பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அக்கட்சியின் மிகப் பெரிய ஆதரவாக கருதப்படும் லிங்காயத்துகள் தங்களது ஆதரவை காங்கிரஸுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் இரண்டு சமுதாயத்தினர்தான் மிகப் பெரிய அளவில் உள்ளனர். ஒன்று லிங்காயத்துகள், 2வது ஒக்கலிகா சமுதாயத்தினர். இதில் லிங்காயத்து சமூகம் எப்போதுமே பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம்,அந்தப் பிரிவைச் சேர்ந்த எடியூரப்பாவின் சாதுரியத்தாலும், சாமர்த்தியத்தாலும், அவரது கடும் உழைப்பாலும் மொத்த சமுதாயத்தையும் பாஜக பக்கம் திருப்பி வைத்திருந்தார்.
ஒக்கலிகா சமுதாயமானது காங்கிரஸுக்கும், தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கும் சமமான ஆதரவில் இருக்கும் சமூகமாகும். இந்த இரு சமூகங்களும்தான் கர்நாடக அரசியல் வெற்றிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. அடுத்த பெரிய சமுதாயமான இஸ்லாமியர்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்கும்.
ஆனால் தற்போது அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் பாஜகவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் காத்திருப்பதாகவே தோன்றுகிறது. கர்நாடக லிங்காயத்து சமுதாயத்தின் மிக முக்கியமான அமைப்பான வீரசைவ லிங்காயத்து சங்கம், தனது ஆதரவை காங்கிரஸுக்கு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 80களிலிருந்து பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த லிங்காயத்து சமுதாயம் முதல் முறையாக காங்கிரஸ் பக்கம் போகிறது. இது எடியூரப்பா என்ற மிகப் பெரிய தலைவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பேரிடியாக கருதப்படுகிறது.
எடியூரப்பாவை அகற்றி விட்டு பி.எஸ். பொம்மை முதல்வராக்கப்பட்டதிலிருந்தே லிங்காயத்து சமுதாயத்தினர் பாஜக மீது அதிருப்தியடைய ஆரம்பித்து விட்டனர். இதில் இன்னும் உச்சமாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் தர பாஜக மறுத்தது அந்த சமுதாயத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. எடியூரப்பாவும் பாஜகவில் முக்கியத்துவம் இழந்த நிலையில்தான் இருக்கிறார். இதனால் தனது சமுதாயத்தை பாஜக ஒதுக்கி வருவதாக லிங்காயத்து தலைவர்கள் கருத ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில்தான் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வீரசைவ லிங்காயத்து சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்திலிருந்து ஒரு திறந்தநிலை கடித அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மே 10ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிங்காயத்து சமுதாயத்தினர் தங்களது வாக்குகளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் தொகையில் லிங்காயத்துகளின் எண்ணிக்கை 19 சதவீதமாகும். இதுவரை 9 முதல்வர்களை அந்த சமுதாயம் கொடுத்துள்ளது.
இன்று காலை காங்கிரஸ் த��ைவர்கள் ஷாமனூர் சிவசங்கரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் ஹுப்பள்ளி நகருக்குச் சென்று லிங்காயத்து மடாதிபதிகளைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் கடந்த வாரம் பெங்களூர் வந்த ராகுல் காந்தி, சங்கமந்தா கோவிலுக்கு விஜயம் செய்து வழிபட்டார். இது லிங்காயத்து சமுதாயத்தினரின் குருவாக கருதப்படும் பசவண்ணா என்று அழைக்கப்படும் பசவேஸ்வராவின் கோவிலாகும்.
பாஜகவின் மிகப் பெரிய பலமான லிங்காயத்துகளின் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் பெருமளவில் சாய்ந்தால் பாஜகவுக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும் என்பதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
{{comments.comment}}