கலங்கிப் போன அந்த இரவில்.. கருந்தேளாய் சுற்றி வளைத்த புயல்.. தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்!

Dec 22, 2023,05:18 PM IST
டிசம்பர் 22, 1964

அழகான கடல் புறம்.. அற்புதமான வானிலை.. சற்றே வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்று..  மெல்ல மெல்ல தூக்கத்திற்குப் போய்க் கொண்டிருந்தது தனுஷ்கோடி.. வீடுகளின் விளக்கொளி மெல்ல மெல்ல அணைய.. விண்வெளியின் வெளிச்சத்தில் நனையத் தொடங்கியிருந்தது அந்த கடலோர துறைமுக நகரம்... மறு நாள் விடியலை மனதில் தேக்கி வைத்து எக்கச்சக்க கனவுகளோடு தூங்கப் போயிருந்த பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அதுதான் அவர்களின் கடைசி இரவு என்று.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியிருந்த புயல் வலுவிழந்த நிலையில் இலங்கையை நோக்கி திரும்பியிருந்தது. வட இலங்கையின் வவுனியாவைக் கடந்த புயல் அப்படியே நேராக இந்தியாவின் தனுஷ்கோடி முனையை நோக்கி நகர்ந்து வந்தது, இரவில் தனுஷ்கோடியில் கரையைக் கடந்தது புயல்.



புயல் தனுஷ்கோடியைத் தாக்கும் என்பதை அப்போது யாரும் சரிவரக் கணிக்கவில்லை. தெரிவிக்கவும் இல்லை.. ஊகிக்கவும் இல்லை. தனுஷ்கோடியைத் தாக்கிய புயலில் சிக்கி மொத்த ஊரும் சின்னாபின்னமானது. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றில் அந்த நகரமே சூறையாடப்பட்டது. படகுகள் சிதறிப் போயின. வீடுகள் உடைந்து நொறுங்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இரவில் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். மொத்த தீவும் சிதிலமடைந்து போய் விட்டது.

இந்தியாவின் தென் முனையாக திகழ்ந்து வந்த தனுஷ்கோடி மண் மேடிட்ட புள்ளியாக மாறிப் போன கருப்பு தினம் இன்று.

இந்தியாவின் மிக மிக அழகான கடல்புறங்களில் ஒன்றுதான் தனுஷ்கோடி. இன்று ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில், ஒருகாலத்தில் தனுஷ்கோடி வரை சென்று கொண்டிருந்தது. ராமேஸ்வரத்தை விட முக்கியமான நகராக விளங்கியதுதான் தனுஷ்கோடி. வர்த்தக மையமாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது. நாலாபுறமும் கடல் சூழ்ந்த பகுதியான தனுஷ்கோடியிலிருந்து இலங்கையானது கைக்கு எட்டும் தூரத்தில்தான் உள்ளது.



இன்று ராமேஸ்வரம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அந்தப் புயலுக்கு முன்பு வரை தனுஷ்கோடியும் பிசியான நகரமாக இருந்து வந்தது.. அந்த புயல் தாக்கி தனுஷ்கோடி மண்மேடான பிறகு அங்கு மக்கள் வசிக்க தகுதி இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டு விட்டது.  தனுஷ்கோடியைத் தாக்கிய புயலில் சிக்கி ஒரு பாசஞ்சர் ரயிலும் கூட கடலில் இழுத்துச் செல்லப்பட்டது. இந்தப் புயலின் கோரங்கள் வெளி உலகுக்குத் தெரிய 2 நாட்களானது. அந்த அளவுக்கு  தகவல் தொடர்புகள் அனைத்தும் அப்போது துண்டிக்கப்பட்டிருந்தது.

காதல் மன்னன் ஜெமினி கணேசனும், அவரது மனைவி சாவித்திரியும் இந்தப் புயலில் சிக்கியிருக்க வேண்டியது.. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதிலிருந்து மீண்டனர். தனுஷ்கோடியைப் புயல் தாக்கியதற்கு முதல் நாள் ஜெமினி குடும்பத்தினர் அங்கு போயிருந்தனர். அன்று இரவு தனுஷ்கோடியில்  தங்க விரும்பியுள்ளார் சாவித்திரி. ஆனால் வேண்டாம் என்று கூறி குடும்பத்தோடு ராமேஸ்வரத்திற்குக் கூட்டி வந்து விட்டார் ஜெமினி. அவருக்கு உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ.

அதன் பின்னர் ராமேஸ்வரம் வந்து அன்று இரவு தங்கினர். அந்த இரவில் தான் தனுஷ்கோடியை புயல் புரட்டிப் பட்டது. புயலின் ஊழித் தாண்டவத்தைப் பார்த்து சாவித்திரி பயந்து போய் விட்டாராம். இப்படியும் புயல் வீசுமா என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.



அழகான அந்த தனுஷ்கோடி வெறும் மணல்வெளியாய்.. இன்றும் மெளனித்துக் காத்துக் கிடக்கிறது.. தனது மறைந்து போன, உருக்குலைந்து போன கனவுகளை தன்னுள் தேக்கி வைத்தபடி.. அந்த மெளனக் கண்ணீரின் சாட்சியாய் அங்கு இப்போதும் இருப்பது.. சிதிலமடைந்து போன அந்த பேராலயமும், ரயில் நிலையத்தின் மிச்சமும் மட்டுமே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்