சென்னை : தமிழர்களின் புத்தாண்டாக சித்திரை முதல் நாளை ஆண்டுதோறும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். தமிழர்களின் நாட்காட்டி, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியில் 30 நாட்கள் பயணம் செய்வார். அவர் எந்த ராசிக்கு செய்கிறாரோ, அதன் அடிப்படையில் பெயர்கள் சூட்டப்படும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தை சூரிய பகவான் துவங்கும் நாளையே சித்திரை முதல் நாளாகவும், தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடுகிறோம்.
சித்திரை முதல் நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக புராண கதைகள் சொல்கின்றன. அதனால் இந்த நாளில் புதிய தொழில்கள், சுப காரியங்கள் ஆகியவற்றை துவங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 60 ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டுகளில் 37 வது ஆண்டான சோபகிருது ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதியுடன் நிறைவடைந்து, ஏப்ரல் 14ம் தேதி 38வது ஆண்டான குரோதி ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இரவு 9 மணிக்கே தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் பிறந்துள்ளது. அது மட்டுமின்றி, தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய வளர்பிறை சஷ்டியும், பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் இந்த நாளில் இணைந்து வருகிறது. மேஷ ராசியில் சூரிய பகவானும், குரு பகவானும் இணையும் அரிய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் இந்த ஆண்டு மிகவும் அரிதான தமிழ் புத்தாண்டாக கருதப்படுகிறது.
தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவு பூஜை அறையில் பழ வகைகள், நகை, பணம், நவ தானியங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து, தமிழ் புத்தாண்டு அன்று காலையில் எழுந்ததும் அந்த கனி வகைகளில் கண் விழிப்பதை கனி காணுதல் என்கின்றனர். தமிழ் புத்தாண்டு ஆண்டு அன்று கனி காண்பதால் அந்த ஆண்ட முழுவதும் செல்வ செழிப்பு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். தமிழ் புத்தாண்டு அன்று காலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பானது. இந்த நாளில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
அன்றைய நாளில் பகல் வேளையில் இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய அறுசுவைகள் நிறைந்த உணவை சமைத்து உண்பது வழக்கம். வாழ்க்கையில் வரும் ஆறு வகையான சவால்களை சமமாக கருதி, அவற்றை கையாண்டு, கடந்து சென்றால் மட்டுமே வெற்றியை பெற முடியும் வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பதற்காகவே புத்தாண்டு அன்று அறுசுவை படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
{{comments.comment}}