- மீனா
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக மனிதனுக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மனநலமும் முக்கியம். ஏனென்றால் மனநலம் சீரான நிலையில் இல்லை என்றால் உடல் நிலையில் பெரிய மாற்றங்களை மனிதன் சந்திக்க கூடும்.
உலகில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் தெரிவித்திருக்கிறது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மனநல கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் ஓராண்டிற்கு சராசரியாக 8 லட்சம் பேருக்கும் அதிகமானோர் மற்றும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய காரணத்தால் மக்களிடையே மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் இந்த மனநல தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு மனிதன் உடல்நலத்தோடு இருப்பதையே நல்ல நிலையில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் உடல் நலத்தோடு தொடர்புடைய மனநலத்தையும் நாம் பேணி காக்க வேண்டியது மிகவும் அவசியம். நீண்டகால சோகம், ஏக்கம், ஏமாற்றம், தொடர் தோல்வி, வேலையின்மை , மற்றும் எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்றவையே மன அழுத்தங்கள் ஏற்பட காரணங்களாக அமைகின்றன.
பெரியவர்களுக்கு மட்டும் தான் மன அழுத்தங்கள் ஏற்படும் என்ற சூழ்நிலை மாறி இன்று குழந்தை முதல் வயதானவர்கள் வரை கூட இந்த மன அழுத்தம் ஏற்படுவது ஒரு சாதாரண விஷயமாக மாறிக் கொண்டு வருகிறது என்பதனை டாக்டர்கள் ஒரு வேதனையான விஷயமாக சுட்டிக் காட்டுகிறார்கள். இதுபோன்ற மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு சமீப காலமாக அநேக தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருப்பது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் தற்கொலை செய்வதற்கு மன வியாதி இருப்பவர்கள் தான் அதிகமாக முயற்சி செய்கிறார்கள் என்று அர்த்தம் கிடையாது.
சில மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான மாற்றங்கள் அது அவர்களுடைய மனதை பாதித்து எதற்காக வாழ வேண்டும் யாருக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும் போது அவர்கள் இந்த மாதிரி தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்கிறதற்கு துணிந்து முடிவெடுக்கிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி மனநலக் கோளாறு ஏற்படுவதற்கு காரணங்களாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகள் காரணங்களாக இருக்கின்றன. அவற்றில் ஒருவரின் இழப்பு அவர்களின் ஆசை நிராகரிக்கப்படும் போது அல்லது இனி அது நடக்கவே நடக்காது என்று அவர்களுக்குள்ளே அதை எண்ணிக் கொள்ளும் போது அந்த அழுத்தங்கள் அவர்கள் மனதை மேலும் பாதிப்புக்கு உள்ளாகி மனநல பிரச்சனைக்கு வழிவகிக்கிறது என்று அறிவுறுத்துகிறார்கள்.
எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று அவர்களுக்கு எப்பொழுதும் தன்னம்பிக்கை ஏற்படும் மாதிரி சூழ்நிலைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது தன்னோட மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தால் அவர்கள் தனக்கு பிடித்தமான விஷயங்களில் தன் கவனத்தை செலுத்தலாம் அல்லது தனக்கு பிடித்தவர்களிடம் மனதில் உள்ளவற்றை தெரிவிப்பதன் மூலம் அவர்கள் மனதில் உள்ள அழுத்தங்கள் மாறி இயல்பு நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கும். இதற்கும் எந்த பலனும் இல்லை என்கிற பட்சத்தில் அவர்கள் சிறந்த மனநல மருத்துவர்களை சந்தித்து தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு சிறிதும் தயங்க வேண்டியதில்லை.
உடல்நல பிரச்சனைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு மனநலத்திற்கும் நாம் கொடுக்கும்போது எந்த ஒரு பிரச்சனையும் நம்மை பெரிதாக பாதிக்காது. ஆனால் உடல் நலத்தோடு இருப்பதை மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமானவனாக சொல்லிவிட முடியாது அவனுடைய மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு மனிதன் முழுமையான சந்தோஷத்தோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
எந்த ஒரு நிலையிலும் நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்று எண்ணி நாம் சோர்ந்து போகக்கூடாது. நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கும்போது அல்லது நமக்கு முன்பு உள்ளவர்களை பார்க்கும்போது இதைவிட அதிகமான கடினமான பாதைகளை கடந்து வந்தோர் அநேகர் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஒருவர் மனநல கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அவருக்கு உங்களால் இயன்ற தக்க ஆலோசனையை தருவதன் மூலம் அந்த பிரச்சனையிலிருந்து அவரை முழுவதுமாக மீட்க முடியும்.
ஆகையால் எந்த பிரச்சனையும் நமக்கு எப்பொழுதும் முழுமையாக நீடித்து இருப்பதில்லை ,இரவு, பகல் போல இன்பம் துன்பம் வாழ்க்கையில் கலந்து வரும் என்பதை நாம் உணர்ந்து நம்முடைய கவலைகளை மகிழ்ச்சியாக மாற்றுகிற மந்திரம் நம்மிடத்தில் தான் உண்டு என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் இன்றைய உலக மனநல நாளில் மற்றவர்களுக்கும் மனநல பிரச்சனைகளில் முழுமையான புரிதல் உண்டாகவும் நாம் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்வோமாக .
பிறகு என்ன கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் ஆக்குங்க பாஸ்!.
{{comments.comment}}