சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இதையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தவர்களையே குற்றவாளிகளாக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் சிபிஐ விசாரணை கோரியிருந்தார். அதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலிட மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில் மேல்நிலை நிறுத்தக்க நீரில் மலக் கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வெள்ளானூர் காவல் நிலைய CR No 239/2022ல் 26.12.2022ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் தீவிரத்தையும் சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.1.2023 அன்று தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றினார். அதை தொடர்ந்து கூடுதல் காவல் துறை இயக்குனர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அவர்கள் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து புதுக்கோட்டை குற்ற எண் 0120இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத் தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கை வயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன
- சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 2.10.2022 அன்று வேங்கை வயலில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபை கூட்டத்தின் போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் முரளி ராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாக திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளி ராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது காவல்துறையின் விசாரணை மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.
- மேலும் இச்சம்பவத்தில் முரளி ராஜா, சுதர்சன், முத்தையா, ஆர்.முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடையவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் இந்த சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும் உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் இச்சம்பவத்தில் அவர்களுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
- இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள் செல்போன் உரையாடல்கள் வீடியோ ஆதாரங்கள் தடையவியல் அறிக்கை மருத்துவ அறிக்கைகள் புலனாய்வு அதிகாரையால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள் தமிழ்நாடு மின்வாரியத்தின் அறிக்கை வல்லுனர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில் புலன்விசாரணை முடிக்கப்பட்டு முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது 20.1.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}