சென்னை: பெரியார் திடலுக்கு வந்து, தந்தை பெரியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இதில் பல்வேறு செய்திகள் பொதிந்துள்ளதாக பலரும் டீகோட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் பேசு பொருளாகி வருகின்றன. அவர் அரசியலுக்கு வரப் போவதாக சொல்வதற்கு முன்பே அவரைச் சுற்றி பல கதைகள் வட்டமடிக்க ஆரம்பித்து விட்டன. முதலில், பாஜகவின் தூண்டுதலின் பேரில், நிர்ப்பந்தத்தின் பேரில், அழுத்தத்தின் கீழ் அவர் அரசியலுக்கு வரப் போவதாக பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவின்போது நீட் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பாஜகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அதுவரை விஜய்யை தூக்கிப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த பாஜகவினர் பலரும் அப்படியே அவரை கீழே போட்டு விட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர்.
பெரியாரைத் தேடி வந்த விஜய்:
விஜய், பாஜக தூண்டுதலின் கீழ் அரசியலுக்கு வரவில்லை, சுயமாகத்தான் அவர் வருகிறார் என்ற பேச்சுக்கள் அதன் பிறகு வலுப் பெறத் தொடங்கின. தொடர்ந்து அவர் திராவிட இயக்கம் சார்ந்த பாதையில் பயணிக்க ஆரம்பிப்பது போன்ற தோற்றங்கள் அடுத்தடுத்து தோன்ற ஆரம்பத்தின. இதன் உச்சமாக தந்தை பெரியாரின் பிறந்த நாளன்று அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையும், அதைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்று முதல் மரியாதை செய்ததும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் காட்டிய சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் என்று விஜய் சொல்லியுள்ளதை சாதாரண வார்த்தையாக கடந்து சென்று விட முடியாது. அதேபோல பெரியார் திடலுக்கு அவர் சென்று பெரியாருக்கு வணக்கம் வைத்ததையும் சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது. பெரியாரைத் தேடி ஒருவர் வருகிறார் என்றார், பெரியாருக்கு மரியாதை செய்கிறார் என்றால் அவர் பெரியாரையும், பெரியாரின் கொள்கைகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவர் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் பார்த்தால், பெரியாரின் பாதையை விஜய் தேர்வு செய்திருப்பதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
விஜய்யின் அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலின் மையப் புள்ளியாக பன்னெடுங்காலமாக பெரியார் திகழ்ந்து வருகிறார். அவரைத் தவிர்த்த அரசியலை இங்கு செய்ய முடியாது. சமூக நீதியாக இருந்தாலும், சோசலிசமாக இருந்தாலும், அதற்கு எதிரான கொள்கை இயலாக இருந்தாலும் பெரியார்தான் மையப் புள்ளியாக, அச்சாக விளங்குகிறார். பாராட்டினாலும் திட்டினாலும் நடு மையமாக பெரியார்தான் இருக்கிறார்.
மேலும் திராவிடக் கட்சிகளின் வழிகாட்டியாக திகழ்பவரும் பெரியார்தான். அது அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி பெரியாரைத் தவிர்த்து விட்டு அவர்களையும் பார்க்க முடியாது, எவரையும் பார்க்க முடியாது. திராவிடப் பேராசான் என்று போற்றப்படும் பெரியாரைத் தேடி விஜய் தனது முதல் மரியாதையை செய்திருப்பது, திராவிடக் கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவிடம் ஏகபோகமாக இருக்கும் பெரியாரை தமிழக வெற்றிக் கழகம், தன் பக்கம் பறிக்கும் திட்டமா என்ற கேள்வியும் எழுகிறது.
பெரியாரை பறிக்க விஜய் திட்டமா?
அண்ணா இப்படித்தான் ஒரு காலத்தில் திமுகவுக்கு மட்டுமே உரித்தானவராக இருந்தார். எம்ஜிஆர் அதை முறியடித்தார். அண்ணாவைத் தனது கட்சியின் பெயரிலையே வைத்து அண்ணாவுக்கு நாங்களும் சொந்தம் என்பதை நிலை நிறுத்தினார். அதன் பின்னர் இன்று திராவிடக் கட்சிகளின் பொதுத் தலைவராக மாறியிருக்கிறார் அண்ணா. அதேபோல பெரியாரையும் திராவிட இயக்கங்களிடமிருந்து பறிக்கும் உத்திதான், தவெக தலைவர் விஜய்யின் பெரியார் திடல் விசிட்டா? என்ற கேள்வி எழுகிறது.
பெரியாரை வைத்தே அவரின் அரசை நடத்துவதாக கூறிக் கொள்ளும் திமுகவுக்கு நெருக்கடி தர விஜய் திட்டமிடுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. பெரியார் திடலுக்கு நடிகர் விஜய் வந்தது எதேச்சையானது அல்ல திட்டமிட்ட ஒன்றுதான் என்று பலரும் கருதுகிறார்கள். காரணம், அவர் அண்ணா பிறந்த நாளுக்கு அவரது நினைவிடம் செல்லவில்லை. ஆனால் பெரியாருக்கு மட்டும் அவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.
அண்ணா வேண்டாம்.. பெரியார் மட்டும்:
அண்ணா திராவிட இயக்கத் தலைவர்களில் முக்கியமானவர், முதன்மையானவர்களில் ஒருவர். ஆனால் அவர் திமுகவின் நிறுவனர். அதேசமயம், பெரியார், அனைத்துத் திராவிட இயக்கங்களுக்கும் தாய் போல. இந்த இடத்தில்தான் விஜய் தனது அரசியலை சூப்பராக செய்துள்ளார். அதாவது அண்ணா நினைவிடம் போயிருந்தால் அவர் திமுகவின் மறைமுக ஆதரவாளராக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். மாறாக, பெரியார் நினைவிடம் போனதால், அவருக்கு திராவிட ஆதரவாளர் என்ற முத்திரை மட்டுமே வந்துள்ளது.
இந்த ஒரு சிறிய அடையாளத்தையே பாஜக மூத்த தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அப்படி இருக்கையில், அண்ணா நினைவிடம் போயிருந்தால், விஜய்யை மறைமுகமாக திமுகவின் பி டீம் என்று கூட சொல்ல ஆரம்பித்திருப்பார்கள். இதனைத் தவிர்க்கத்தான் அண்ணாவிடம் செல்லாமல் பெரியாரிடம் மட்டும் விஜய் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பெரியாரைத் தலைவராக ஏற்பாரா?
பெரியாரை தனது பொதுத் தலைவராக விஜய் அறிவித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி அறிவித்து முழுமையாக பெரியாரை தலைவராக வரித்துக் கொண்டு விஜய் செயல்பட ஆரம்பித்தால், அது திராவிடக் கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம். பெரியார் புகழ் பாடுவதில் யார் பெரியவர் என்ற வாதமாக அது மாறவும் கூடும். இதுதான் விஜய்யின் திட்டமாகவும் கூட இருக்கலாம்.
எது எப்படியோ, தவெகவின் முதல் மாநில மாநாட்டில் அவர் பேசப் போகும் பேச்சில்தான் பெரியார் உள்பட பல்வேறு கேள்விகளுக்கும் பதில் காத்திருக்கிறது. பார்க்கலாம், விஜய்யின் பாதை எப்படி இருக்கும் என்பதை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}