கேட்டதை தரும் தைக்கிருத்திகை.. எப்படி விரதம் இருந்து, என்ன மந்திரம் சொன்னால் வேண்டுதல் நிறைவேறும்?

Jan 20, 2024,09:14 AM IST

முருகப்பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கார்த்திகை அல்லது கிருத்திகை விருதமாகும். 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்பதால் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமானது. 


மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் ஆடி, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷமானதாகும். இவற்றுள் தை மாத கார்த்திகைக்கு தனிச்சிறப்பு உண்டு. தை மாதம் என்பது தேவர்கள், தெய்வங்களை வணங்கி வழிபட்டு, தங்களுக்கு வேண்டிய வரங்களை கேட்டு பெறும் காலம் என்பதால் இந்த மாதத்தில் நாமும் முருகப் பெருமானிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது நிறைவேறும்.




தனிச்சிறப்பு வாய்ந்த தை கார்த்திகை: தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் எப்படி சிறந்ததோ, அதே போல் தை கார்த்திகையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். குழந்தை இல்லாதவர்கள், உயர் பதவி வேண்டுபவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த விரதத்தை இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து 6 கார்த்திகை விரதம் இருந்து முருகப் பெருமானிடம் என்ன கோரிக்கையை முன் வைத்தாலும் அதை அவர் உடனடியாக நிறைவேற்றி வைப்பார். புதிதாக கார்த்திகை விரதம் இருக்க துவங்குபவர்கள் ஆடி கார்த்திகையில் துவங்கி, தை கார்த்திகையில் நிறைவு செய்யலாம்.


பொதுவாக எந்த ஒரு விரதமும் அந்த திதி அல்லது நட்சத்திரம் துவங்கும் சமயத்தில் துவங்கி, அது முடியும் சமயத்தில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆனால் கார்த்திகை விரதம் இருப்பவர்கள் முந்தைய நாள் பரணி நட்சத்திரத்திலேயே விரதத்தை துவங்கி விட வேண்டும். இந்த ஆண்டு தை கிருத்திகை ஜனவரி 20ம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 05.36 மணி துவங்கி, ஜனவரி 21ம் தேதிகாலை 06.02 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. பரணி நட்சத்திர நாளில் பகல் பொழுதிற்கு பிறகு உணவு எடுத்துக் கொள்ள கூடாது. கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்.




சண்முக கவசம் பாடுங்கள்: வீட்டில் உள்ள முருகன் விக்ரஹம் அல்லது படத்தை எடுத்து சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். கார்த்திகை நட்சத்திரத்தன்று சண்முக கவசம் பாடி, சண்முக அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். தை கார்த்திகை அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் 6 அர்ச்சகர்கள், 6 வகையான மலர்களால், 6 வகையான மந்திரங்களைச் சொல்லி, 6 வகையான நைவேத்தியம் படைத்து பூஜை செய்வார்கள். இதற்கு சண்முக அர்ச்சனை என்று பெயர். 6 வகையான நைவேத்தியம், 6 வகையான மலர்கள் படைக்க முடியாதவர்கள். எளிமையாக சர்க்கரை பொங்கல் மட்டும் செய்து முருகனுக்கு படைத்து வழிபடலாம்.


முடிந்தவர்கள் முழுவதுமாக உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் சைவ உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். கார்த்திகை விரத வழிபாட்டினை மாலை 6 மணிக்கு பிறகு தான் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, முருகனுக்குரி மந்திரங்களை சொல்லி, உங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை முருகனிடம் சொல்லி முறையிட்டால் அது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். 


பாவங்கள் நீங்கி விடும்: முருகனுக்குரிய மந்திரங்களைச் சொல்லி 10 தலைமுறை பாவங்கள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். நம்முடைய கர்ம வினைகள் நீங்கினாலே நமக்கு நடக்க வேண்டிய நன்மைகள் விரைவில் நடைபெறும்.




தை கிருத்திகையில் சொல்ல வேண்டிய முருக மந்திரங்கள் :


"ஓம் செளம் சரவணபவ

ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம்

செளம் நமஹ" 


இந்த மந்திரத்தை தைக்கிருத்திகை அன்று 36 முறத சொல்லி, உங்களின் வேண்டுதலை முருகனிடம் சொல்லி முறையிடலாம்.


"ஓம் ஐம் ரீம் வேல் காக்க"


என்ற கவச மந்திரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கு ஏதாவது ஒரு நேரத்தில் 108 முறை சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை எந்த இடத்தில் இருந்தும் சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்வதற்கு எந்த தீட்டும் கணக்கு கிடையாது. பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த கவச மந்திரத்தை சொல்லும் போது இடையில் எழுந்து சொல்லக் கூடாது. தரையில் அமர்ந்து சொல்பவர்கள் கண்டிப்பாக ஒரு விரிப்பு விரித்து, அதன் மீது அமர்ந்தே சொல்ல வேண்டும். இந்த மந்திரங்களை சொல்ல முடியாதவர்கள் எளிமையாக "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரித்தாலே போதும்.

சமீபத்திய செய்திகள்

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்