டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழ்நாட்டில் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 25ம் தேதி எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் என டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக கட்சி அலுவலகத்தை பார்ப்பதற்காக தான் வந்தேன். யாரையும் சந்திக்க வரவில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து அன்றே 3 கார்களில் மாறிச்சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் சில அதிமுக முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
அதன்பின்னர் டெல்லியில் இருந்து சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசவேயில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமித்ஷா பேசுகையில், தென்னிந்தியாவில் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, தற்போது திமுக அரசின் கொள்கையால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் தேசிய கல்விக்கொள்கையையும், மருத்துவம், பொறியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. அதற்கு 0.0001 சதவீதம் கூட அநீதி நடக்க வாய்ப்பு இல்லை. அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. சரியான நேரம் வரும்போது. அதை தெரியப்படுத்துவோம் என்றார்.
{{comments.comment}}