சிங்கப்பூர்: ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழரான தங்கராஜு சுப்பையா என்ற 46 வயது நபருக்கு சிங்கப்பூர் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சர்வசே அளவில் அவருக்கு ஆதரவாக உரத்த குரல்கள் எழுந்தன. அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும், தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு நாடுகளிலிருந்தும் குரல்கள் தொடர்ந்து ஒலித்து வந்தன. இருப்பினும் அனைத்தையும் நிராகரித்த சிங்கப்பூர் அரசு, இன்று அவரை தூக்கிலிட்டு விட்டது.
தங்கராஜுவை தூக்கிலடக் கூடாது என்று பிரபல கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனும் கூட சிங்கப்பூர் அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை.
சங்கி சிறை வளாகத்தில் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டதாக சிங்கப்பூர் சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்குள் 1 கிலோ அளவிலான கஞ்சாவைக் கடத்தி வர துணை புரிந்தார் என்பதுதான் தங்கராஜு சுப்பையா மீதான புகாராகும். சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். இதனால் தங்கராஜுவுக்கும் 2018ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகுஅவர் தாக்கல் செய்த அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து அவருக்கு ஆதரவான போராட்டங்கள் தொடங்கின. சம்பவம் நடந்த இடத்தில் தங்கராஜு இல்லை. மேலும் அவர் கடத்தி வரவும் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அவரைக் குற்றவாளியாக்க முடியும் என்று பலரும் வாதிட்டனர். ஆனால் தங்கராஜு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு விளக்கம் அளித்தது. தங்கராஜுவுக்குச் சொந்தமான இரண்டு செல்போன்கள் இந்தக் கடத்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவரது தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது சிங்கப்பூர் அரசின் வாதமாகும்.
உலகின் பல பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலுக்கான தண்டனையை பெரிதாக யாரும் தருவதில்லை. தாய்லாந்திலும் முன்பு மரண தண்டனை இருந்தது. பின்னர் அதை குறைத்து விட்டனர். ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதை ஒழிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரி வருகின்றன.
மரண தண்டனை அமலில் இருந்தும் கூட, சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் சற்றும் குறையவில்லை. இதனால்தான் அந்த நாட்டு அரசு தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் உள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுதான் தங்கராஜு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளி ஆவார். கடந்த ஒரு வருடத்தில் தூக்கிலிடப்பட்டவர்களில் இவர் 12வது நபர் ஆவார்.
2வது தமிழர்
இதேபோல கடந்த ஆண்டு நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற தமிழர் தூக்கிலிடப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு இன்னும் அநியாயமானது, 2 டேபிள்ஸ்பூன் ஹெராயின் வைத்திருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர் சற்று மன நலம் சரியில்லாதவரும் கூட. இருப்பினும் ஹெராயின் வைத்திருந்தது குற்றம் என்று கூறி அவருக்கும் விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் கோர்ட்.
அவரது மன நலத்தைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆனாலும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்.
{{comments.comment}}