மாறியிருக்கும். இந்த தீ விபத்தின் அலட்சியத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே மட்டுமே இது போன்ற விபத்துகளும், குற்றங்களும் நிகழாமல் தடுக்க முடியும். கடமையிலிருந்து தவறுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும். பொதுமக்களும் அடிப்படை விழிப்புணர்வுடன் பொது வாகனங்களில் பயணிக்க வேண்டும்.. அவர்களது உயிர் மட்டுமல்ல, பிறரின் உயிருக்கும் கூட ஆபத்து நேராமல் தடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை உணர வேண்டும்.
{{comments.comment}}