டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இருக்க சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முடிவு செய்துள்ளதால், இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு 2 காரணங்கள் உள்ளன.
பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அது சிறுபான்மை பலத்துடன் கூடிய கட்சியாக மாறியுள்ளது. நேற்று வரை அசுர பலத்துடன் சிங்கம் போல நடை போட்டு வந்த பாஜக இப்போது சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்கள் மற்றும் நிதீஷ் குமாரின் 12 எம்.பிக்களை நம்பியிருக்க வேண்டிய பெரும் இக்கட்டான நிலை.
இந்த நிலையில் ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக இரு கட்சிகளும் கூறியுள்ளன. இதுதவிர கர்நாடகத்தில் மட்டும் உயிருடன் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி இந்தமுறை 2 தொகுதிகளில் வென்றுள்ளது. இப்போதைய நிலையில் எந்த கட்சியையும் விட்டு விட முடியாத இக்கட்டான நிலையில் பாஜக உள்ளதால் ஐக்கிய ஜனதாதளமும் முக்கியமான கட்சியாக மாறியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆதரவு தருவதற்கு நாயுடுவும், நிதீஷ் குமாரும் சில பல நிபந்தனைகளை விதித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முக்கிய துறைகளை இருவரும் கேட்டு வருகின்றனராம். அதேபோல இருவருமே லோக்சபா சபாநாயகர் பதவியை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாஜக விழி பிதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.அதேபோல ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் மத்திய அமைச்சர் பதவி தேவை என்று கேட்டுள்ளதாம். அதிலும் விவசாயத்துறை வேண்டும் என்று அது கேட்டுள்ளதாம்.
இப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி முகாமில் இப்படி நிலவரம் கலவரமாகி வருவதை இந்தியா கூட்டணிக் கட்சிகள் செம ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன. இது நாள் வரை யாரையெல்லாம் போட்டுப் பாடாய்ப் படுத்தியதோ, இப்போது அவர்களிடமே பாஜக சரண்டராகியுள்ளது இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு நாயுடு, நிதீஷ் குமார் வராமல் இருப்பதால் நமக்கு நல்லது என்றும் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கருதுகின்றனவாம். காரணம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட, இந்தியா கூட்டணியில்தான் மிகப் பெரிய அளவில் கட்சிகள் உள்ளன. ஒரு வேளை நாயுடுவும், நிதீஷும் இங்கு வந்தால் நிச்சயம் மிகப் பெரிய முக்கிய துறைகளைத்தான் கேட்பார்கள். அப்படிக் கேட்டால் கொடுத்துதான் ஆக வேண்டும். அப்படி அவர்களுக்கே அதையெல்லாம் கொடுத்து விட்டால் தங்களுக்கு சாதாரண துறையே கிடைக்கும் என்பதால் அதை சில கட்சிகள் விரும்பவில்லையாம்.
அப்படியானால் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமே.. பாஜக ஆட்சி தொடரும் நிலைமை ஏற்படுமே.. இது அவர்களுக்கு பாதகமாக இருக்காதா என்று கேட்கலாம்.. இந்தக் கேள்வி அவர்களுக்கும் கூட எழாமல் இருக்குமா என்ன.. நிச்சயம் எழும். அங்குதான் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
தென் மாநில இந்தியா கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை திமுகதான் மிகப் பெரிய கட்சி. அந்தக் கட்சிக்கும் நாயுடுவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது, நட்பு உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதுமே திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இருவரும் நல்ல நண்பர்களும் கூட, மறைந்த கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் சந்திரபாபு நாயுடு. அவருக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்புகளும் அனைவரும் அறிந்ததுதான். எனவே பாஜகவால் ஒரு பிரச்சினை திமுகவுக்கு வந்தால் அரண் மாதிரி வந்து நாயுடு காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது.
அதேபோல வட மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஏதாவது சிக்கல் வந்தால் அவர்களுக்கு நிச்சயம் நிதீஷ் குமார் கரம் கொடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. காரணம், லாலு பிரசாத் யாதவ் கட்சியோ, திரினமூல் காங்கிரஸோ யாராக இருந்தாலும் சரி, அனைவருக்குமே நிதீஷுடன் நல்ல உறவு உள்ளது. இப்படி வடக்கிலும், தெற்கிலும் தங்களுக்கு நட்பாக இந்த இரு தலைவர்களும் இருக்கும்போது பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட தங்களுக்கு சிக்கல் வராது என்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் நினைக்கின்றனவாம்.
எனவேதான் இப்போதைக்கு பாஜக ஆட்சியே தொடர்ந்தாலும் கூட தங்களுக்குக் கவலை இல்லை என்று அவை கருதுகின்றனாம்.. சூப்பர்ல!
{{comments.comment}}