- எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
இனி எனக்கு யாருமே இல்லையா... ? 16 வயது சுந்தரி என்ற நான், இவ்வுலகில் இனி தனித்து விடப்பட்டு விடுவேனா...!!! அனாதையாய் அலையப் .... போகிறேனா ? என் பள்ளி படிப்பு அவ்வளவுதானா...!!! என் வாழ்க்கை பயணம், இனி கரடு முரடு தானா...?
ஆள் அரவமற்ற காட்டுக்குள், கொடூர மிருகங்களுக்கு நடுவில், தனித்து விடப்பட்டவளாய் , ஒரு நொடி உணர்ந்தவள், சட்டென்று சுதாரித்துக் கொண்டு, இனி என்ன செய்வது என சிந்தித்தாள்.
அம்மாவின் மூச்சுத் திணறல் அதிகரித்துக் கொண்டே ..... செல்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகி, இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.
டாக்டரிடம் "அழுது ஆர்ப்பாட்டம் " செய்து விட்டாள். அவர்களும் முயற்சித்தார்கள். எங்குமே ஸ்டாக் இல்லையாம்.
தெரிந்தவர்களிடம், தனியார் ஏஜென்சி மூலம், முயற்சிக்க சொல்லியாகிவிட்டது. ஒரு பலனும் இல்லை. அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள்.
இனி நான் என்ன செய்வேன்...!!! எங்கிருந்து வந்தது இந்த கொரோனா.? ஏன் வந்தது.??? உலகையே ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறது.?? திட்டமிட்டு , பரப்பப்பட்ட வைரஸ் என சொல்கிறார்களே..!!! உண்மையா..??
ஐயோ...இரண்டாவது அலையில், கொத்துக்கொத்தாய் மரணிக்கிறார்களே. பக்கத்து வீட்டில் போன வாரம், அம்மா ,அப்பா ,மகன் மூவரும் பலியானார்களே...!!!
நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது சுந்தரிக்கு.
இன்னும் எவ்வளவு நேரம் , அம்மாவின் உயிர் ...அவள் உடலில் இருக்கும் ,என தெரியவில்லை. அம்மாவும் போய் விட்டால்... நான் எப்படி இந்த கொடூர உலகில்... இந்த வயதில்...
கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை சுந்தரிக்கு.
"ஏதாவது செய்தாக வேண்டும். ...என் அம்மா உயிர் பிழைத்தே ....ஆக வேண்டும். "
உலகின் அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள் சுந்தரி. ஏதோ ஒரு வழியில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்து விடாதா..!!! அம்மா மீண்டு வந்து விட மாட்டார்களா..!!!
மின்னல் வேகத்தில் அடுத்த தெரு , கவிதா அக்காவின் , ஞாபகம் வந்தது. போன் செய்தாள். சுந்தரிக்கு வார்த்தைகள் வரவில்லை. அழுகை மட்டுமே வந்தது. சொல்லுவதற்குள் நெஞ்சு அடைக்கிறது. மூச்சு முட்டுகிறது...!!!
ஒருவாரு சமாளித்து, விஷயத்தை சொன்னாள். இன்னும் ஒரு மணி நேரம் கூட அம்மாவால் தாங்க முடியும் என தோன்றவில்லை.. அக்கா...
அம்மா கடைசி கட்டத்தில் இருக்கிறாள். எப்படியாவது , ரமேஷ் அப்பாகிட்ட சொல்லி சிலிண்டருக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்க அக்கா. செய்தே ஆகவேண்டும் அக்கா...... எவ்வளவு ரூபாய் என்றாலும் பரவாயில்லை அக்கா......
ஐயோ...அப்படியா...!!! சிலிண்டர் தீர்ந்து விட்டதா..!!!கவலைப்படாத சுந்தரி. நான் அவர்கிட்ட சொல்றேன் . நாங்கள் உங்க அம்மாவிற்கு, அவர் எங்களுக்கு செய்த உதவிக்கு, ரொம்பவும் கடமைப்பட்டுள்ளோம்.
கவிதா அக்காவின் கணவர் , அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரி பொறுப்பில் உள்ளவர்.
அப்பா இறந்து, ஒரு மாதம் கூட ஆகவில்லை . அப்பாவிற்கு காரியம் செய்து விட்டு, இப்போதுதான் உறவினர்கள் ஊர் போய் சேர்ந்துள்ளார்கள். எவ்வளவு முயன்றும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அம்மாவையாவது காப்பாற்றியே தீர வேண்டும். இல்லையெனில் நானும் அவர்களுடனே போய் சேர வேண்டும்.
அம்மாவின் மூச்சுத் திணறலை பார்க்க சகிக்கவில்லை .இந்த வேதனையை பார்ப்பதே பெரிய வேதனையாய் இருந்தது. அம்மாவின் கையை நான் அழுத்தி, பிடித்துக் கொண்டிருந்தேன்.
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள காற்று.. சுத்தப்படுத்தப்பட்டு, புட்டிக்குள் அடைக்கப்பட்டு, உயிர் மூச்சாய், ஒரு லட்சம் ,இரண்டு லட்சம் என விற்கப்படுகிறதே...!!! அதுவும் கிடைக்கவில்லையே....!!!
மருத்துவமனையின் சூழல் ,சுந்தரிக்கு ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்திக் கொண்டே.... இருந்தது. ஒரு பக்கம் மகனை காப்பாற்ற அம்மா..., மறுபக்கம் கணவருக்காக மனைவி.... ,மற்றொரு பக்கம் அப்பாவிற்காக மகன் ...., என மருத்துவமனையில், வாடி வதங்கிய... முகத்தோடு பலர் தவித்துக் கொண்டிருந்தார்கள்..
மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மத்தியில் ,போதுமான ஜன்னலும், இயற்கைக் காற்றும் இல்லாத நிலையில்,...
அம்மாவை வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா?. ...புங்க மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா? டாக்டர்கள் விடுவார்களா.? இப்படி சாவதை விட , புங்க மரத்தடிக்கு சென்றாலாவது , நல்ல காற்று கிடைக்குமே. கொஞ்சம் மூச்சு விட முடியுமோ.....!!!! அம்மா உயிர் பிழைத்தாலும் பிழைக்கலாம்...... சாத்தியம் இருக்கு.... மனதில் பலவித குழப்பங்கள்.
மரங்களின் மகத்துவத்தினை மக்கள் உணர்வதே இல்லை.
அம்மா கை அசைக்கிறாள்.... ஏதோ சொல்ல வருகிறாள்.... மூச்சு முட்டுகிறது.சொல்ல முடியவில்லை.
என் அம்மா.... இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பது, அப்பட்டமாக தெரிகிறது.
"டாக்டர்."............ மருத்துவமனையே அதிர்ந்து போனது சுந்தரியின் கதறலை கண்டு. வாழ்க்கையின் எல்லைக்கே சென்று விட்டாள் சுந்தரி. டாக்டர், நர்ஸ் ஓடி வந்தார்கள்.
"என் அம்மா பிழைத்தே.... ஆக வேண்டும் டாக்டர் .ஏதாவது செய்யுங்கள் டாக்டர் ...ஏதாவது செய்யுங்கள்.... என்று டாக்டரின் காலை பிடித்து கதறினாள். மன்றாடினாள். அருகில் நின்ற அனைவரும் கண் கலங்கினர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லையே... என்னம்மா செய்வது. என்னால் முடிந்தவரை முயற்சித்து விட்டேன் சுந்தரி.
அந்நேரத்தில் சுந்தரியின் போன் ஒலித்தது. எதிர்பக்கம் கவிதா. அக்கா...... என அலறினாள் சுந்தரி.
கவலைப்படாத சுந்தரி. சிலிண்டர் கிடைச்சிருச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த ஆஸ்பத்திரிக்கு வந்துரும்.
அதுவரைக்கும் அம்மாவின் உயிர் தாங்குமானு... தெரியலையே அக்கா... சீக்கிரம் வரச் சொல்லுங்க.... அக்கா.
போனை வைத்தாள் சுந்தரி. டாக்டரின் காலை மறுபடியும் பற்றினாள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வந்துவிடுமாம் டாக்டர். அதுவரை என் அம்மாவின் உயிரைக் காப்பாற்றுங்கள் டாக்டர்....
டாக்டர் செய்வதெரியாது திகைத்து நின்றார். அந்த அம்மாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே.
சுந்தரியின் காதறலையும்... ஆதரவற்ற நிலையினையும் அறிந்த ஒரு தாய், தன் கணவரின் சிலிண்டரை சற்று நேரத்துக்கு தானம் தர முடிவு செய்து, டாக்டர் ....என் கணவரின் சிலிண்டரை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த சிலிண்டர் வரும் வரை. பரவாயில்லை.. அவரை பார்த்துக் கொள்ளலாம் . நாங்கள் எங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டோம்.
பாவம் ...அப்பாவை இழந்த பொண்ணு...!!! அம்மாவாவது....
டாக்டர் பம்பரமாய் சுழன்றார்.
சுந்தரி கண்களை மூடிக்கொண்டாள். என் அம்மாவின் கடைசி மூச்சுக்கு முன், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட வேண்டுமே ...!!! இறைவா.... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் போனது. பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் துணைக்கு அழைத்தாள் சுந்தரி.
கண் முன் பசுமையான வேப்ப மரங்களும், புங்க மரங்களும், மா மரங்களும், மற்ற அடர்ந்த அனைத்து மரங்களும், அப்பப்பா , உயிர் மூச்சினை, இப்பிரபஞ்சத்தில் பரப்பி வியாபித்துக் கொண்டிருந்தது. அம்மா ... அங்கு சுகமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
யாரோ... தன்னை தொடுவதை உணர்ந்த சுந்தரி , திடுக்கிட்டு, கண் விழித்தாள்.
எதிரே......டாக்டர் . அவர் முகத்தில் புன்னகை. சுந்தரியின் முகத்தில் பிரகாசம்.
அம்மாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சுவாசம் சீராக போய்க்கொண்டிருந்தது.
ஓடிச் சென்று அம்மாவின் முகத்தில் முகம் புதைத்தாள் சுந்தரி . அம்மா வாசம்.... இனி என்றும் எனக்கே எனக்கு..!!!
சுந்தரி டாக்டரின் காலை தொட்டு... நன்றி தெரிவித்துவிட்டு , திரும்பினாள். கவிதா அக்கா கூறிய சிலிண்டர் வந்து கொண்டிருந்தது. தானம் தந்த அந்தத் தாயின் முகத்தில் மகிழ்ச்சி.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}