Captain Vijayakanth.. முதலாமாண்டு நினைவுதினம்.. விஜயகாந்த் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

Dec 28, 2024,06:49 PM IST

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று குருபூஜையாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து அஞ்சலி செலுத்தினர்.


சிறந்த நடிகராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்த், பின்னர் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்நாட்டு  அரசியலில் பெரும் அதிரடி காட்டியவர். கருணாநிதி, ஜெயலலிதா என இரு ஜாம்பவான்களுக்கு எதிராக அவர் நடத்திய அரசியலால் தினந்தோறும் அனல் பறந்தது.


வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே , புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஆனஸ்ட் ராஜ்,  வானத்தைப் போல என  150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகாந்த். தனது சிறந்த நடிப்பாற்றலால் பல கோடி ரசிகர்களை சம்பாதித்த விஜயகாந்த் தமிழில் மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையை நிலை நாட்டி கடைசி வரை தமிழில் மட்டுமே நடித்தார். இவரின் படங்களை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமெக்ஸ் செய்யப்பட்டது. 




தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்டு அதற்கு தனி மரியாதையைத் தேடிக் கொடுத்தவர். செல்லமாக எல்லோரும் கேப்டன் கேப்டன் என திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் அழைத்து மகிழ்ந்தனர். தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களில் நடித்தமையால் இவரை புரட்சி கலைஞர் என்றும் மக்கள் பாராட்டினர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதால் இவரை கருப்பு எம்ஜிஆர் எனவும் அழைக்கப்பட்டார்.


2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் பதவி வகித்து மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்தவர். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லும் அளவுக்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே வகையான உணவுதான் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை கடைபிடித்தவர். அதாவது தான் பணிபுரியும் திரைத்துறையில் சாதாரண பணியாளர்கள் வரை அனைவருக்கும் சமமான உணவு முறையை அறிமுகப்படுத்தியவர். தன்னுடைய அலுவலகத்திற்கு யார் பசி என்று வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு உணவு வழங்கிய கொடைவள்ளல்.ஏழை எளிய மக்களிடம் பாகுபாடு இன்றி பழகக்கூடிய ஒரே நல்ல உள்ளம் படைத்தவர் என்றால் அது கேப்டன் தான்.


இப்படிப்பட்ட சிறந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமாகி இன்றுடன்  ஓராண்டு நிறைவடைந்தது. இவரின் கொள்கைகளை கடைபிடிக்கும் விதமாக இன்று வரை விஜயகாந்த் நினைவிடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


விஜயகாந்தின் நினைவு தினத்தை ஒவ்வொரு வருடமும் விஜயகாந்தின் குருபூஜை தினமாக கடைபிடிக்க தேமுதிகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று முதலாம் ஆண்டு குருபூஜை விழா கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேப்டன் ஆலயத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஆயிரக்கணக்கானோருடன் அமைதிப் பேரணி



முன்னதாக  மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக கேப்டன் ஆலயம் வர தேமுதிகவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் தடையை மீறி, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.


திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தினால் அனுமதி அளிக்கும் காவல்துறை கேப்டன் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுத்தது நியாயமற்றது என்று எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  ஊர்வலத்தில் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மக்கள் அணிவகுத்து சென்றனர். நேரம் செல்ல செல்ல விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சாரை சாரையாக மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வரும் அனைவருக்கும் இன்று அன்னதானம் வழங்கப்படும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.


தலைவர்கள் அஞ்சலி:




முதல்வர் மு.க.ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நினைவிடத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கலைஞர் மறைந்தபோது, வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த கேப்டன் விஜயகாந்த், கண்ணீர் மல்க அழுதபடி பேசிய வீடியோ காட்சியை திமுகவினர் என்றைக்குமே மறக்க மாட்டார்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் அவர். அவரது நினைவுகள் என்றென்றும் நம்முடன் இருக்கும் என்று புகழாரம் சூட்டினார்.


விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

1 கிலோ பச்சரிசி.. 1 கிலோ சர்க்கரை.. கரும்பு.. பொங்கல் பரிசுத் தொகுப்பு ரெடி.. ஜன. 9 முதல் டோக்கன்!

news

அன்புமணியுடன் திடீர் மோதல்.. பேச்சைக் கேட்காட்டி வெளியேறி விடு.. கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!

news

பாமக மேடையில் வெடித்த திடீர் வாக்குவாதம்.. டாக்டர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு இதுதான் காரணமா?

news

Panaiyur Poltics: தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் பனையூர்... நேற்று விஜய்.. இன்று அன்புமணி

news

Anna university: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த.. ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவு

news

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அளிக்க ஹைகோர்ட் உத்தரவு

news

திருவண்ணாமலையில் கொடுமை.. முக்தி அடைவதற்காக.. விஷம் அருந்தி வாழ்க்கையை முடித்த 4 பேர்!

news

New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!

news

Dr Manmohan Singh.. மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கோனார் இறுதி அஞ்சலி.. டெல்லியில் உடல் தகனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்