சென்னை: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீர் திறக்க மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
டெல்லியில் கடந்த ஜூன் 25ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.
கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிறகு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழ்நாட்டிற்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், நீர் திறந்து விடுவதற்கான கர்நாடக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின்னர், கடந்த 11ஆம் தேதி, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.
ஆனால், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழ்நாட்டிற்கு 1 டிஎம்சி நீரை திறந்து விடுவதில்லை என சித்தாரமையா அறிவித்தார். மேலும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது.
நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ஆம்தேதி முதல் தற்போது வரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது ஆணவப்போக்கு; கண்டனத்துக்குரியது.
வறட்சி காலம், மற்றும் மழைக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே இவ்விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு தலையிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டிற்கு நீரைத் திறக்க கர்நாடக மாநிலத்திற்கு அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து கன்னட இனவெறி போக்குடனும், தமிழர் விரோதப் போக்குடனும் செயல்பட்டு வரும் கர்நாட அரசின் நடவடிக்கை இறையாண்மைக்கு எதிரானது.
எனவே, காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}