ஒரு அடி மாநாடு.. அடுத்த அடி கோட்டை.. விஜய்யின் கற்பனை அதீதமாக இருக்கிறது.. திருமாவளவன்

Oct 28, 2024,08:59 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டு பேச்சு  அதீதமாக இருக்கிறது. ஒரு அடி மாநாடு, அடுத்த அடி கோட்டை என்ற அவரது கற்பனை அறிவியலுக்கு ஒவ்வாதது, இயற்கைக்குப் புறம்பானது, சாத்தியமில்லாதது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


விஜய்யின் முதல் அரசியல் பேச்சு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தன் பக்கம் இழுக்க விஜய் ஆர்வமாக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து தொல். திருமாவளவன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


சொல்லுதல் யார்க்கும் எளிது: நடிகர் விஜய் எப்படி செயலாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சொல்லுதல் யார்க்கும் எளிது. செய்வது என்பது கடினமானது. இதை அய்யன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அரசியல் அவ்வளவு இலகுவான களம் அல்ல.  எல்லாத் தொழிலிலும் இருப்பது போல அரசியலிலும் போட்டி இருக்கிறது. அரசியலிலும் சூழ்ச்சிகள் உண்டு. ஆனால், முன்கூட்டியே ஒன்றைத் தீர்மானிக்க முடியாத களம். கடைசி நேரத்தில் எதுவும் நிகழலாம் என்ற ஒரு களம் அரசியல் களம். 


நடிகர் விஜய் ஒரு முன்மொழிதலை வழங்கியிருக்கிறார். அவை அனைத்தம் ஏற்கனவே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப் பட்டவைதான். புதிதாக எதையும் அவர் சொல்லவில்லை. ஒன்றைத் தவிர. அந்த ஒன்று கூட்டணி ஆட்சிக்கான ஒன்று. அச்சாரம் போட்டிருக்கிறார். உண்மையிலேயே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையில் அந்த சூழலில் இந்த நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா என்பது ஐயம்தான். தற்போதைய சூழலில் அரசியல் உத்தியாக பயன்படுத்தியிருக்கிறார். 




இதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். எனவே இது எங்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையாக கற்பனை செய்ய முடியாது. உள்ளூடாக ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. திமுகவை, முதல் எதிரி என்று அறிவித்திருப்பதும், திமுக கூட்டணியை முறியடிப்பதுதான் விஜய்யின் உரையின் சாராம்சமாக இருக்கிறது. சலசலப்பை ஏற்படுத்த முடியுமா என்று தூண்டிலைப் போட்டுள்ளார் என பலரும் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக ,கூட்டணி வலுவாக இருக்கிறது. வலுவாக தொடரும்.


பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏன்?: பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்திருக்கிறார். பாசிச எதிர்ப்பு என்பது பாஜக எதிர்ப்புதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை. பாஜகவைத்தான அது அடையாளப்படுத்தும். பாசிசத்தை எதிர்க்கிறோம் என்றாலே அது பாஜக எதிர்ப்புதான். இதை அவர் நையாண்டி செய்கிறார் என்றால் பாஜக எதிர்ப்பை அவர் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அது அவரது கருத்துக்கு முரண்பாடாக இருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்று சொல்லும் அதே உரையில் பாசிசத்தை எதிர்ப்பவர்களை அவர் நையாண்டிக்குரியவர்கள் என்ற வகையில் பேசியும் இருக்கிறார். இரண்டுக்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. நக்கல் தொணியோடு நையாண்டித் தொணியோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.


பாஜக கோட்பாடுதான் பாசிசம். பாஜக எதிர்ப்புதான் பாசிச எதிர்ப்பு. அதை எதிர்க்கக் கூடிய அனைவரையும் அவர் நையாண்டி செய்கிறாரா என்று தோன்றுகிறது. அவரது நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது. பாஜக எதிர்ப்பில் அவருக்கு முரண்பாடு இருப்பதாக உணர முடிகிறது.


அரசியலுக்கு வருபவர்களை வாருங்கள் என்று சொல்லத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். அதுதான் ஜனநாயக பண்பு. ஆனால் திரையுலகில் பெற்றுள்ள புகழ் செல்வாக்கு அப்படியே கலையுலகத்திலிரு்நது அரசியல் உலகுக்கு வரும்போது பரிமாற்றம் பெறும் என்று சொல்ல முடியாது. அப்படியே கன்வர்ட் ஆகாது. இன்றைய சூழலில் அது சாத்தியமே இல்லை.


அறிவியலுக்கு ஒவ்வாத கற்பனை: ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்று அவரது கற்பனை அதீதமாக இருக்கிறது. கட்சி தொடங்கி மாநாட்டு அடியை எடுத்து வைத்து அடுத்த அடியை கோட்டையில் வைப்போம் என்று சொல்வது அறிவியலுக்கு ஒவ்வாதது, நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. படிப்படியாகத்தான் உயர முடியும். வேகமாக இயங்கலாம், வேகமாக இலக்கை அடையலாம்.. எவ்வளவு வேகமாக போனாலும் படிப்படியாகத்தான் அதை அடைய முடியும். 


ஜனநாயக சக்திகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும். மொழி, இனம், உண்ர்வு முக்கியமானதுதான். அதேசமயம், தீவிர மதவாத ஜாதிய கருத்து உள்ள தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. இந்த உணர்வுகள்ள தமிழராக அவர்கள் இருக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.


2026 சட்டசபைத் தேர்தல்: 5 முனைப் போட்டி.. யார் யார் சேருவாங்க.. சிதறப் போகும் வாக்குகள் யாரோடது?


திருமாவளவன் அறிக்கை


இதுதவிர ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் திருமாவளவன். அந்த அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள்  27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில்  நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.  சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார்.


தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர்  ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை! 


'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள். 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர்,  'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.


ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது.


அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா?  அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?


தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில்  அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை  வெடித்தது ? 


பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு? 


" கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. 


"திமுக எதிர்ப்பும்  திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது.


அவரது உரையில் வெளிப்படும்  "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே! குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே!  ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. 


ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். 


ஒட்டுமொத்தத்தில்,  பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Half yearly exam: டிசம்பர் 24 டூ ஜனவரி 1.. 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை.. கல்வித்துறை

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்