சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு ஏற்படுத்திய பரபரப்பும் அதிரடியும் இன்னும் சூடு குறையாமல் அரசியல் அரங்கில் உலா வந்து கொண்டுள்ளது. தனது பேச்சை முடித்த பிறகு விஜய் கூறிய கருத்து பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
தவெகவின் முதல் மாநில மாநாட்டை நேற்று விஜய் விக்கிரவாண்டி வி சாலையில் நடத்தி முடித்துள்ளார். முதலில் இவ்வளவு பெரிய கூட்டம் விஜய்க்குக் கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகம் வரும் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அந்த சுற்று வட்டாரமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்குக் கூட்டம் கூடும் என்று யாரும் கணிக்கவில்லை.
2வது பெரிய ஆச்சரியம், இத்தனை பேர் கூடியும், அதில் 99 சதவீதம் பேர் இளைஞர்களாக இருந்தும் கூட, அதீத உற்சாகத்தில் அவர்கள் இருந்தும் கூட பெரிய அளவில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வரவில்லை, எந்த கலாட்டாவும் நடைபெறவும் இல்லை (முன்பு சரணாலயம் என்ற பெயரில் நடிகர் கார்த்திக் நடத்திய கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஆயிரக்கணக்கில் கூடினர்.. எல்லாமே கலாட்டாவில் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்)
விஜய் Soft இல்லை புரோ.. Rugged!
3வது ஆச்சரியம், விஜய்யின் பேச்சு. வழக்கமான சாப்ட் விஜய் போல இல்லாமல், ரக்கட் விஜய்யாக மாறி அதிரடி காட்டியிருந்தார். அவரது பேச்சில் அத்தனை தெளிவு.. ஒரு இடத்தில் கூட தடுமாற்றம் இல்லை. அவர் சொன்னது போல நடக்குமா நடக்காதா, அவர் பேசியது எல்லாம் சரியா, தவறா என்பது அடுத்து.. ஆனால் அவரது பேச்சு தெளிவாக இருந்தது.. அதுதான் முக்கியம். ஒரு புதுமுக அரசியல் தலைவர், முதல் முறையாக பல லட்சம் பேர் முன்பு பேசுகிறார், தனது கொள்கையை விளக்க வேண்டும், ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதைச் சொல்ல வேண்டும்.. இப்படி பல டென்ஷன்கள் இருந்தாலும், அது எதையுமே வெளிப்படுத்தாமல் படு இயல்பாக அவர் பேசியதே மிகப் பெரிய வெற்றிதான். அந்த வகையில் தனது முதல் பேச்சில் விஜய் வெற்றி பெற்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தனது பேச்சை விஜய் முடித்த பிறகு மீண்டும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார். அதில், நாம் தேர்தலில் நிற்கும்போது நம்முடன் கூட்டணி வர யாராவது விரும்பினால் நாம் அதை மறுக்க முடியாது. வரவேற்றுதான் தீருவோம். அப்படி கூட்டணி அமைந்து, நாம் தனிப் பெரும்பான்மையுடன் ஜெயித்தாலும் கூட, கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்போம் என்று விஜய் கூறியதுதான் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
விஜய் மனதில் யாரு
விஜய்யின் இந்த குறிப்பு யாருக்காக சொல்லப்பட்டது.. எதை மனதில் வைத்து விஜய் இதைச் சொன்னார்.. எடுத்த எடுப்பிலேயே கூட்டணிக்கு ரெடி என்று ஏன் அவர் சொன்னார் என்பதுதான் இப்போது விவாத மேடைகளை அலங்கரித்துக் கொண்டுள்ளது. இங்கு சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.
விஜயகாந்த் அரசியலில் நுழைந்த சமயத்தில் ஆரம்பத்தில் மக்களுடனும், ஆண்டவனுடனும் மட்டுமே கூட்டணி என்று கூறினார், தனித்தும் போட்டியிட்டு வந்தார். அவருக்கு அதனால் கிடைத்த பலன் என்னவென்றால் 8 முதல் 12 சதவீத அளவிலான வாக்குகளைப் பிரித்தது மட்டுமே. அவரது வாக்குப் பிரிப்பு அவருக்குப் பெரிதாக பலன் தரவில்லை.. அதாவது அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. காரணம், வெறும் 12 சதவீத வாக்குகள் ஆட்சியைப் பிடிக்கப் போதாது. அதேசமயம், அவர் கூட்டணி சேர்ந்தபோது அவருக்கு அதிக அளவிலான எம்எல்ஏக்கள் கிடைத்தனர்.. 2வது பெரிய கட்சியாகவும் உயர முடிந்தது.. எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
காலத்தின் கோலமாக அவரது கட்சி பிளவுபட்டது (ஜெயலலிதாவின் சமயோசிதமே அதற்குக் காரணம்), விஜயகாந்த் மீதும் ஒரு விதமான பிம்பம் விழுந்தது, அவரது கோபாவேசம், தேவையில்லாத பேச்சுக்கள் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தின, தவறான கூட்டணிகள் அவர் மீதான மக்கள் நம்பிக்கையைத் தகர்த்தது, உடல் நலம் இல்லாமல் போனது ஆகியவை காரணமாக அரசியலில் பொலிவிழந்து போனார் விஜயகாந்த்... இதில் POV என்னன்னா.. கூட்டணி சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.. இதை தாமதமாக உணர்ந்து கொண்டதால் விஜயகாந்த்தும் தாமதமாக உயர்வு கண்டார்.. அதேசமயம், சரியான கூட்டணியை அமைக்காமல் போனதால்தான் அவர் வீழ்ச்சியை வேகமாக சந்தித்தார். இது வரலாறு!
விஜயகாந்த் செய்யத் தவறியதை செய்யும் விஜய்
இப்போது விஜய் மேட்டருக்கு வருவோம்.. தனது பலம் என்ன என்பதை விஜய் உணர்ந்து வைத்துள்ளார். அவர் சொல்வது போல ஏனோதானோவென்று அவர் அரசியலுக்கு வரவில்லை. பக்காவாக அரசியல் புரிந்து, தமிழ்நாட்டு மனோபாவம் தெரிந்து, என்ன செய்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டுதான் அவர் இறங்கியுள்ளார். தெளிவான திட்டமிடலுடன்தான் அவர் களம் இறங்கியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் எதார்த்தம் என்னவென்றால்.. யாரும் கூட்டணி இல்லாமல் இங்கு போட்டியிட முடியாது.. அது மிக மிக அரிதான விஷயம். ஓரிரு சமயத்தில் அது சரியாக இருக்கலாம்.. ஆனால் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால் அது ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உதவாது என்பதே இங்கு நிதர்சனம்.. அதனால்தான் திமுகவும் சரி, அதிமுகவும் சரி கூட்டணிக்காக நிறைய மெனக்கிடுவார்கள். அதை விஜய்யும் புரிந்து வைத்துள்ளார். விஜய்க்கு கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகள் வரை கிடைக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இதுவும் கூட வரும் நாட்களில் அவர் செயல்படப் போகும் விதத்தைப் பொறுத்தே இருக்கும். அல்லது இதை விடவும் குறையலாம். சிறப்பாக செயல்பட்டால் இன்னும் கொஞ்சம் கூடலாம். ஆகவேதான் எடுத்த எடுப்பிலேயே கூட்டணியாகப் போகலாம் என்ற சாமர்த்தியமான முடிவுக்கு அவர் வந்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு டார்கெட்.. காங்கிரஸுக்கும்!
அவர் மனதில் இருக்கும் முக்கியக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பார்க்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகளை முக்கியமாக தனது கூட்டணிக்குள் இழுக்க விஜய் திட்டமிட்டிருக்கலாம். நேற்று விஜய் பேசியபோது, தனது அரசியல் வழிகாட்டிகள் என்று ஒவ்வொரு தலைவராக குறிப்பிட்டுப் பேசியபோது, அம்பேத்கர் பெயரை அவர் சொன்னபோது கூட்டம் அப்படி ஆர்ப்பரித்தது. இது பல செய்திகளை பலருக்கும் உணர்த்தியிருக்கும்.. விஜய்யும் கூட அந்த ஆரவாரத்தைப் பார்த்து புன்னகைத்தார்.. பெயரைக் கேட்டாலே என்றும் கூறி நிறுத்தி புன்னகைத்தார்.. அதுவே, அவரத மனதில் இருக்கும் திட்டத்தை புரிய வைத்து விட்டது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய வாக்கு வங்கி தலித் சமுதாய வாக்குகள்தான். ஆனால் அது சிதறிக் கிடக்கிறது. அதை ஒருங்கிணைக்கும் திட்டம் விஜய்யிடம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்தனை தலித் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தனது கூட்டணியில் சேர்த்து, மேலும் சில கட்சிகளையும் கூட்டணி சேர்த்து வலுவான போட்டியை கொடுக்க விஜய் திட்டமிடுவதாக கருதப்படுகிறது.
இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு புது பிடிப்பு கிடைத்திருக்கிறது. விஜய்யின் பேச்சை வைத்து திமுகவுக்கு அது நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதை மனதில் வைத்துத்தான் ஆதவ் அர்ஜூனா மூலம் ஒரு சலசலப்பை விசிக உருவாக்கியது. ஆதவ் பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டபோதும் கூட, அவர் மீது திருமாவளவன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.
விசிக மட்டுமல்லாமல் காங்கிரஸும் கூட விஜய்யின் டார்கெட்டாக இருக்கலாம். காங்கிரஸும் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி அடைந்தால், திருப்தி அடையாமல் போனால், விஜய் பக்கம் திரும்பிப் பார்க்க வாய்ப்புண்டு. எனவே அதையும் தன் பக்கம் இழுக்க விஜய் தயங்க மாட்டார் என்றும் நம்பப்படுகிறது. எல்லாமே இப்போது வரை ஊகம்தான்.. இது நிஜமாகுமா என்று தெரியவில்லை, தெளிவும் இல்லை.
வலையில் விழப் போவது யாரு
தற்போதைக்கு விசிகவை மனதில் வைத்து விஜய் வலை விரித்துள்ளார். இந்த வலையில் வந்து விசிக விழுமா அல்லது இந்த வலையைக் காட்டி திமுகவிடம் தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு வேளை விஜய் பக்கம் திருமாவளவன் போக முடிவு செய்தால் அது திமுகவுக்கு நிச்சயம் பாதகமாக அமையலாம். நேற்றைய விஜய் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது. பெண்கள்தான் எனது அரசியலின் மிகப் பெரிய பங்கு வகிப்பார்கள் என்றும் விஜய் கூறியுள்ளார். இதெல்லாம் திமுகவுக்கு பெரும் சவால்களாக எதிர்வரும் நாட்களில் அமையலாம்.
ஆக மொத்தம் பல்வேறு கூட்டல் பெருக்கல் கணக்குகளைப் போட்டு முடித்து விட்டுத்தான் பேசியிருக்கிறார் விஜய் என்று கருதப்படுகிறது.. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}