- மீனா
சென்னை: கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது என்பார்கள்.. அதேபோலத்தான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றும் சொல்வார்கள். சிறு துளி சேர்ந்துதான் பெரு மழை வருகிறது.. இந்த பிரபஞ்சத்திலேயே மிகச் சிறிய புள்ளிதான் நம்ம பூமி... ஆனால் மற்ற எல்லா பூமியையும் விட நம்ம பூமியில்தானே மனிதனால் வாழ முடிகிறது. எனவே "சிறு" என்பதுதான் எல்லாவற்றையும் விட பெரியது என்பதே நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய பாடம்.
அப்படிப்பட்ட ஒரு "சிறு" பற்றித்தான் நாம பார்க்கப் போகிறோம். பெயரிலேயே "சிறு" என்று இருப்பதினாலோ என்னவோ நாம் யாரும் இதை பெரிதாய் கண்டுகொள்ளாமல் இருந்தோம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. எல்லாராலும் , அறிவுறுத்தப்படுவதினால் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.
நம்முடைய ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ஒன்று இது என்றால் அது மிகையாகாது. நம் முன்னோர்களும் இதை அதிகமாய் எடுத்துக் கொண்டதினால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லாமல் வாழ்ந்தார்கள். அதனால் அன்று ஆரோக்கியம் நிறைவாகவும் மருத்துவமனைகள் குறைவாகவும் இருந்தது. ஆனால் இன்று மருத்துவமனைகளை காட்டிலும் நம் உடலில் உள்ள நோய்கள் அதிகமாக இருக்கிறது. "உணவே மருந்து" என்று வாழ்க்கை முறையில் வாழ்ந்த நம் முன்னோர்களை நாம் பின்பற்றாததினால் இன்று "மருந்தே உணவாக "எடுத்துக் கொள்ளும் அவல நிலையில் நாம் எல்லாரும் இருக்கிறோம் என்று ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.
அட பில்டப் ரொம்ப லென்த்தா போகுதேம்மா.. என்னான்னுதான் சொல்லுங்களேன்.. என்று நீங்க கேட்கும் மைன்ட் வாய்ஸ் எங்களுக்கும் கேட்குது.. உங்களுக்கும் இது என்னவா இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு தானே. இந்த ஆவலை தான் எதிர்பார்த்தேன். இப்ப சொல்லிடுறேன் கேட்டுக்கோங்க. நம்முடைய ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும்ந"சிறுதானியத்தை" பற்றி தாங்க சொல்லப் போறேன்.
கம்பு ,சோளம், கேழ்வரகு, திணை ,வரகு, குதிரைவாலி, கொள்ளு, சாமை இவைகளே நம்முடைய சிறுதானிய வகைகளாகும். இந்த சிறுதானியங்களில் நமக்கு வரமாய்க் கிடைத்த வரகரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நம் இதயத்தை பலப்படுத்தி, நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, செரிமான பிரச்சனையை சரிப்படுத்தி, உடல் பருமனையும் குறைத்து நம் உடலில் பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் செய்கிறது.
எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்படுகிறீர்களா.. இந்த வரகரிசியைப் பயன்படுத்த ஆரம்பிங்க.. நிறைய மாற்றத்தைக் காண்பீங்க. அற்புதங்கள் பலவற்றைத் தரும் இந்த வரகரிசியை வைத்து தயாரிக்கப்படும் வெண் பொங்கல் குறித்த ரெசிப்பிதான் உங்களுக்காக இப்போது தருகிறோம். பார்க்கலாமா?
வரகரிசி வெண்பொங்கல்:
முதலில் ஒரு கப் அளவு வரகரிசியை எடுத்து அதை நான்கு, ஐந்து முறை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். பிறகு 1/4 கப் பாசிப்பருப்பை எடுத்து லேசாக வறுத்து, இவை இரண்டையும் சேர்���்து மறுபடியும் ஒரு தடவை நன்றாக கழுவி கொள்ளவும். ஒரு கப்புக்கு மூன்று கப் தண்ணீர் என்ற விகிதத்தில் குக்கரில் இதை சேர்த்து இதனுடன் சிறிது இஞ்சியும் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
தாளிப்பதற்கு வேறு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் இரண்டு ஸ்பூன் நெய்யில், கடுகு, கருவேப்பிலை ,சீரகம், மிளகு, முந்திரி பருப்பு இவர் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் வேகவைத்து வரகரிசி பொங்கலையும் சேர்த்து மிதமான தீயில் நெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி விடவும்.
இப்போது வரகு அரிசி வெண்பொங்கல் தயார். பச்சரிசியில் வெண்பொங்கல் சாப்பிட்டு கொண்டிருக்கும் நமக்கு இப்படி வரகரிசியில் வெண்பொங்கல் செய்து சாப்பிடும் போது சுவையுடன், ஆரோக்கியமும் அதிகமானால் நல்லது தானே. முயற்சி செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
வரகரிசி -1 கப்
பாசிப்பருப்பு-1/4 கப்
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
இஞ்சி-சிறிய துண்டு
வத்தல்-1
கடுகு, கருவேப்பிலை, முந்திரி பருப்பு-தேவைக்கேற்ப.
என்னங்க, சுவையும், மனமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த பொங்கலை செய்வதற்கு கிளம்பிட்டீங்களா. நானும் போய்ட்டு வர்றேன்.. வரகரிசி தீர்ந்து போச்சு, வாங்கிட்டு வரணும்!
{{comments.comment}}