புதுடில்லி: ரயில்வே பணியை ராஜினாமா செய்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றம் பஜ்ரங் புனியா இருவரும் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஹரியானா சட்டசபை தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது காங்கிரஸ்.
இந்நிலையில், பாஜக எம்பி பிரிஜ்பூஷனுக்கு எதிராக டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் இன்று காங்கிரஸில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன வீட்டில் முறைப்படி இருவரும் காங்கிரஸ்சில் இணைந்தனர். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு ஆதரவாக மத்திய அரசு நிற்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் பக்கம் நிற்கிறோம். இவ்விருவரும் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
வடக்கு ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணிசெய்து வந்த வினேஷ் போகத் தற்போது தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.இது குறித்து வினேஷ் போகத் கூறுகையில்,"ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது" என தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் தான் அவர் பணியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}