சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஜனவரி மாததத்தில் நிறைவடைந்த நிலையில், சீசன் 7 விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். 2017 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் நிறைவடைந்து விட்டது. இந்த 6 சீசன்களையும் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் - ஜூலை மாதங்களில் தான் துவங்கப்படும். ஆனால் 2020 ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டு வந்தது.
இதன் படி பிக்பாஸ் சீசன் 6 இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்து 4 மாதங்களே ஆகும் நிலையில், சீசன் 7 வருகிற ஜூலை மாதமே துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளும், போட்டியாளர்கள் குறித்த தேர்வும் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த சீசனில் பிரபலம் அல்லாத சாமானியர் என்ற அடையாளத்துடன் தனலட்சுமி மற்றும் ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த சீசனில் சாமானியர் போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இந்த சீசனில் பல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பு, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடுத்த அதிரடிக்கு விஜய் டிவி தயாராகி வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர் ஒருவரை களமிறக்குவதை விஜய் டிவி வாடிக்கையாக வைத்துள்ளது. அப்படி இந்த சீசனில் களமிறங்க போகும் அந்த சர்ச்சை போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
இந்த சீசனிலாவது எச். ராஜாவை களம் இறக்கலாமே.. ரொம்ப நாளாக அவரைத்தான் எல்லோரும் விரும்பி கேட்டு வருகிறார்கள்.. சூடும் ஜாஸ்தியா இருக்கும்.. அனலும் அதிரடியாக இருக்கும்.. யோசிங்க பாஸ்!
{{comments.comment}}