67ல் ஆகப் பெரும் அதிர்வு.. 77ல் அரசியல் அதிர்வு.. 2026ல் நாம் அமைப்போம் புதிய பாதை.. விஜய் அழைப்பு!

Feb 02, 2025,06:05 PM IST

சென்னை: பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் எழுச்சியை மேற்கோள் காட்டி தமிழக வெற்றிக் கழகமும் அதேபோன்ற மாபெரும் வரலாற்றை 2026 தேர்தலில் படைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் கட்சித் தலைவரான விஜய்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இன்றுடன் 2வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் ஒன்றை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


இதயம் மகிழும் தருணத்தில் உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கம். ஆம் தமிழக வெற்றிக்கழகம் என்னும்அரசியல் பெரும்படையை கட்டமைத்தது பற்றி அறிவித்து இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வந்த நாம் அரசியல் களத்தை கையாளத் தொடங்கி இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்.




கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் அளந்து நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். மக்களுக்கான அரசியலை மக்களோடு மக்களாக நிற்பதை மக்களுடன் நின்று அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கை திருவிழாவானது. அதில் தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களை மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை மாபெரும் செயல் திட்டங்களை அறிவித்தோம். இதோ இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை ஏகடியங்களை கடந்திருப்போம். எதற்கும் அஞ்சாமல் எதைக்கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று நிதானித்து நேர்மையாக நடை போட்டு வருகிறோம்.


குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலை தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம் தனி மனிதர்களை விட தனித்து உயர்ந்தது மக்கள் அரசியல் மட்டுமே.


தொடரும் இப்பயணத்தில் கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்திற்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.


தமிழக வெற்றி கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் மத்தியில் அவர்களுக்கு என தனி பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படி தான் வருகிற 2026 தேர்தல்.


இந்த வேளையில் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் பொருட்டு தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்ட பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


மக்கள் பணி வாயிலாக நம் மக்களிடையே புதிய நம்பிக்கை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும் இருந்தும், உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன்.


அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோர்த்து நமது வலியை நாட்டுக்கு பறை சாற்றி அதிகார பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெரு நிகழ்வை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி நீங்கள் இப்போதே உழைக்க தொடங்க வேண்டும்.


மக்களோடு சேர்ந்து மக்களோடு மக்களாக தொடர்ந்து உழைத்தால் தான் தமிழக அரசியலின் கிழக்கு திசையாகவும் கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக்கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றிய காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டும் மக்களுடன் நிற்காமல் உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பது தான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.


1967 இல் தமிழக அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுடன் ஒரு ஒரு பெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர் 1977-ல் மீண்டும் ஒரு அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும் தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே இந்த பெரு வெற்றிக்கான அடிப்படை காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்கு தயாராகி வருகின்றனர்.




தோழர்களே தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம் நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்.


இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம்.  வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.


தவெகவில் புதிய மாநில நிர்வாகிகள் கடந்த சில நாட்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மாவட்டச் செயலாளர்களும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்