- பொன் லட்சுமி
ஒரு மனிதன் உடல் ஆரோக்கியமாகவும் மன ஆரோக்கியமாகவும் வாழ தேவையானது முதலில் தூக்கம் தான்... சராசரியாக குறைந்தது 8 மணி நேரமாவது எந்த தொந்தரவும் இன்றி தூங்க வேண்டும்.. (பகல்ல கிடையாது.. ராத்திரில தூங்கணும்).. அப்படி தூங்கினால் மட்டுமே காலையில் எழுந்ததும் மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். ஆனால் இன்று எத்தனை பேர் சரியான நேரத்தில் தூங்குகிறார்கள் என்று தெரியவில்லை.. வேலைப்பளு, மண அழுத்தம் .. இது போதாது என்று சமூக வலைத்தளங்கள் நமது தூக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
தூக்கத்தை பாதிக்கும் வேலைப்பளு :-
இன்று இருக்கும் இயந்திர காலத்தில் இரவு பகல் என்று பாராமல் உழைத்தால் மட்டும் தான் குடும்பத்தை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.. ஆனால் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியமானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நமது உடலில் உள்ளுறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இன்று பலர் இரவு நேர வேலைக்கு செல்கின்றனர்.. பலர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர்.. லேட்டாக தூங்குகிறார்கள்.
குறிப்பாக ஓட்டுநர்கள் சாப்ட்வேர் கம்பெனியில் ஒர்க் பண்ணும் ஊழியர்கள் இரவு நேர வேலை செய்கின்றனர்.. நீண்ட நேரம் பணியாற்றுவதால், அவர்கள் தூங்குவதற்கு சரியான நேரம் கிடைக்காமல் பலவிதமான மன உளைச்சலுக்கும் உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் போனால் காலையிலாவது சில மணி நேரங்களாவது முடிந்தவரை தூங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்..
மன அழுத்தம் :-
இளம் வயது முதல், நடுத்தர வயதினர், பெரியவர்கள் வயதானவர்கள் வரை அனைவரும் மன அழுத்தத்தினால் மிகவும் பாதிப்படைகிறார்கள்.. அதற்கு காரணம் சரியான தூக்கமின்மையே ஆகும்.. இதனை சரிப்படுத்த முதலில் மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள் .. முடிந்து போன விஷயங்களையோ இல்லை நடக்கவிருக்கும் விஷயங்களையோ பற்றி அதிகமாக யோசித்து உங்கள் மனநிலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள்..
தியானங்கள் போன்றவற்றை முடிந்தளவு மேற்கொள்ளுங்கள்.. முடிந்த அளவு பகலில் தூங்குவதை தவிர்க்க பாருங்கள். வெயில் காலங்களில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு மிதமான தண்ணீரில் குளித்துவிட்டு தூங்க செல்லுங்கள்... இது ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கு நிச்சயம் வழிவகுக்கும்..
உணவு முறைகள்:-
இயற்கையாகவும் அதேசமயம் ஆரோக்கியமாகவும் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அதிகமாக நீர் அருந்துங்கள்... காலையில் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள் இன்று பலர் பள்ளி கல்லூரி செல்லும் போதும் வேலைக்கு செல்லும் போதும் அவசரக்கதியில் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள்.. நாளடைவில் இதுவே பழக்கமானால் இது அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்..
அதேபோல இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே உணவு சாப்பிட்டு விடுங்கள்... முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க செல்லுங்கள்.. குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஆவது தூங்க வேண்டும் அதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...
சமூக வலைத்தளங்கள் :-
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்... காலை தூங்கி முழித்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை இந்த சமூக வலைத்தளத்தில் பலரும் பொழுதை கழித்து விடுகிறார்கள்.... சிலர் தூங்கும் போது கூட போனை பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் தூங்குவார்கள். முடிந்தவரை ஸ்மார்ட் போனை படுக்கை அறைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் .
ஒரே வீட்டில் இருந்து கொண்டே சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. பலர் காலையில் விழித்து எழுந்ததும் முதலில் தலையணைக்கு அருகில் இருக்கும் மொபைலை எடுத்து வாட்ஸ் அப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள்.. அட டாய்லெட்டில் கூட அதாங்க பண்றாங்க. நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை உணர வேண்டிய நேரம் இது. மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துபவர்கள் தான் நாளடைவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்...
நம் அன்றாட வாழ்க்கையில் சூரிய உதயத்தின் போது எழுந்து உற்சாகமாக அனைத்து வேலைகளையும் செய்து முடித்து சூரியன் மறைந்த பின்பு இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்க சொல்வதுதான் இயற்கையோடு பிணைந்த இன்ப வாழ்வு... ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த வாழ்க்கை வாழ்கிறோம் என்று தெரியவில்லை.. எனவே இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழும் பழக்கத்திற்கு மாற முயற்சி பண்ணுவோம்... மனநலமும் உடல் நலமும் பெற்று ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்...
என்ன பாஸ் சொன்னது புரிஞ்சுதா.. ராத்திரி வந்துருச்சுன்னா ஸ்மார்ட் போனை தூக்கிப் போடுங்க.. சீக்கிரம் தூங்கப் போங்க.. காலையில் ஜில்லென்று உலா வரும் சூரினுக்கு ஹேப்பியாக ஹாய் சொல்லுங்க.. ஓகேவா!
{{comments.comment}}