தமிழ்நாட்டை புறக்கணித்த .. மத்தியஅரசின்.. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்!

Jul 23, 2024,07:08 PM IST

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று வர்ணித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைப் புறக்கணித்த பிரதமர் மோடி நடத்தும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:


இது என்ன பீகார் - ஆந்திரா - பாஜக ஒப்பந்தமா!




1. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.


அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.


வன்மத்தைக் கக்கும் நிதிநிலை அறிக்கை




2. சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான். ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.


3. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.


தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமும் இல்லை




4. ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய இரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.


5. பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில், 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில், ஒன்றிய அரசின் பங்கு 1.5 இலட்சம் ரூபாயாகவும், இதில் மாநில அரசால் சுமார் 12-14 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டிற்கு செலவிடப்படுகிறது.


எனவே, ஒன்றிய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும். திட்டத்திற்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமானதல்ல. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.


மாநில பட்ஜெட்டின் நகல்  இது




6. ஒன்றிய அரசு அறிவித்த முக்கியத் திட்டங்களைப் பார்க்கையில், நமது மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் நகல்போலத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக – ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான (தோழி) விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், நீரேற்று புனல் மின் உற்பத்திக் கொள்கைகள் போன்றவை தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ஏற்கெனவே இடம்பெற்றவை. குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு, நாடு முழுவதும் 20 இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.


7. ஒன்றிய நிதியமைச்சர் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை நகல் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர், நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்?


பெயரளவுக்கு குறைக்கப்பட்ட வருமான வரி விகிதம்




8. ஒன்றிய அரசு, மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு அறிவித்துள்ளது. எனினும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எனவே, ஒன்றிய அரசானது, முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பினை ஈடுசெய்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


9. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு




முன்னதாக திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசும்போது தமிழ்நாட்டைப் புறக்கணித்த மத்திய அரசு நடத்தும், நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணிக்கப் போகிறேன். இந்தக் கூட்டத்திற்காக தயாராகி வந்தேன். ஆனால் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மத்திய அரசின் கூட்டத்தைப் புறக்கணிப்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 


முதல்வரின் அறிவிப்பால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தின்போது லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் இந்தியா கூட்டணி தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்