சென்னை: சர்வேதேச குழந்தைகள் புத்தக தினம் இன்று.. குழந்தைகளிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தினம்தான் இது.
இன்று குழந்தைகள் வாசிக்கும் ஒரே புத்தகம் அவர்களின் பாடபுத்தகம் மட்டும் தான். இளஞ் சிறார்கள் இப்பொழுதெல்லாம் சமுகவலைதளத்தை தான் பெரிதும் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக டிரண்டிங் ரீல்ஸ்களில் சிறுவர்களே முதலிடம் வகிக்கின்றனர். இப்பொழுது உள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ரீலிஸ் ஈடுபட வைக்கின்றனர்.. அவர்களும் சேர்ந்து ரீல்ஸில் குதிப்பதால் குடும்பமே ரீல்ஸ் குடும்பமாக மாறிய காட்சிகளையும் நாம் தினசரி பார்க்கிறோம். இதனால் சிறார்கள் மத்தியில் புத்தக வாசிப்பு என்பது அறவே இல்லாமல் போய் விட்டது.
அந்த காலங்களில் பள்ளிபடிப்புகளுடன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு போட்டிகள் நடைபெற்றது. வினாடி வினா உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும். உலக பொது அறிவு சார்ந்த விஷயங்கள் கேட்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள நாம் பன்னாட்டு நடப்பு விஷயங்களை தெரிந்து கொள்ள புத்தகத்தை நாட வேண்டியிருந்தது. நிறைய படித்தோம், தகவல் சேகரித்தோம்.. வாசிப்புப் பழக்கம் சிறப்பாக இருந்தது. இது போக திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியும் நடக்கும். இதற்கும் நாம் திருக்குறளை பொருளோடு மனப்பாடம் செய்து கொண்டு பங்கேற்போம்.
புத்தக வாசிப்பானது மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றலை வழங்கும். முந்தைய தலைமுறை சிறார்கள், வார இதழ்கள், கதை புத்தகங்கள், நீதிக் கதைகள் என பல புத்தகங்களையும் விரும்பி படிப்பர். பொதுவாகவே வாசிப்பு பழக்கம் அதிகம் உடையோருக்கு நல்ல சிந்தனைகள் மேலோங்கும். அது இல்லாமல் இருப்போரின் சிந்தனை கருத்துக்களில் ஆழம் இருக்காது. மேம்பாக்காவே அவர்கள் வளருவார்கள். பொழுது போக்க நாம்உபயோகிக்கும் சமுக வலை தளங்கள் சிறுவர்களை அடிமையாக்கி வைத்துள்ளது. சிறுவர்கள் வீடியோ கேம்களில் காட்டும் ஆர்வம், இன்று புத்தக வாசிப்பில் துளியும் இல்லை.
அதேபோல இன்று குழந்தைகளுக்காக புத்தகம் எழுதுவோர் மிகவும் அருகிப் போய் விட்டனர். அன்று நிறையப் பேர் இருந்தனர். இன்று அவர்களில் பலரும் இல்லை.. புதியவர்களும் கூட அதிகம் வரவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பெரியவர்களுக்காக கதை எழுதுவோர், கவிதை எழுதுவோர் நிறையப் பேர் உளளனர். ஆனால் குழந்தைகளுக்கான எழுத்தாளர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டியது அவசியம்.
அன்று பஞ்ச தந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள், அலாவுதினின் அற்புத விளக்கு கதைகள், பல சரித்திர கதைகள் நள தமயந்தி கதைகள், அரிசந்திர மகா ராஜா கதைகள் இவை எல்லாம் இன்று எத்தனை குழந்தைகளுக்கு தெரியும் என்பது சந்தேகமே. கோடை விடுமுறை தொடங்க போகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல நல்ல புத்தகங்களை வாசிக்க கொடுப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்களுக்கு நல்ல கதைகளும் கூறி புத்தக வாசிப்பு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தலாம். பள்ளிகளிலும் புத்தக வாசிப்பை பழக்த்தை மாணவர்களிடம் ஏற்படுத்தலாம். பல நல்ல புத்தகங்கள் மாணவர்களை நல்ல எழுத்தாளர்களாக, கவிஞர்களாக ஏன் நல்ல மிகச் சிறந்த மனிதனாக கூட உருவாக்கலாம். வருங்கால தலைமுறையினருக்கு புத்தக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவோம்
மம்மீஸ் அன்ட் டாடீஸ்.. எப்போதும் கையில் செல்லுடனேயே திரியும் உங்க வீட்டுச் செல்லங்களைப் பிடிச்சு உட்கார வச்சு, செல்லை வாங்கிட்டு அதற்குப் பதில் அவர்களுக்குப் பிடித்தாற் போல பேசி கூடவே அமர்ந்து புத்தக வாசிப்பு குறித்த ஆர்வத்தை உருவாகக்கி, தட்டிக் கொடுத்து அவங்களுக்கு அந்த வாசிப்பு அனுபவத்தின் சுகத்தைக் காட்டுங்க.. பிறகு தானாகவே அவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள்.
கட்டுரை: சுஜித்ரா
{{comments.comment}}