சென்னை: அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று கேட்டு திமுக ஐடி விங் செயலாளரும் எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா அறிக்கை விட்டுள்ளார்.
வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தற்போது திமுக - பாஜக இடையிலான மோதலாக மாறி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து திமுக அரசுக்கு அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.
இந்தப் பின்னணியில் திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா தொடர் டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வதந்திகளை பரப்பி தமிழ்நாட்டுக்கு பாஜக செய்துள்ள துரோகச் செயல் மக்களுக்கும், குறிப்பாக வணிக பெருமக்களுக்கும் தெளிவாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பொய்புரட்டு சங்கத் தலைவர் அண்ணாமலை. உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால் அவர் செய்திருக்க வேண்டியது என்ன?
வடமாநிலத்தவர் மீதான பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர் என்று கேட்கும் அண்ணாமலை, இக்கேள்வியைக் கேட்க வேண்டியது இந்தியாவின் பிரதமரிடம்தான். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் கூட்டத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் கிலி அடைந்தது பாஜக!
அதன் உத்தரபிரதேச மாநில செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர்தான் தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் 12பேர் கொல்லப்பட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் வதந்தி நெருப்பைப் பற்றவைத்தார் என வலைதள செய்திகள் மூலம் தமிழ்நாடு காவல் துறை கவனத்தில் கொண்டுள்ளது.
எப்போதும் வகுப்புவாதம், மதவெறி, மொழிவெறி, கலவரம், பிணவாடை இவற்றிலேயே அரசியல் செய்யும் பா.ஜ.க.வினர் இந்த வதந்தியைக் காட்டுத் தீயைப் போல பரப்பி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கச் செய்யலாம் என நினைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அமைதிப்பூங்காவாகத் தமிழ்நாடு திகழ்வதுடன், வதந்தி பரப்பிய பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கைக்கான முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இத்தகைய வதந்தி வன்முறையாளர்களின் அவதூறு அபாயங்களுக்கு உத்தரபிரதேசத்து வாரணாசி தொகுதி எம்.பி.யும் நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் முடிவு கட்ட வேண்டும் என்று அண்ணாமலை விரைவில் அறிக்கை விடுவாரா ??? என்று கேட்டுள்ளார் டிஆர்பி ராஜா.
{{comments.comment}}