தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண்.. சீமான், வேல்முருகன் கண்டனம்

Dec 03, 2024,10:00 AM IST

சென்னை: தமிழர்களை அடிமைகள் என்று இழிவுபடுத்திப் பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண் என்பவருக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மேலும் தெலுங்கர்களை அவமானப்படுத்தி விட்டதாக தனிப்படையெல்லாம் அமைத்து நடிகை கஸ்தூரியைக் கைது செய்த தமிழ்நாடு அரசு, கர்நாடக நீதிபதி தமிழர்களை இழிவுபடுத்திப் பேசியது குறித்து எதிர்வினை நிகழ்த்தாமல் இருப்பது ஏன் என்றும் சீமான் கேட்டுள்ளார்.  இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது


தமிழர்கள் அடிமைகளா?  சீமான் ஆவேசம்!




கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று  பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த ராஜ்யோத்சவா விழாவில்  பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர், ஆனால் கன்னடர்கள் அப்படி இருக்கவில்லை, எனவும் பெங்களூருவில் தமிழர்கள் உள்ளிட்ட பிறமொழியினர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது எனவும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமே அடிமைப்பட்டிருந்தனர். தமிழர்கள் மட்டும் அடிமைப்பட்டு இருந்ததுபோல் நீதிபதி அருண் பேசியிருப்பது வேண்டுமென்றே தமிழர்களைச் சீண்டிப்பார்க்கும் சுடுசொல்லாகும்.


தமிழ் மக்களின் விடுதலை உணர்வானது மற்ற  மாநிலத்தவரின் உணர்வுக்கு சற்றும் சளைத்ததல்ல. இந்த நாட்டின் விடுதலைக்குப் போராடி உயிர் ஈகம் புரிந்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண் தமிழர் மண். பெங்களூரு, குடகு உள்ளிட்ட தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்துவரும் பல நிலப்பகுதிகளை மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பின்போது தமிழ்நாடு இழந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்களின் உழைப்பைச்சுரண்டி அவர்களின் குருதியில் பொன் விளைந்த நிலம் கோலார் பகுதியாகும். எனவே பூர்வகுடி தமிழர்களை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும், தமிழர்கள் ஆங்கிலேயருக்கு ஆயுட்கால அடிமைகளாக இருந்ததுபோலவும் நீதிபதி இந்திரகுமார் அருண் பேசி இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.


தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்?


கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு  தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? கர்நாடக நீதிபதி கூறிய கருத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாக கூறி, கொதித்தெழுந்து தனிப்படை அமைத்து சிறையிலடைத்த திமுக அரசு தமிழர்களை இழிவுப்படுத்திய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தமிழர்கள் என்றால் அமைதிகாப்போம், மற்ற இனத்தவர்களுக்காகத் துடிதுடிப்போம் என்றால் தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது யாருக்கான ஆட்சி என்பது இதிலிருந்தே  தெளிவாகிறது.


ஆகவே, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


வரலாறு தெரியாமல் பேசுவதா.. பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்


தமிழக வாழ்வுரிமைக் கட்சித்  தலைவர் பண்ருட்டி வேலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சாதி, மதம், இனம், மொழி என கடந்து நீதியை நிலை நாட்டக்கூடிய நீதிபதி ஒருவர் இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது; இது கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள், கன்னடர்கள் இடையேயான ஒற்றுமையை சிதைத்து, மோதலை உண்டாக்கக் கூடிய செயலாகும்.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழர்கள் மட்டுமின்றி,  இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமே அடிமைப்பட்டிருந்தனர். ஆனால், தமிழர்கள் மட்டும் அடிமைப்பட்டு இருந்ததுபோல் நீதிபதி அருண் பேசியிருப்பது இன வெறுப்பே தவிர வேறொன்றுமில்லை.


சோழர்களின் ஆளுகைக்கு முன்பே தற்போதைய பெங்களூரின் பூர்வ குடிகளாக தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை வரலாற்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சோழ மன்னன் ராஜராஜன், அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சிவ, வைணவ வழிபாட்டுத் தலங்கள், சோழர் கால ஆட்சியின் ஆவணங்களாக இன்று சான்றாக இருக்கின்றன.


பெங்களூரு, மைசூரு, கோலார், சிவமொக்கா, மண்டியா, சாமராஜ்நகர், தென் கன்னடம், பெல்லாரி, தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தாலும், 1956-ஆம் ஆண்டில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.


மைசூரு மகாராஜா ஆட்சிக் காலத்திலும், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்திலும் கன்னடமொழி, இலக்கியம், கலை, உள்கட்டமைப்பு, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்கு தமிழர்களின் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்ததாகும்.


கர்நாடகாவில் தமிழர்கள் வந்தேறிகளாக யாரும் குடியேறவில்லை. மாண்டியா, பெங்களூரு, குடகு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும்  நிலப்பகுதியே!


1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பின் போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் ஏராளம். குறிப்பாக,  தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களின் இரத்தத்தில் உருவானது கோலார் பகுதியாகும்.


இந்த வரலாற்றை அறிந்துக்கொள்ளாமல், பூர்வகுடி தமிழர்களை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும், தமிழர்கள் ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருப்பது போலவும், நீதிபதி இந்திரகுமார் அருண் பேசியிருப்பது திட்டமிட்டு தமிழர்களை இழிவுப்படுத்தும் செயலாகும்.


எனவே, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண், தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்விவகாரத்தில், தமிழ்நாடு அரசு மௌனம் காப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

news

தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்

news

ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்