பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்

Apr 12, 2025,05:57 PM IST

சென்னை: பாஜக-திமுக மறைமுகக் கூட்டு என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.



இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் விரோதம் மறைமுக கூட்டுக் கணக்குகளுக்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறிய போவது உறுதி!


குறைந்தபட்ச அரசியல் அறத்தைக் கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில் தான் கொள்கை பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.




ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர்கள் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊரலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பாஜக- திமுக மறைமுக கூட்டு என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளன.


திமுகவை மறைமுக கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப்பெரிய ஆச்சரியம் இல்லை.


 பிளவுவாத சக்திகளுக்கு சமரசம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்பந்த கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை.


2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் நாங்கள் தான் திமுகவிற்கு எதிரான ஒரே அணி என்று பாஜகவும் நாங்கள் தான் பாஜகவிற்கு எதிரான அணி திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். இனி திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.


தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். அதை நிரூபிக்கும் விதமாக, தங்கள் மனத்துக்குள் ஒரு தீர்க்கமான முடிவையும் ஏற்கெனவே எடுத்துவிட்டனர்.


நாம், ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவிற்கும் இடையே தான். மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.


தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், வீறுநடை போடுகின்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக, தமிழகத்தில் உண்மையான ஒரு மாற்றத்தை வேண்டி விரும்பி நிற்கும் கோடிக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தாய்மார்களும் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.


எனவே, பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுக.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி.


அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்


வாகை சூடுவோம்! எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!

news

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!

news

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

news

என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா

news

பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்

news

அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!

news

பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிகம் பார்க்கும் செய்திகள்