இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் ஜேவிபி தலைவர் அனுரா குமார திசநாயகே.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sep 22, 2024,04:33 PM IST

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெறத் தவறியதால், 2வது முன்னுரிமை  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் அனுரா வெற்றி பெற்றதாக  இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே 5வது இடத்தைப் பெற்றார். இவருக்கு வெறும்  2 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் 3 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 22 சதவீத வாக்குகளுடன் 2வது இடம் பெற்றார்.


இடதுசாரிகளின் கூட்டணி:




கடும்  நிதி நெருக்கடியிலும், கடன் தொல்லையிலும் மூழ்கியிருக்கும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக இடதுசாரி தலைவர் ஒருவர் வரவுள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் அனுரா. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, 3வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பாக அனுரா குமாரா போட்டியிட்டார். இடதுசாரிக் கூட்டணியான இதில் மார்க்சிஸ்ட் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா முக்கியக் கட்சியாக இடம் பெற்றுள்ளது. சிங்கள இனவாத கட்சியாக அறியப்படுவது ஜனதா விமுக்தி பெரமுனா என்பது நினைவிருக்கலாம். இவர்களின் வெற்றியானது, சீனாவை நோக்கி இலங்கையை மேலும் நெருக்கமாக எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்குப் பின்னடைவாக அமையலாம்.


தமிழர்களின் ஆதரவு அனுராவுக்கு இல்லை




இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுரா உருவெடுத்தாலும் கூட தமிழர்களால் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசாவுக்கு முதலிடமும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு 2வது இடமும் கிடைத்துள்ளன. அனுராவுக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.


இனப் போர் மூண்டிருந்த காலத்தில், சிங்கள இனவாதத்தை பிரதானமாக கொண்டு  ஜனதா விமுக்தி பெரமுனா செயல்பட்டதை தமிழர்கள் இன்னும் மறந்து விடவில்லை. குறிப்பாக தமிழர் விரோத கட்சியாகவே ஜனதா விமுக்தி பெரமுனாவை வரலாறு பதிவு செய்துள்ளது. இதை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை என்பதையே வடக்கு மற்றும் வட கிழக்கில் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகிறது. 


45 நாட்களில் நாடாளுமன்றம் கலைப்பு




55 வயதாகும் அனுரா திசநாயகே ஜனாதிபதி பதவியேற்றதும் 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அதிலும் இவரது கூட்டணி வெற்றி பெற்றால், இலங்கை முழுமையாக இடதுசாரி கூட்டணியின் வசம் போய் விடும்.


தற்போது நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 3 எம்.பிக்களே உள்ளனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்குக் கிடைத்துள்ள வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ரணிலுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்:




கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இலங்கை நாட்டின் பொருளாதாரம் திவாலானது. இதையடுத்து மக்கள் புரட்சி வெடித்தது. அதைத் தொடர்ந்து கோத்தபாய ஆட்சி அகன்றது, அவர் நாட்டை விட்டு ஓடி விட்டார். மிதவாத தலைவராக அறியப்படும் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால ஜனாதிபதி ஆனார். ஆனால் அவருக்கு இந்தத் தேர்தலில் 3வது இடமே கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 


ராஜபக்சே ஆரம்பத்தில் இந்தியாவுடன் இணக்கமாக இருந்தார். பின்னர் அவர் சீனாவுடன் மிகவும் வேகமாக நெருங்கினார். அதன் பின்னர்தான் மக்கள் புரட்சி வெடித்து ரணில் ஜனாதிபதி ஆனார். ரணில் எப்போதுமே இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர். ஆனால் ்அவரை இலங்கை மக்கள் 3வது இடத்திற்குத் தள்ளியுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்குமே கூட அதிர்ச்சியான ஒன்றுதான்.


சமீபத்தில்தான் இந்தியா ஆதரவு அரசு (ஷேக் ஹசீனா) வங்கதேசத்திலிருந்து அகற்றப்பட்டது. இப்போது இலங்கையிலும் அதுபோன்ற சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அண்டை நாடுகளில் இந்தியாவுக்கு விரோதமான அரசுகள் அமைந்து வருவதும் கவனிக்கத்தக்கதாகும்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்