சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு முதல் முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிலும் முதல் முறையாக தோழர்களே என்று விளித்து விரிவான கடிதம் தீட்டியுள்ளார். அதில் வீரத்தோடும், விவேகத்தோடும், எச்சரிக்கையுடனும் களமாடுவோம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கிய அங்கம் வகிப்பது தொண்டர்களுக்கு கடிதம் தீட்டுவது.. அந்தக் காலத்துத் தலைவர்கள் வரை இந்தக் காலம் வரை கடிதம் எழுதாத தலைவர்களே கிடையாது. இப்படி தொண்டர்களுக்கு மடல் தீட்டுவது அவர்களின் மனதோடு தலைவர்களை நெருக்கமாக வைத்திருக்க உதவும். இந்த கடிதம் தீட்டும் கலையில் வித்தகராக திகழ்ந்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதிதான். அவரது உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள், கேள்வி பதில் பாணி அறிக்கைகள் உலகப் புகழ் பெற்றவை.
அந்த வரிசையில் இப்போது விஜய்யும் தனது தொண்டர்களுக்கு மடல் தீட்டியுள்ளார். அவரது முதல் மடல் இதோ:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே வணக்கம்.
உங்களை நானும் என்னை நீங்களும் நினைக்காத நாள் இல்லை. அவ்வளவு ஏன் நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில் தான் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை அரசியல் ரீதியாக சட்டபூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும் ஒரு லட்சிய கனல்.
இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்ட திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால் நம் அரசியல் களப்பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளார்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே?
நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. இன்னும் அது சரியாக சொல்ல வேண்டுமானால் இது நம்முடைய கொள்கை திருவிழா. அதுவும் வெற்றி கொள்கை திருவிழா. இப்படி சொல்லும் போதே ஒரு எழுச்சி உணர்வு நாம் நெஞ்சில் தொற்றிக் கொள்கிறது. இது தன் தாய் மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வது தான்.
இந்த வேலையில் ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனதில் படிய வைத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பான மனிதனைத் தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனை தான் நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாக திகழும் மனிதனை தான் மக்கள் போற்றுவர். ஆகவே நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி மாநாட்டில் பங்கேற்பது வரை நாம் கழகத்தினர் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.
நம் கழகம் மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும்படை. இளஞ்சிங்கப்படை, சிங்க பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும் படை. ஆகவே நம்மிடம் உற்சாகம் இருக்கலாம், கொண்டாட்டம் இருக்கலாம், குதூகலம் இருக்கலாம். ஆனால் படையணியினர் ஓரிடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமல்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.
இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா, களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்கு புரியும், தமிழக வெற்றிக்கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல என்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றிக்கான போகிற கட்சி என்பதை நம்மை எடை போடுவோரும் இனிமேல் புரிந்து கொள்வர்.
மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக நின்று களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப்பணிகள் வேறு, அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம் அரசியல் களத்தில் வேகமாய் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், எதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களம் ஆடுவது இன்னும் அவசியம். இவை அனைத்தையும் உள்வாங்கி உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டு பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அது சார்ந்த சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடங்கித் தொடர வாழ்த்துகிறேன்.
இந்நிலையில் மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கி விட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்க போகும் சந்தோஷ தருணங்களை இப்போதே மனம் அளவிட தொடங்கிவிட்டது. வி சாலை என்னும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.
பெரியார் நினைவிடம் சென்று தனது முதல் அஞ்சலியை செலுத்தி அசத்திய விஜய் இப்போது கலைஞர் கருணாநிதி பாணியில் மடல் தீட்டி தொண்டர்களுக்கு உற்சாகமும் ஊட்டியுள்ளார். அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் எதிர்த் தரப்பு தலைவர்களை மேலும் உன்னிப்பாக அவரை நோக்கித் திரும்ப வைத்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}