மும்பை: மும்பையில் உள்ள அடல் சேது கடல் பாலம் தற்கொலை பாயின்ட்டாக மாறி வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு என்ஜீனியர் காரை நிறுத்தி விட்டு கடலில் குதித்துத் தற்கொலை செய்த நிலையில் நேற்று ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நல்லவேளையாக அவரை டாக்சி டிரைவர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றி விட்டார்.
மும்பையில் உள்ள பிரமாண்ட கடல் பாலம்தான் அடல் சேது பாலம். மும்பை நகரையும், அதன் புறநகரான நவி மும்பை நகரையும் இணைக்கும் கடல் பாலம் இது. இந்தியாவிலேயே மிக நீளமான கடல் பாலம் இதுதான். உலகின் 12வது நீளமான கடல் பாலமும் கூட. கிட்டத்தட்ட 21.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 6 வழி கடல் பாலம் இது. தெற்கு மும்பையில் உள்ள சேவ்ரி பகுதியில் தொடங்கி, நவி மும்பையில் உள்ள நவ சேவா பகுதி வரை நீள்கிறது இப்பாலம். கிட்டத்தட்ட ரூ. 18,000 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த ஜனவரி மாதம்தான் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்பாலம் சமீப காலமாக சூசைட் பாயின்ட் போல மாறி வருகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் சீனிவாஸ் என்ற என்ஜீனியர் தனது காரை நிறுத்தி விட்டு அப்படியே கடலுக்குள் குதித்து விட்டார். இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவருக்கு வயது வெறும் 38தான். இந்த வயதில் உயிரை மாய்க்கத் துணிந்த அவரது செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் நேற்று ஒரு 56 வயதுப் பெண்மணி தற்கொலைக்கு முயன்றது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஆனால் அவரை ஒரு டாக்சி டிரைவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றி மீட்டு விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் ரீமா முகேஷ் படேல் என்றும், முலுந்த் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
சம்பவ நேரத்தின்போது அப்பெண் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்தபடி இருந்துள்ளார். அதைப் பார்த்த டாக்சி டிரைவர் அவரை நோக்கி விரைந்து வந்தார். என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தபோது அப்பெண் தனது கையில் வைத்திருந்த எதையோ தூக்கி கடலில் போட்டு விட்டு அப்படியே கடலில் விழ முயற்சித்தார். இதைப் பார்த்த டிரைவர் டக்கென அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து விட்டார். இதனால் அப்பெண் கடலில் விழாமல் காப்பாற்றப்பட்டார். சம்பவ இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து வந்து அவர்களும் டிரைவருமாக சேர்ந்து அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். கிட்டத்தட்ட 2 நிமிடம் போராடி, போலீஸார் அப்பெண்ணைக் காப்பாற்றினர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கர் கூறுகையில், உங்களது உயிர் என்பது இயற்கை தந்த கொடை. அதை தயவு செய்து வீணடித்து விடாதீர்கள். உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் சிறந்ததை மட்டுமே பரிசாக கொடுங்கள், துயரத்தைக் கொடுத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
கைப்பிடிச் சுவரில் Fence அமைக்க வேண்டும்
மும்பை அடல் சேது பாலத்தில் பாதுகாப்பு மிக மிக குறைவாக இருப்பதாக ஒரு கருத்து தற்போது எழுந்துள்ளது. அதாவது பாலம் நெடுகிலும் உள்ள கைப்பிடிச் சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனால்தான் டக்கென அதில் ஏறி கடலில் குதித்து விடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சீனிவாஸ் சம்பவத்தில் அவர் மிக எளிதாக பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறி குதித்ததைக் காண முடிந்தது.
இது மிக மிக அபாயகரமானது. இப்படி குட்டையான கைப்பிடிச் சுவர் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஈஸியாக ஏறி விட முடியும். தற்போது காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு 56 வயதாகிறது. அவராலேயே எளிதாக ஏற முடிகிறது என்றால் சுவரின் பாதுகாப்பு எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். எனவே பாலத்தின் கைப்பிடிச் சுவரின் உயரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். கைப்பிடிச் சுவருக்கு இடையே பெரிய அளவில் இடைவெளி உள்ளது. அதையும் சரி செய்ய வேண்டும். மேலும் சுவர் நெடுகிலும் இரும்புக் கம்பியால் Fence அமைக்க வேண்டும். இதைச் செய்தால்தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும் அல்லது தடுக்கப்படும்.
தற்கொலை தீர்வல்ல
ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இயற்கைக் கொடுத்த எதையும் இயற்கைதான் எடுத்துக் கொள்ள முடியுமே தவிர நாமாக அதை முடித்துக் கொள்ள நினைப்பது நியாயமே அல்ல. அதை விட முக்கியமாக, உயிரை விடுவதன் மூலம் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கவும் முடியாது, தீர்க்கவும் முடியாது. கோபத்திலும், ஆத்திரத்திலும் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அந்த நேரத்தில் எடுக்கப்படும் எல்லா முடிவுமே தவறாகத்தான் போகும்.
வாழ்க்கை அழகானது.. வாழ வேண்டும்.. வாழ்க்கையில் போராட்டங்கள், கஷ்டங்கள், சிரமங்கள், ஏமாற்றங்கள் வரத்தான் செய்யும்.. அதை சந்திக்க வேண்டும், சமாளிக்க வேண்டும்.. அதையும் தாண்டி வாழ வேண்டும்.. தற்கொலை என்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, நம்முடைய அன்புக்குரியவர்களை காலாகாலத்திற்கும் அது வேதனைக்குள்ளாக்கி விடும். அதுபோன்ற முடிவுகளை தயவு செய்து தவிருங்கள். மன உளைச்சலோ, வேதனையோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் யாருடனாவது மனம் விட்டுப் பேசங்கள், பிரச்சினையைத் தீர்க்கும் வழி குறித்து யோசியுங்கள்.. நிச்சயம் வழி கிடைக்கும். அழகான வாழ்க்கை.. கஷ்டப்பட்டாவது வாழ்ந்துதான் பார்ப்போமே!
தற்கொலை தடுப்பு தொடர்பான ஆலோசனைக்கு:
தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}