பார்படாஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பரபரப்பான கடைசி ஓவரில் இந்தியா அபாரமாக ஆடி கோப்பையை வென்று அசத்தி விட்டது. 6 பந்துகளில் 16 ரன்கள் என்ற இலக்கில் இருந்த தென் ஆப்பிரிக்காவை, இந்தியாவின் ஹர்டிக் பாண்ட்யா பிரமாதமான பந்து வீச்சால் வீழ்த்தி இந்தியாவுக்கு 2வது டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்து விட்டார்.
தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் கூட பின்னர் சுதாரித்து ஆடி பிரஷரிலிருந்து அழகாக வெளி வந்து விட்டனர். குவின்டன் டி காக் பொறுப்புடன் ஆடினார். அவருக்குப் பின்னர் ஹென்ரிச் கிளாஸசன் பிரித்து மேய ஆரம்பித்து விட்டார். அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்த அவர் அரை சதம் போட்டு இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.
கடைசி ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய விதம், இந்திய ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது. ஆனால் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் டைட்டானதால் தென் ஆப்பிரிக்காவின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக கடைசி ஓவரில் ஹர்டிக் பாண்ட்யா பிரமாதப்படுத்தி விட்டார். முதல் பந்திலேயே அபாயகரமான டேவிட் மில்லரை வீழ்த்தி அசத்தி விட்டார் பாண்ட்யா. 2வது பந்தில் ரபாடா பவுண்டரி விளாசினார். 3வது பந்தில் ரபாடா சிங்கிள் எடுக்க, வெற்றி இலக்கு 3 பந்துகளில் 11 என்று மாறியது. 4வது பந்தில் ஒரு ரன் வந்தது. அடுத்த பந்து வைடு ஆனது. 5வது பந்தில் ரபாடா அவுட்டானதால் இந்தியாவுக்கு கோப்பை உறுதியானது.
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையை கை நழுவ விட்டது. தான் தகுதி பெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதேசமயம், இந்தியா தனது 2வது டி20 உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு தனது 2வது கோப்பையை வென்று அசத்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்தும், கோலியும் இறங்கினர். இதில் துரதிர்ஷ்டவசமாக கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையிலும், ரிஷாப் பந்த் டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த சூர்ய குமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் கேசவ் மஹராஜ் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், ரபடா ஒரு விக்கெட் எடுத்தார்.
விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அவருக்கு அக்ஷார் படேல் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இருவரும் இணைந்து அடித்து ஆடி வந்த நிலையில், 47 ரன்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ஓடி வந்து ஆட்டமிழந்தார் அக்ஷார் படேல். அதன் பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 27 ரன்களையும், ஹர்டிக் பான்ட்யா ஆட்டமிழக்காமல் 5 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.
ஒரே ஆண்டில் 3வது இறுதிப் போட்டி
கடந்த ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக 3வது முறையாக ஐசிசி இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடிய இந்தியா அதில் 3வது முயற்சியில் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2 முறையும் கோப்பையை நழுவ விட்டு விட்டது. ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நாம் ஸ்மார்ட்டாக விளையாட வேண்டும். பிட்ச் சாதகமாக இருக்கும். எனவே நம்பிக்கையோடும், புத்திசாலித்தனமாகவும் விளையாடினால் நிச்சயம் கோப்பை நமக்கே என்பது டிராவிடின் கருத்தாகும். அவர் சொன்னதே பலித்தது. இந்தியா கடைசி ஓவர்களில் படு புத்திசாலித்தனமாக பந்து வீசியதால் வெற்றி சாத்தியமானது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தனது ஆளுமையை முதல் போட்டியிலிருந்தே வெளிப்படுத்தி வந்தது. தொடர்ச்சியாக நல்ல கிரிக்கெட்டை அது கொடுத்து வந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்தியா, இறுதிப் போட்டியில் வந்து தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது. இந்த முறை அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்ற வேண்டுதலில் ரசிகர்கள் இருந்தனர். கடைசி வரை பதைபதைப்புடன் போன போட்டி இறுதியில் கோப்பையை நமக்கு கொண்டு வந்து விட்டது.
2013ம் ஆண்டு இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பிறகு சர்வதேச கோப்பை எதையும் இதுவரை வெல்ல முடியாமல் உள்ளது இந்தியா. அந்த வறட்சியை இன்று ரோஹித் சர்மா தலைமையிலான டீம் போக்கி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.
கோப்பையுடன் விடை பெற்ற ராகுல் டிராவிட்:
இந்த வெற்றியின் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை உலகக் கோப்பையுடன் முடிக்கிறார் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்திய அணியில் வீரராக பல சாதனைகளைப் படைத்துள்ள ராகுல் டிராவிட் தற்போது சிறப்பான பயிற்சியாளராகவும் முத்திரை பதித்து விடை பெறுவது அவருக்கு மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது.
முன்னதாக இன்றைய போட்டி குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், நாம் தொடர்ச்சியாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். கடந்த ஒரு வருடத்தில் 3 விதமான (டெஸ்ட் உலக கோப்பை இறுதிப் போட்டி, ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் தற்போது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி) ஐசிசி உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் நாம் தகுதி பெற்றுள்ளோம். நாம் சிறப்பாக விளையாடினால், அதிர்ஷ்டமும் உடன் இருந்தால் நிச்சயம் நாம் கோப்பையை வெல்ல முடியும். நமது அணி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளது. நல்ல ஓய்வு கிடைத்துள்ளது. எனவே இறுதிப் போட்டிக்கு சிறப்பான முறையில் நாம் தயாராகியுள்ளோம் என்றார் ராகுல் டிராவிட்.
இந்தியா இதுவரை விளையாடிய ஐசிசி இறுதிப் போட்டிகள் விவரம்:
1983- ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை (முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்றது)
2000 - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (நியூசிலாந்திடம் தோல்வி)
2002- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ( போட்டி டை ஆனது)
2003 - ஒரு நாள் உலகக் கோப்பை (ஆஸ்திரேலியாவிடம் தோல்வி)
2007- டி20 உலகக் கோப்பை (பாகிஸ்தானை வென்று சாம்பியன்)
2011 - ஒரு நாள் உலகக் கோப்பை (இலங்கையை வென்று சாம்பியன்)
2013 - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (இங்கிலாந்தை வென்று சாம்பியன்)
2014 - டி20 உலகக் கோப்பை (இலங்கையிடம் தோல்வி)
2017 - ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (பாகிஸ்தானிடம் தோல்வி)
2021 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (நியூசிலாந்திடம் தோல்வி)
2023 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ஆஸ்திரேலியாவிடம் தோல்வி)
2023 - ஒரு நாள் உலகக் கோப்பை (ஆஸ்திரேலியாவிடம் தோல்வி)
2024- டி 20 உலகக் கோப்பை (தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா)
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
{{comments.comment}}