வேங்கை வயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.. பாஜக தலைவர் அண்ணாமலை

Jan 25, 2025,04:24 PM IST

சென்னை: வேங்கை வயல் வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூகவிரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, இரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்டது. தற்போது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


கடந்த டிசம்பர் 24,2022 அன்று, மேல்நிலை நீர் தொட்டியில் இருந்து தண்ணீரை பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில், மக்கள் பயன்படுத்திய குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, வேங்கைவயல் கிராமத்து இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர். மேலும், மேல்நிலை நீர்தொட்டியின் உள்ளே கழிவுகள் மிதப்பதையும் கண்டறிந்தனர்.




உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல்துறையின் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறத்தி வந்துள்ளன.


எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும் திமுக அரசுக்கும் எதிராக போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு, இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியது திமுக அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


எனவே  மார்க்ஸ் ரவி அவர்கள், பாஜகவை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருச்சி ஜி.எஸ். மணி அவர்கள் மூலம், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் தலைமையில் சிபிஐ விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி 24.2.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.  உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதை அடுத்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


கடந்த 29 3.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். சந்தியநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  இந்த ஒரு நபர் ஆணையம் கடந்த 14.9.2023 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் விசாரணை முழுமையாக முடித்து, இறுதி அறிக்கையை இன்று வரை தாக்கல் செய்யவில்லை.


கடந்த 16.04.2024 அன்று, இந்த வழக்கு தொடர்பாக பொதுநல மனுக்கள், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் தமிழக காவல்துறை பொறுப்பின்றிச் செயல்படுகிறது என்றும் எடுத்துக் கூறப்பட்டதை அடுத்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அமர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன்னர், விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.


ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு நபர் ஆணையமோ, சிபி சிஐடியோ விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. யார் மீதும் வழக்கு பதிவோ, குற்றப் பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை என்ற என்ற நிலையில் கடந்த 23.1.2025 அன்று, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இன்னும் கால அவகாச வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸ் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின.


இதனிடையே, 23.1.2025 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்த பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்த போது கடந்த 20.01.2025 அன்றே, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் மூவர் மீது 20.1.2025 அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், 23.1.2025 அன்று, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி அவகாசம் கேட்டது ஏன்?


குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு வழக்கு விசாரணையை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனு தாக்கல் செய்ய செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.


திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பது தான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்தவழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டங்ஸ்டன் போராட்டத்திற்குக் கிடைத்தது மாபெரும் வெற்றி.. அனைவருக்கும் நன்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆளுநர் ஆர்.என். ரவி. குடியரசு தின விருந்து.. அதிமுக, பாஜக பங்கேற்பு.. திமுக கூட்டணி புறக்கணிப்பு!

news

அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 11,608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்கு மொத்தமாக ரத்து!

news

ஜன நாயகன்.. காலையில் செல்பி புள்ளை.. மாலையில் நான் ஆணையிட்டால்.. அடுத்தடுத்து விருந்து வைத்த விஜய்

news

வேங்கைவயல் விவகாரம்.. சிபிஐ விசாரணை தேவையில்லை.. எஸ்ஐடி விசாரணை வேண்டும்.. விஜய்

news

பூஜை போட்டாச்சு.. மேலூர் அருகே பிரமாண்ட கட்டடத்திற்கு இடம் மாறுகிறது மதுரை மத்திய சிறை

news

பத்மபூஷண் விருது... குவியும் வாழ்த்துகள்.. ஆனால் அஜீத் குமார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

news

Republic Day: தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. டெல்லியில் கோலாகல விழா!

news

மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்