கார்ட்டூம் : சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் முயற்சியால் சூடானில் சிக்கி இருந்த 500 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரம்ஜான் காரணமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் தொடர்ந்து ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் வெறித்தனமாக இருப்பதால் சூடான் போர்க்களமாகியுள்ளது.இதனால் உயிர் பயம் காரணமாக அந்நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். ராணுவம் - துணை ராணுவம் இடையேயான போரால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபடுவோர் அப்பாவி மக்கள் என்றும் பாராமல் மோசமான முறையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அங்கு சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு இந்தியர்கள் பெருமளவில் சிக்கித் தவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கி உள்ள 3500 இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஆப்பரேஷன் காவிரி என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 500 இந்தியர்கள் மீட்கப்பட்டு, சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இங்கிருந்து கப்பல் மூலம் அவர்கள் இந்தியா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மீதமுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
{{comments.comment}}