டெல்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியை லோக்சபா செயலகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் வயநாடு தொகுதி தற்போது உறுப்பினர் இல்லாத தொகுதியாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கையாக, வயநாடு லோக்சபா தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
சூரத் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் அப்பீல் செய்ய ராகுல் காந்திக்கு அவகாசம் உள்ளது. அந்த அவகாசம் முடிவடைந்த பிறகு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஒரு வேளை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தல் வர இன்னும் நிறைய அவகாசம் இருப்பதால் அதற்கு முன்பாகவே வயநாடு இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக செப்டம்பரில் இடைத் தேர்தல் நடக்கலாம்.
தற்போது லோக்சபாவில் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. ஒன்று ஜலந்தர், இன்னொன்று லட்சத்தீவுகள், தற்போது வயநாடு. ஜலந்தர் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் சன்டோக் சிங் செளதரி இறந்ததால் அது காலியாக உள்ளது. லட்சத்தீவு உறுப்பினராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமமது பைசல். இவர் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படலாம்.
2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இதில் அமேதியில் தோற்று, வயநாட்டில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.
அப்பீல் மனு தாக்கல் செய்து, அதில் தண்டனையை ரத்து செய்யப்பட்டால்தான் அவரது பதவி தப்பும் அல்லது இடைத் தேர்தல் நடந்தால் அதில் போட்டியிடவும் முடியும். ஒரு வேளை அப்படி தீர்ப்பு வராமல் போனால், 8 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
{{comments.comment}}