சென்னை: எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாளான இன்று அவரது படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பிற கட்சியினரும் எம்ஜிஆருக்கு புகழாஞ்சலி செலுத்தினர்.
ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் ஆகும். அதன்படி இன்று எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் என்பதால் அவரது சிலைகளுக்கும், படத்துக்கும் அதிமுகவினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த செய்தியில், எம்ஜிஆர் அவர்கள் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் எம்ஜிஆருக்குப் புகழாரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர்.
சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில், ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் என கூறியிருந்தார்.
நடிகர் - அரசியல்வாதி - மக்கள் திலகம்
நாடக நடிகராக, சினிமா நடிகராக, பின்னர் அரசியல்வாதியாக, அரசியல் தலைவராக, மக்கள் திலகமாக, பொன்மனச் செம்மலாக மக்கல் மனதில் உயர்ந்து நிற்பவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்ட எம்ஜிஆர், இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று கோபாலன் மேனன் – சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார். சிறு வயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். 1936ம் ஆண்டு சதி லீலாவதி என்னும் திரைப் படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.
கலைஞர் கருணாநிதி 1950ம் ஆண்டு திரைக் கதை வசனம் எழுதிய மருத நாட்டு இளவரசி மற்றும் மந்திரி குமாரி திரைப் படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்ஜிஆர் நடித்த சிறந்த திரைப் படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழக அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள், எம்ஜிஆரை இதயக்கனி என்று அழைத்தார். நாளடைவில் அனைத்து தரப்பு மக்களாலும் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953ம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தாம் நடித்த திரைப் படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.1962ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1977ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதல்வர் பதவியை வகித்து பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.
அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988ம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், அன்னாரைப் பெருமைப்படுத்து கின்ற வகையில், கலைஞர் கருணாநிதி 1990ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். கருணாநிதி அவர்களால் சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரது திருவுருவச் சிலையினையும் 1998ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி அன்று திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.
எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல
மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!
சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக
Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!
{{comments.comment}}