தமிழ்நாட்டில்.. இன்று முதல் வெப்ப அலை வீசும்.. கவனமா இருங்க மக்களே.. நீங்க செய்ய வேண்டியது இதுதான்!

Apr 16, 2024,08:54 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்ப அலை வீச்சு இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில், இந்த வார இறுதியில் வெப்ப நிலை அளவானது 40 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக காவிரி டெல்டா மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச்சு அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களில் இது 42 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதீதமாக இருக்கும். ஏற்கனவே தமிழ்நாட்டில் வெயில் உக்கிரமாகத்தான் இருக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டித்தான் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. இந்த நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த வெப்ப அலை மீண்டும் வருவது மக்களை அயர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதற்கிடையே, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரியின் சில பகுதிகள், ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்கலில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


வெப்ப நிலை உயரும்


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்கு மாவட்டங்களில் மீண்டும் வெப்ப நிலை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவது ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை வெப்ப நிலை மீண்டும் தொடவுள்ளது. சென்னையிலும் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் இந்த வார இறுதிக்குள் வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  40 டிகிரி செல்சியஸ் என்பது 104 டிகிரி பாரன்ஹீட்டாகும்.


சென்னையைப் பொறுத்தவரை எல்லாப் பகுதிகளிலும் ஒரே அளவில் வெப்ப நிலை இருக்காது. கடலோரப் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்கும். அதுவே உட்புறப் பகுதிகளில் 36 டிகிரியாக பதிவாக வாய்ப்புள்ளது. வடக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள், பிறகு, திருவண்ணாமலை, விழுப்புரம், காவிரி டெல்டா, கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


சரி அது என்ன வெப்ப அலை?




தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெப்ப அலை என்றால் என்ன, அப்படி வரும்போது என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது இணையதளப் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளது. அதைப் படித்து இதைப் பற்றிப் புரிந்து கொண்டு ஆயத்த நிலையில் இருக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம்.


வெப்ப அலை என்பது இயல்பு வெப்ப நிலையை விட கூடுதலாக  3 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வு தொடர்ச்சியாக 3 தினங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதை குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.


வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்புகள் நேராத வண்ணம் தடுக்கும் பொருட்டு உரிய காலத்திற்குள் முன்னறிவிப்பு / எச்சரிக்கை செய்ய வெப்ப அலை முன்னறிவிப்பு கருவிகள் வடிவமைக்கப்பட்டு நடப்பில் உள்ளன. சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் மலைப் பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் வெப்பலை உயர்வு ஏற்படும் பொழுதும் வெப்ப அலை தாக்க எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படுகிறது. 


தமிழகமானது இந்திய தீபகற்பத்தின் பேரிடர் பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிக்குள் அமைந்துள்ளது. இங்கு வானிலை மற்றும் புவியியல் சார்ந்த பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி மற்றும் வறட்சி போன்றவை அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. சமீபகாலமாக வெப்பநிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.


யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும்?


- குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்

- கட்டுமான பணி / வெளிப்புற பணி / விவசாய பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.

- காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்

- அதிக வெப்ப நிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலை பணியாளர்கள்

- பாதையோர வியாபாரிகள் / விற்பனை பணியாளர்கள்

- ரிக்ஷா ஓட்டுநர்கள் / ஆட்டோ ஓட்டுநர்கள் / பேருந்து ஓட்டுநர்கள் / சுற்றுலா வண்டி ஓட்டுநர்கள்

- கூலித்தொழிலாளர்கள் / குடிசை வாசிகள் / பிச்சைக்காரர்கள் / வீடில்லா நாடோடிகள்

- நாட்பட்ட வியாதியஸ்தர்கள்

- போதை மீட்பு சிகிச்சை பெறுபவர்கள்

- சாராயம் மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்கள்


எப்படி இதிலிருந்து தப்பிக்கலாம்?




ரொம்ப சிம்பிள். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். நா வறட்சி ஏற்படாது. 


வீட்டிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ எங்கு இருந்தாலும் சரி, நல்ல காற்றோட்டம்  இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிக அளவில் வியர்த்து உடல் வறள்வதைத் தவிர்க்க முடியும்.


உப்பு-சர்க்கரை கரைசல் திரவம்  இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. உடல் வறட்சி ஏற்படுவது போல தோன்றினால் அல்லது மயக்கம் வருவது போல தோன்றினால் இதை குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க முடியும். 


வெயில் காலம் என்பதால் அதீதமாக உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஓரளவுக்கு உடலை வருத்தினால் போதுமானது.  தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும் போங்க. அப்படிப் போகும்போது கையில் குடையோ அல்லது தொப்பியோ ஏதாவது எடுத்துச் செல்வது நல்லது. தலையில் நேரடியாக வெயில் தாக்குவதைத் தவிர்க்கலாம்.


வெயில் காலத்தில் குழந்தைகள், வயதானவர்களுக்குத்தான் அதிக அளவிலான கவனம் செலுத்தப்பட வேண்டும். குழந்தைகள் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள்தான், அவ்வப்போது தண்ணீர் குடிக்கச் சொல்லி, அதிகமாக வெளியில் அலையாமல், விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதாங்க!


- தாகம் இல்லாவிடினும் அவ்வப்பொழுது குடிநீர் அருந்தவும்.

- லேசான, தளர்வான மற்றும் வெளிர்நிற பருத்தி ஆடைகளை அணியவும்.

- வெளியில் செல்லும் போது வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி, குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்தவும்.

- வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும்.

- வெளிப்புற சூழலில் பணிபுரிபவராக இருப்பின் தொப்பி மற்றும் குடை பயன்படுத்தவும். மேலும், ஈரமான துணியைப் பயன்படுத்தி தலை, கழுத்து, மூட்டு மற்றும் முகம் போன்ற பகுதிகளை மூடி வைக்கவும்.

- கோடைக்காலங்களில் உடலில் ஏற்படக் கூடிய நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு-சர்க்கரை கரைசல், இளநீர், வீட்டுமுறைப் பானங்களான லஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை சாறு, மோர் போன்ற பானங்களை பருகவும்.

- வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளான வெப்பத்தாக்கம், கட்டி, தசைப்பிடிப்பு போன்றவற்றை உடன் கண்டறிந்து தேவையான முதலுதவி சிகிச்சை பெறல். தேவைப்படின் மருத்துவரின் உதவியை கோருதல்.

- சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சர் நிறமாகவோ கழிப்பது என்பது உடலில் நீர் சத்து குறைவதை குறிக்கும். எனவே, தேவையான முதலுதவி சிகிச்சை பெறுதல் அவசியம்.

- விலங்குகளை நிழல் தரும் கூடங்களில் தங்கவும், தேவையான அளவு குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும்.

- வீடுகளை குளுமையாக வைத்துக் கொள்ள ஏதுவாக ஜன்னல், விதானங்கள் ஆகியவற்றை இரவு நேரங்களில் திறந்து வைத்தல் அவசியம்.

- உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள மின்விசிறி, ஈரமான துணி பயன்படுத்துதல், குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்தி குளியல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

- பணிபுரியும் இடங்களில் பருக குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்.

- பகல் நேரங்களில் சூரிய ஒளி நேரடியாக படும் வண்ணம் பணிகள் மேற்கொள்ளுவதை தவிர்க்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தவும்.

- கடுமையான பணிகளை மாலை / இரவு நேரங்களில் மேற்கொள்ளவும்.

- வெளிப்புற சூழலில் பணிபுரியும் பொழுது அடிக்கடி ஓய்வு எடுக்கவும், ஓய்வு நேரத்தை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவும். கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் உடல்நலக் குறைவுற்ற பணியாளர்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும்.


வெப்பத்தாக்கத்தின் போது என்ன செய்யக் கூடாது?




- நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.

- பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

- பகல் நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்கவும்.

- வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் உணவு சமைப்பதை தவிர்க்கவும். மேலும், சமையல் செய்யும் பொழுது காற்றோட்டம் நன்கு அமையும் வண்ணம் கதவுகளை திறந்து வைக்கவும்.

- தேநீர், காபி மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்பதால் மேற்படி பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

- புரதச்சத்துள்ள மற்றும் நொறுக்குத் தீணிகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.


முதலுதவி சிகிச்சை முறைகள்


வெப்பத்தாக்கத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக சில முதலுதவிகளைச் செய்ய வேண்டும்.. அதையும் தெரிஞ்சு வச்சுக்கங்க


- பாதிக்கப்பட்டவரை சமமான இடத்தில் தரையில் படுக்க வைக்கவும்.

- அவரது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து, முடியும் பட்சத்தில் நிழலான / குளிர்ச்சியான இடத்திற்கு கொண்டு செல்லவும்.

- குளிர்ச்சியான பொருட்களை அவர் மீது படும்படி வைத்து ஒத்தடம் தரவும். இதன் மூலம் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

- குளிர்ச்சியான நீரை அவர் மீது தெளித்தும், ஈரமான துணியால் சுற்றியும், மின்விசிறியின் கீழ் அவரை கிடத்தியும் அவரது உடல் வெப்ப நிலையை குறைக்க இயலும்.

- மயக்கம் தெளியும் பட்சத்தில் திரவ உணவுகளை வழங்கலாம்.

- தயவு செய்து ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க வேண்டாம்.


முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருந்தாலே வெப்ப அலைத் தாக்கத்திலிருந்து ஈஸியாக கடந்து செல்லலாம். So, stay easy, take necessary precautions and enjoy the summer!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்