ஹலோ... சங்க காலப் பெண்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது தெரியுமா?.. தாழம் பூவே வாசம் வீசு!

May 11, 2024,05:10 PM IST

- பொன்லட்சுமி


தாழம் பூ வாசம் யாருக்கு தான் பிடிக்காது..  இந்தப் பூ மிகுந்த வாசனை கொண்டதாக இருந்தாலும் கூட யாரும் இதை பயிரிட மாட்டார்கள்...  வளர்ப்பது ரொம்ப கஷ்டம். சங்க காலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி தலையில் அணிந்த பூ இன்று தேடினாலும் கிடைக்காத அளவிற்கு அருகி கொண்டே வருகிறது.. இந்தப் பூ வெறும் வாசத்திற்காக மட்டும் பயன்படுவது இல்லை, மருத்துவத்திலும் பயன்படுத்தலாம். வாங்க இதில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்..


தாழம்பூ செடி புதர் வகையைச் சார்ந்தது.  சில செடிகள் குறைந்தது ஐந்து அடி முதல் இருபது அடிவரை வளர்ந்து காணப்படும். இது பெரும்பாலும் கடற்கரையோரங்களிலும் நீர் நிலைகள் நிறைந்த ஓடைகளின் இருபுறமும்  அதிகமாக காணப்படும்.. தாழம்பூ செடியின்  மடல்கள் அண்ணாச்சி பழ செடியை  போல இலையின் இரு பக்கமும் மெல்லிய அதே சமயம் கூர்மையான முட்கள் நிறைந்து காணப்படும்.. இதில் வெண் தாழை , செந்தாழை என்று இருவகை உண்டு. செந்தாழை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.. வெண்தாழையானது ஆடி ஆவணி மாதத்தில் பூக்கும், செந்தாழையானது  பனிக்காலத்தை தாண்டி மாசி பங்குனி மாதங்களில் பூக்கும்.


வாசம் வீசும் ஆண் தாழம்பூ




இதில் ஆண் தாழம்பூ பெண் தாழம்பூ என்று இருவகை இருக்கிறது. ஆண் தாழம் பூவுக்கு தான் வாசம் அதிகம்.. பண்டைய காலத்தில் இந்த பூவிற்கு கைதை என்று வேறொரு பெயரும் உண்டு.. அதாவது இந்த பூவை பறிக்கும் போது  அதில் உள்ள முள் கையை தைத்து விடும் அளவிற்கு இதில் முட்கள் இருக்கும். எந்த அளவிற்கு என்றால் சுறா மீன் முட்கள்  போன்று கூர்மையாக இருக்கும் என்று சங்க இலக்கியங்களில் கூறுவார்கள்.. தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது இந்த தாழம்பூ என்று சொன்னால் மிகை ஆகாது.. சங்ககாலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி இந்த பூவை தலையில் சூடி கொள்வார்களாம்.. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தலையில் வைக்கும் ஜடைக்கும் இந்த தாழம் பூவை வைத்து பின்னுவார்கள்.


கோடை காலத்தில்  நாம் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை உடல் சூடு. அதற்கு  தாழம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது பனைவெல்லத்தை கலந்து கொடுத்து வரும்போது  உடல் சூட்டை பெருமளவு குறைக்கும்... சரும பிரச்சனை தோல் அலர்ஜி உள்ளவர்கள் இந்த பூவை கொதிக்க வைத்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் தோல் நோய் பிரச்சனை சரியாகும்.


உடல் சூட்டினால் ஏற்படும்  பித்தத்தை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. வெயில் காலத்தில் ஏற்படும்  நீர்கடுப்பை குணப்படுத்தும். இந்தச் செடியில் இலை முதல்  வேர் விழுது பூக்கள் என்று அனைத்திலுமே மருத்துவ குணம் இருக்கிறது.. மூட்டு வலிக்கு தேவையான  மருந்துகளை தயாரிக்க இந்த தாழம்பூ பெருமளவில் பயன்படுகிறது  ... அதன் பூவிலிருந்து  பல நோய்களுக்கு மருந்து எடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாழம்பூ எசென்ஸ் என்னும் வாசனை திரவியத்தையும் பயன்படுத்துகிறார்கள்.. தாழம் பூவில்  இருந்து எடுக்கப்படும் தைலம் தலைவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.. இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து  குளித்து வரும் போதும்  வாத நோய் நீங்கும் அது மட்டுமல்லாமல் தலைமுடியும் உடலும் நறுமணமாக இருக்கும்..


தாழம் பூவில் இருந்து  செய்யும் பாகினை வெயில் காலங்களில் தினமும் அருந்தி வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்கள் எதுவும் வராது. இந்த மனபாகினை செய்வதற்கு தாழம் பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீர் விட்டு நன்றாக கொதிக்க விட  வேண்டும்.. அந்தப் பூ நன்றாக வதங்கியதும் அதனை வடிகட்டி அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபதத்திற்கு  காய்ச்சி வடி கட்ட வேண்டும்.


தாழம்பூ வச்சா பாம்பு வருமா




சின்ன வயசா இருக்கும் போது எங்கள் ஊருல  அதிகமாக தாழம்பூ  இருந்துச்சு.. ஆற்று  ஓரத்துல  வேலிகளில் தான் அதிகமாக  இருக்கும். அப்ப எல்லாம் நிறைய வீட்ல ஆடு மாடு இருக்கும். அதையெல்லாம்  மேய்க்க  காட்டுக்கு கொண்டு போவாங்க...எங்க தாத்தாவும் ஆடு மேய்க்க  காட்டுக்கு போவாங்க. வரும்போது இந்த தாழம் பூவ நிறைய பறிச்சி கொண்டு வருவாங்க. அவ்வளவு வாசம் வீசும்... பள்ளிக்கூடத்துக்கு போகும்போது தலையில வச்சுட்டு போவோம். நாங்க  இருக்கிற இடம் எல்லாமே அவ்வளவு வாசமா அடிக்கும்... தலையில மட்டும் வைக்க மாட்டோம் புக்குக்கு நடுவுல வைப்போம். அப்பப்போ எடுத்து முகர்ந்து பார்த்துட்டே இருப்போம்.. அது மட்டும் இல்லாம துணி இருக்கிற  இடத்துலயும் கொண்டு போய் வைப்போம்.. ஒரே ஒரு இதழ மட்டும் வச்சா கூட அவ்வளவு வாசம் அடிக்கும்.


அப்ப சின்ன வயசா இருக்கும் போது  இந்தப் பூவ தலையில வச்சுட்டு போனா நிறைய பேரு எங்கள பயமுறுத்த  இந்த பூவோட வாசத்துக்கு பாம்பு வரும் அப்படின்னு சொல்லுவாங்க... வாசத்துக்காக ஆசைப்பட்டு  தலையில பூ வச்சாலும் அப்பப்போ சுத்தி சுத்தி பார்த்துகிட்டே இருப்போம். பாம்பு எங்கேயாவது வந்துருமா அப்படின்னு. இப்போது நினைச்சு பார்த்தா சிரிப்பா வருது... இந்தப் பூ வாசத்துக்கு பாம்பு வரும் சொல்றது உண்மையா இல்லையானு கூட தெரியல. ஆனா அந்த நேரத்துல பாம்புக்காக பயந்தது என்னவோ உண்மைதான்.


அதேபோல அந்த காலத்துல கல்யாணம்னு வரும்போது மணப் பெண்ணுக்கு கண்டிப்பா நாக ஜடைனு தலையில வைப்பாங்க அதுல முக்கியமா இந்த தாழம்பூ இருக்கும்.. . ஆனா இப்போ எங்க ஊர்ல கூட இந்த தாழம்பூ செடியை பார்க்க முடியல இந்த பூவ கண்ணுல பார்த்தே பல வருஷம் ஆயிடுச்சு.. எத்தனையோ நல்ல விஷயங்கள் அழிஞ்சு போன மாதிரி இதுவும் காணாமப் போயிருச்சு. னால் இன்றும் ஒரு சில இடங்களில் இந்த தாழம்பூ செடி இருக்க தான் செய்கிறது... இந்தப் பூவிற்கு வணிக ரீதியாக பெருமளவு முக்கியத்துவம் இருந்தாலும் கூட  மக்கள் அதிகமாக இதை விரும்ப மாட்டார்கள்.. ஏனென்றால் இந்த செடியை வீட்டில் வளர்ப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாத ஒன்று.


இது இயற்கையாகவே காடுகளில் வளரக்கூடிய செடி. அதுவும் புதர் போன்று  விரிந்து பரந்து காணப்படுவதால் வீட்டில் தேவையான இடத்தை இதற்கு கொடுக்க முடியாது.. மேலும்  இந்தச் செடியில்   முட்கள் அதிகமாக இருப்பதால் இதை பராமரிப்பதும் மிகவும் கடினமானது..

ஆனாலும் இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம், எசென்ஸ் போன்றவை  இயற்கையாக கிடைப்பது கஷ்டம் என்றாலும் நாட்டு மருந்து கடைகளில் தாராளமாக கிடைக்கிறது..  இந்தக் கோடையில் குழந்தைகளுக்கு அதிக அளவில் அம்மை , தோல் அலர்ஜி போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது  அதற்கு இந்த தாழம் பூ மருந்தை  வாங்கி பயன்படுத்துங்க.. அப்புறம் கோடை வெயிலை என்ஜாய் பண்ணுங்க.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!

news

அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!

news

தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!

news

Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்

news

நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்