சுருட்டு தாத்தா (சிறுகதை)

Dec 15, 2024,10:03 AM IST

- கவிதாயினி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை. சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது.  சினிமா துவங்கும் முன் சிகரெட், பீடி, முறுக்கு, கடலை உருண்டை என  நல்ல வியாபாரம். சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின்  முதலாளி சுருட்டு தாத்தா.  ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர். 


ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி.  தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம்  சிலரிடம். ஓய்வு  நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார்.  பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.


"தாத்தா ... தாத்தா  ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்."


 "இந்தா பேராண்டி எடுத்துக்கோ. " அன்போடு  கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.




"என்ன தாத்தா  . எப்படி இருக்கீங்க? .ஒரு சொக்கலால் பிடி கட்டு."


ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம்  எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ? ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி.  உரிமையோடு கூறுவார். 


சரிங்க அய்யா.  வேலை இல்லையினா,  இந்த பக்கம்  தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம். . வரேன் அய்யா."


"போய் வா தம்பி."


"தாத்தா ... தாத்தா...  எங்க அம்மா... கம்பெனியிலிருந்து  வர லேட் ஆகும் . நாளைக்கு ...நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க,  கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்."


"அதுக்கு என்ன பேராண்டி... எடுத்துட்டு போ .உனக்கு இல்லாததா.!!"


மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா. 


"அய்யா இரண்டு   "கோல்டு பிளேக் " சிகரெட் பாக்கெட்."


தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட். முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து  விட்டு, கீழே குனிந்து கொண்டார்.


சிறிது நேரம் கழித்து ... "பழைய பாக்கி என்ன ஆச்சு ." இது தாத்தாவின் கேள்வி. 


அசடு வழிந்தவன்... "அடுத்த வாரம் தந்துடறேன்" 


"இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ.  இப்போ நடையை  கட்டு... என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு  கிளம்பினான்.


"வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து  வாங்க  துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது. ஒரு வேலைக்கும் போகல. ஊரை  சுத்திகிட்டு சிகரெட் குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற.." தனக்குள் , ஆனால் அவனுக்கு கேட்கும் படி ,முணுமுணுத்துக் கொண்டார். 


சிறிது நேரம் கழித்து,  ஒரு சிறுவன் ஓடி வந்தான். தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க  தாத்தா.


தாத்தா அவனைப் பார்த்து விட்டு,  தண்ணி தாகமா  இல்ல  பசியா..? சும்மா சொல்லு.


அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான். 


தாத்தா நிலைமை  புரிந்து , ஒரு மாம்பழ  ஜூஸ் பாட்டிலும், ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.


அச்சிறுவன் வேண்டாம் தாத்தா... வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும். 


பரவாயில்ல பேராண்டி .சாப்பிடு நல்லா சாப்பிடு.  சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார். 


இட்டார் பெரியோர் . சிலருக்கு சில நேரங்களில், இடாதோரும் பெரியோரே!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்