சென்னை: திமுகவில் பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவிலும் பல அணிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் என்று மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்களை சத்தியமூர்த்தி பவனில் பார்த்து அவர்களிடம் கையெழுத்து பெற்றார்.
இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன். மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக ஐ.டி, இ.டி போன்ற விசாரணை அமைப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சட்டப்படி சந்திப்போம்.
இனியும் ஓர் உயிர் கூட நீட் தேர்வால் பறிபோகக் கூடாது. நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவு சிதைக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்ற இலக்கோடு, தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் அட்டைகளிலும், பேன் நீட் இணையதளத்திலும் கையெழுத்துகளை பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நீட் தேர்வுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் இன்று கையெழுத்துகளை பெற்றோம்.
6 வருடங்களில் நீட் தேர்வு காரணமாக 22 குழந்தைகள் இறந்துள்ளார்கள். அனிதாவில் ஆரம்பிச்சு ஜெகதீசன் வரைக்கு இறந்திருக்காங்க. திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னோம். உண்மையாக அதற்கான நடவடிக்கைக்களை எடுத்து வருகிறோம். இது தனிப்பட்ட ஒரு கட்சி சார்ந்தது அல்ல. ஓட்டுமொத்த மாணவர்களுடையது. இந்த 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று திமுக இளைஞரணி மாநாட்டில் தலைவரிடம் ஒப்படைத்த பிறகு குடியரசுத்தலைவரிடம் இந்த கையெழுத்துக்களை அனுப்புவதுதான் எங்களின் இலக்கு.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். அதை ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். தற்போது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். பேன் நீட் என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 3 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். போஸ்ட் கார்டுகள் மூலம் இதுவரை 8 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்காக வந்துள்ளேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கையெழுத்து வாங்க விருக்கிறோம்.
அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து நீட் தேர்வுக்கு கையெழுத்திட வேண்டும் என கேட்க உள்ளேன். அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து நீட் விலக்குக்கு கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் ஐடி ரெய்டுகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உள்ளது. அதே போல் பாஜகவில் உள்ள ஒரு அணிதான் ஐடி அணி, அமலாக்கத்துறை உள்ளிட்டவை. அவர்கள் அவர்களது பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள், இதை சட்டப்படி சந்திப்போம். கடந்த மூன்று மாதகாலமாக அவர்களின் செயல்பாடுகள் அதிகமாக தான் உள்ளது என்றார் உதயநிதி ஸ்டாலின்.
{{comments.comment}}