சென்னை: நடிகராக இருந்து இப்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள விஜய்யின் செயல்பாடுகள் வழக்கமான அரசியல்வாதியாக இல்லை. படு வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் கொள்கை என்று அவர் அறிவித்து விட்டுப் போய் விட்டார். ஆனால் இன்று வரை விடாமல் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. சீமானோ கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் படு கூலாக அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஸ்டைலில் தான் விஜய் போகிறார் என்பது பலரது கணிப்பு. ஆனால் விஜயகாந்த்திடம் இல்லாத மிகப் பெரிய ஒன்று விஜய்யிடம் உள்ளது.. அது முன் கோபம் அறவே இல்லாமல் படு நிதானமாக, துல்லியமாக, அழுத்தமாக அடியெடுத்து வைப்பது. இதுதான் பல தலைவர்களை டிஸ்டர்ப் செய்வதாக சொல்கிறார்கள்.
காரணம், ஒரு தலைவரை தப்பு செய்ய வைத்தால்தான் எதிர்த் தரப்பு அதை பயன்படுத்தி ஏறி மிதித்துக் கொண்டு போக முடியும். அதைத்தான் விஜயகாந்த்திடம் செய்தனர். விஜயகாந்த்தை டிரிக்கர் செய்தால் அவர் தவறு செய்வார் என்று துல்லியமாக கணித்து அதைச் செய்தனர்.. அதேபோலவும் நடந்தது.. அதன் பிறகு நடந்தது வரலாறு. ஆனால் இந்தத் தவறுகளை கண்டிப்பாக விஜய் செய்ய வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.. காரணம், எல்லாவற்றையும் புரிந்து வைத்துக் கொண்டுதான், விஜய் களத்துக்கே வந்துள்ளார் என்று விவரம் பரிந்தவர்கள் புன்னகைக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் என்றாலே பெயருக்கேற்றவாறு வெற்றியும் அவர் பின்னாடியே சேர்ந்து வரும். சரி இந்த வெற்றி எப்படி வந்தது. விஜய் என்ற பெயருக்காகவே வெற்றி வந்ததா இல்லை. பெயருடன் விஜய் பேசும் பஞ்ச் டயலாக், துள்ளலான டான்ஸ், கொஞ்சலான அவரது நடிப்பு, என அனைவரையும் கட்டிப் போட வைத்தது. குறிப்பாக விஜய் திரையில் பேசும் வசனங்களுக்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் பக்கா மாஸ்.
அதிலும் விஜய் பேசிய வசனங்களில் தத்துவத்தை மட்டும் எடுத்துக் கூறாமல் தத்துவத்தோடு கலந்த அரசியல் வாழ்க்கையையும் உணர்ச்சி பெருக்கோடு அப்பவே பேசி இருக்கிறார் விஜய். இவர் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் குஷி, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் லவ் சப்ஜெக்டுகளில் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார். இதனைத் தொடர்ந்து பகவதி படத்திலிருந்து திருமலை, துப்பாக்கி, சர்க்கார், தலைவா, மெர்சல், பிகில், மாஸ்டர், உள்ளிட்ட பல்வேறு படங்களில் உணர்ச்சி பெருக்கோடு அரசியல் சார்ந்த வசனங்களை பேசி அனைவர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் விஜய்.
மக்களையும், அரசியலையும் மனதில் வைத்து விஜய் பேசிய பன்ச் வசனங்கள் பல..
புதிய கீதை படத்தில், மக்களின் தேவைக்காக குரல் கொடுத்த விஜய் எவ்வளவு உயரத்திற்கு போனாலும்.. நான் நானாகவே இருப்பேன்.. என வசனம் பேசி இருப்பார்.
ஒரு கிறிஸ்து பைபிள் தெரிஞ்சு இருக்கானோ இல்லையோ ஒவ்வொரு இந்திய குடிமகன் அடிப்படை சட்டம் தெரிஞ்சிக்கணும்.
தமிழன் படத்தில் அன்றாடத் தேவைகளுக்காக மக்கள் மார்க்கெட்டிற்கு போயிட்டு வர்ற மாதிரி, இனி உரிமைகளுக்காக நீதிமன்றம் தேடி வர்ற காலம் வரணும் என மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுத்திருப்பார் விஜய்.
பைரவா படத்தில், அரசியல்வாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க களத்தில் இறங்கிய விஜய், தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத் தான் அள்ளு அதிகமாக இருக்கணும், இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு என்கிட்ட இருக்குது.. அது சொன்ன வாக்கை காப்பாற்றுவது.. எனக் கூறி நேரடியாகவே அரசியல் பேசியிருப்பார்.
போக்கிரி படத்தில் போலீஸாக இருக்கும் விஜய், ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என தான் அரசியல் களத்தில் முடிவெடுக்கும் முறை குறித்து பேசி இருப்பார்.
ஆதி படத்தில் எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கம்..சாவு நெனச்சா வரும்…சாதனை
ஜெயிச்சாதான் வரும்…ஜெயிக்கனும்
எல்லாத்தையும் விட மேலே..
தலைவா படத்தில் விஜய் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த பஞ்ச் டயலாக்களில் மூழ்கியிருப்பார்.அதில் விஜயை புகழ்ந்து பேசும்போது நீங்க அண்ணாவையே மிஞ்சிட்டீங்க, டைம் டு லீட் என்ற வசனங்கள் இடம் பெற்று இருந்ததை அடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது தலைவா திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்த வசனங்கள் நீக்கிய பிறகே படம் திரையிடப்பட்டது. நீ வேற நாடு நான் வேற நாடு இல்ல டா… எல்லாரும் ஒரே நாடு, இந்தியா என பேசியது அனைவரின் உணர்ச்சியையும் தூண்ட வைத்தது.
ஒத்த ஆள் கூட்டமா மாறுறதும்,, கூட்டம் ஒத்த ஆளா மாறுறதும்.. இப்போல்லாம் ஒரே நாள்ல நடக்கும்.. தலைவன் என்றது வெறும் வார்த்தை அல்ல.. ஒரு தலைமுறையோட மொத்த நம்பிக்கை.. இப்படி அரசியல் பேசியது.
கத்தி படத்தில் நாம சாப்பிட்டு பசி தீர்ந்ததுக்கு அப்புறம் சாப்பிடற அடுத்த இட்லி இன்னொருத்தவங்களோடது என கம்யூனிஸ்ட் குறித்து பேசி இருப்பார்.
திரையரங்கமே கரவொலி, விசில் சத்தத்தில் அதிரும் வேளையில் விஜய் பேசும் பஞ்ச் டயலாக் மாஸ். அதிலும் மெர்சல் படத்தில் ஏழு சதவிகிதம் ஜிஎஸ்டி வாங்குகிற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா கொடுக்கிறப்ப, 28% ஜிஎஸ்டி வாங்குற நம்ம நாட்டுல ஏன் மருத்துவத்தை இலவசமாக கொடுக்க முடியல என மத்திய அரசை கேள்வி எழுப்பும் வகையில் பேசி இருப்பார்.
அதேபோல் சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் உசுப்பேத்திரவங்க உம்முனும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் எனக் கூறியிருந்தார். இந்த டயலாக் இப்போது விஜய் அரசியல் வாழ்க்கையில் பக்காவாக பொருந்துகிறது. ஆனால் விஜய்யின் அரசியலில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கலாம்.. அதாவது சினிமா மூலம் கிடைத்த அறிமுகத்தை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளாரே தவிர அதன் மூலம் கிடைத்த புகழை அவர் அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை. அவரது பட வசனங்கள் எதையும் அவர் அரசியல் பேச்சில் குறிப்பிடவில்லை. சினிமாவில் வருவது போல வசனம் பேசவில்லை. சினிமாக்காரர்களை மேடையில் ஏற்றி அந்தப் புகழையும் பயன்படுத்தவில்லை. சினிமா என்பது தொழில், அரசியல் சேவை என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் விஜய்.
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை மாநாடு கடந்த 27ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் விஜய் கட்சி கொள்கை மற்றும் கட்சிகளின் இரு எதிரிகள் என குறிப்பிட்டு மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று கட்சிக் கூட்டத்தில் 28 கட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தவெக குறித்தும், கொள்கை குறித்தும், என்னைப் பற்றியும் யார் விமர்சித்தாலும், அவர்களுக்கு தனி நபர் விமர்சனத்தை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்று விஜய் முக்கியமாக அறிவுறுத்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இப்போதும் கூட சீமான் அத்தனை மோசமாக பேசியபோதும் கூட அவரை கடுமையாக விமர்சித்து விஜய்யும் பேசவில்லை. அவரது கட்சியினரும் பேசவில்லை. பதிலடி மட்டுமே தந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று யார் யாரோ வர்றான் என்றெல்லாம் பேசியபோதும் கூட நாகரீகமாகவே பதிலடி கொடுத்து வருகின்றனர் தவெகவினர். பல யூடியூப் சானல்களில் பேசும் "அரசியல் நிபுணர்கள்" தாறுமாறாக விமர்சித்தும் கூட, தவெகவினர் யாரும் அவர்களை கடுமையாக சாடுவதே இல்லை. படு நிதானமாக காய் நகர்த்துகிறது தவெக என்று தெரிகிறது.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக சினிமாவில் விஜய் மற்ற கட்சிகள் பேசிய வசனத்தை பேசியிருப்பார். ஆனால் தற்போது விஜய் பேசிய வசனங்களை அனைத்துக் கட்சிகளும் பேச ஆரம்பித்து விட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு பாம்பை கண்டால் பயம் கிடையாது அந்தப் பாம்பு என்கிற அரசியலை பிடிப்பவன் தான் உங்கள் விஜய்.. அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா என மாநாட்டில் விஜய் பேசிய டயலாக்குகள் இன்று டோட்டலாக அரசியல் களத்தையே புரட்டி போட்டுள்ளது.
இதுவரை சினிமாவில் அரசியல் சார்ந்த டயலாக்குகளை பேசி வந்த விஜய், இனி அரசியல் களத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கூர்மையாக கவனிக்கப்படுவதுடன் சினிமாவில் பேசிய டயலாக் தமிழக வெற்றி கழகத்தின் பிரதிபலிப்பாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இனி வரம் காலம் நமக்கு காட்டும்.
மேலும் கப்பு முக்கியம் பிகிலு என்ற பிகில் பட வனத்தையே தனது கட்சியினருக்கு மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் விஜய்.. நமது நோக்கம் வேறு.. இடையில் வரும் திசை திருப்பல்களைக் கண்டுக்காதீங்க.. உங்க டார்கெட்டை நோக்கி போய்ட்டே இருங்க என்று விஜய் கட்சியினரிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது. ஆக மொத்தம் எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் லெப்ட் ஹேன்ட்டில் டீல் செய்கிறார்கள் தவெகவினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Dam level: 11 அணைகள் ஃபுல்.. தமிழ்நாட்டு நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு அப்டேட்!
2026ல் திமுகவுடன் தான் கூட்டணி.. வேறு இடம் போகும் அவசியம் விசிகவுக்கு இல்லை.. திருமாவளவன்
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, பீன்ஸ், பூண்டு எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்து வரும் தங்கம்.. சவரனுக்கு ரூ.120 குறைவு.. அப்பாடா.. அப்ப கடைக்குப் போலாம்!
கந்தசஷ்டி .. நாளை 5ம் நாள் விழா.. இதை செய்தால் அப்பன் முருகனிடம் கேட்டது கிடைக்கும்!
கப்பு முக்கியம் பிகிலு.. கலங்கடிக்கும் விமர்சனங்களை.. லெப்ட் ஹேன்டில் டீல் செய்யும் தவெக + விஜய்!
பெரு கால்பந்து மைதானத்தில் நடந்த விபரீதம்.. மின்னல் வெட்டினால் என்ன செய்ய வேண்டும்.. தெரிஞ்சுக்கங்க!
CM MK Stalin visit: கோவையில் .. கள ஆய்வை இன்று தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்ருதி ஹாசன் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கும் தேவதர்ஷினி மகள் நியதி.. கே.பி.ஒய் பாலாவுடன் கலக்கல்!
{{comments.comment}}