டெல்லி: பிபிசி போன்ற, இங்கிலாந்து நாட்டின் ஆதரவு பெற்ற ஊடகம், நமது நாட்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டுவதை நாம் ஆதரித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று முன்னாள் கேரள முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் ஆண்டனி இவ்வாறு கூறியிருப்பதை, பாஜகவினரே ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அனில் ஆண்டனியின் இந்த டிவீட்டை பாஜகவினர் ரீடிவீட் செய்து வருகின்றனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி டாக்குமென்டரி ஒன்றை தயாரித்துள்ளது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்டிரா இதன் பின்னணியில் உள்ளார். இந்த டாக்குமென்டரி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து குற்றம் சாட்டியுள்ளது. குஜராத் கலவரத்தைப் பயன்படுத்தித்தான் நரேந்திர மோடி இந்திய அரசியலில் தனது வருகையை வலுப்படுத்தினார், அதை வைத்து அரசியல் செய்தார், வளர்ந்தார் என்று அந்த டாக்குமென்டரி கூறுகிறது.
இந்த டாக்குமென்டரிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரோ இதை ஆதரித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவினரே எதிர்பாராத வகையில், அனில் ஆண்டனியின் கருத்து வந்துள்ளது. இதுகுறித்து அனில் ஆண்டனி கூறியுள்ளதாவது:
எனக்கு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ராகுல் காந்தியுடனோ அல்லது சோனியா காந்தியுடனோ ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள், அதிலும் பிபிசி போன்ற இங்கிலாந்து நாட்டு அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், நமது நாட்டு சட்ட அமைப்புகளை குறை கூறுவது என்பது நமது இறையாண்மையில் தலையிடுவது போலாகும். அதை நாம் ஆதரித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும்.
நமக்கு பாஜகவுடன் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், பிபிசியின் இந்த செயலை நாம் ஆதரித்தால் அது தவறானதாகி விடும் என்று கூறியுள்ளார் அனில் ஆண்டனி.
ஆனால் பிபிசி டாக்குமென்டரி குறித்து ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி வேறு விதமான கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், பகவத் கீதை என்ன சொல்கிறது.. உண்மை வெளி வந்தே தீர வேண்டும் என்று சொல்கிறது. இந்த விஷயத்திலும் உண்மை வெளி வந்தே தீரும். என்னதான் அதை மறைக்க முயன்றாலும், தடுத்தாலும், மிரட்டினாலும், தடை செய்தாலும், கட்டுப்பாடு விதித்தாலும் உண்மை வெளி வந்தே தீரும் என்று கூறியிருந்தார்.
ஆனால் பிபிசிக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவரின் மகன் கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
{{comments.comment}}